
சீனாவில் இரண்டு ஆண்டுகால கல்வியியல் ஆய்வு மேற்கொண்டிருந்த அவர், பிரதீபா பாதில் அம்மையாரின் சீனப் பயணம் இருநாட்டுறவின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்காற்றும் என்று கருத்து தெரிவித்தார்.
"கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக சீனப் பயணம் மேற்கொள்ளும் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாதில் அம்மையார் தான். இந்திய-சீன உறவு புதிய வளர்ச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ளதை இது காட்டுகிறது என கருதுகின்றேன்" என்று ருக்மணி குப்தா அம்மையார் கூறினார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் பெரிய பண்பாட்டு வேற்றுமை நிலவுகிறது. ஆனால் உலகில் மிக முக்கியமான மிக பெரிய வளரும் நாடுகளான இருநாடுகளும் மேலதிக பரிமாற்றங்களின் மூலம் இருதரப்புறவை முன்னேற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
"இருநாட்டுறவு ஓராண்டுக்கு முன்பை விட பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. சீனத் தலைமை அமைச்சர் வென் ச்சியாபாவ் மற்றும் இந்திய தலைமை அமைச்சர் மங்மோகன் சிங் கிழக்காசிய உச்சி மாநாட்டில் சந்திப்பு நடத்திய பின், இருநாட்டுறவு பெருமளவில் மேம்பட்டுள்ளது. மேலும், இருநாடுகளுக்கிடை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், இவ்வாண்டில் இருநாடுகளில் பண்பாட்டு நிகழ்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை இருதரப்பிடை புரிந்துணர்வை பெரிதும் அதிகரிக்கும்" என்று அவர் கூறினார்.
நாடுகளுக்கிடையில் நலன் தொடர்பான முரண்பாடு ஏன் மோதல் கூட ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் அதற்கான தீர்வு முறை தெரிவு செய்யப்படலாம் என்று ருக்மணி குப்தா அம்மையார் தெரிவித்தார். சீனத் தலைவர்கள் நாடுகளுக்கிடை முரண்பாடுகளைக் கையாளும் செயல்கள் மதிக்கப்படத்தக்கவை.
இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாதில் அம்மையாரின் சீனப் பயணம் ஏற்படுத்தும் சிறப்பு செல்வாக்கில், ஒரு பெண்மணி என்ற முறையில் தாம் பெரும் கவனம் செலுத்துவதாக ருக்மணி குப்தா அம்மையார் கூறினார். இந்தியா மற்றும் சீனாவின் வரலாற்றில் தலைசிறந்த தலைவிகள் இருந்துள்ளனர். பெண்கள் நாட்டின் உயர் பதவியேற்பது என்பது, மனிதகுல சமூகத்தின் முன்னேற்றத்தை காட்டுகிறது என்று அவர் கருத்து தெரிவி்த்தார்.