• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிங்காரச் செஞ்சீன அரங்கு
  2010-08-19 19:40:31  cri எழுத்தின் அளவு:  A A A   

5000 ஆண்டுகால வரலாறும், 60 ஆண்டுகால செழுமைக்கான வேட்டையும், 30 ஆண்டுகால ஒப்பில்லா வளர்ச்சி வேகமும் கொண்ட நாடான, சீனாவின் செந்நிற மணிமகுடம் போன்ற அரங்கில்தான் எமது இன்றைய உலகப் பொருட்கட்சிப் பயணம் இனிதே தொடங்கியது. முந்தைய நாள் மாலையில் பார்த்த கதக் நடன ஜதிகளுக்குப் போட்டியான சலங்கை ஒலி இரவு முழுக்க காதுகளில் ஒலித்தது என்றால், சீன அரங்கும், சீனாவின் மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்களின் அரங்குகளும் இன்னமும் கண்களிலேயே நிற்கின்றன எனலாம். சீன அரங்கில் பழமையும், புதுமையும் நேர்த்தியான முறையில் பொதியவைக்கப்பட்டுள்ளன பொலிவான முறையில் நமக்கு விளக்கவும் படுகின்றன. அக்கால பேரரசர்களின் மணிமகுடம் போன்ற வடிவமைப்பில் சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கும் பிரம்மாண்டமான சீன அரங்கை விளக்க தனி நிகழ்ச்சி வேண்டும். என்னதான் ஊடகத்துறையினர் என்றாலும் பொது மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்திருந்தால்தான் உள்ளே செல்லமுடியும் என்ற நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் முழுமையான பொருட்காட்சி அனுபவத்தை சீன அரங்கிலான இன்றைய பயணம் தந்தது. சீன மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களின் அரங்குகளை பார்த்தபோது வெளிநாட்டு கவர்ச்சியான கட்டிடங்களையும், அறிவியல் வளர்ச்சி அனுபவங்களையும், கனவுகளையும்தான் மக்கள் விரைந்தோடி பார்க்கிறார்கள் என்ற எமது எண்ணம் பொய்யானது. சொந்த மாநிலங்கள் அல்லது பிரதேசங்களது அரங்குகளில் மகிழ்ச்சியாக நுழைந்து புன்னகையும் பெருமிதமும் கலந்து நிற்க நிழற்படங்களை எடுக்கும் சீனர்களையும், ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தையும் பார்க்க பொறுமையோடு காத்திருக்கும் வெளிநாட்டினரையும் இங்கே அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் அரங்குகளில் பார்க்க முடிந்தது. நீண்ட நேரம் செலவழித்து இயன்றவரை பார்த்தபின் அடுத்து நுழைந்த அரங்கு கத்தார் நாட்டு அரங்கு. அக்காலம் முதலே ஆழ்கடல் முத்தையும், எண்ணெய் வளத்தையும் சொத்தாகக் கொண்ட கத்தார் நாடு எவ்வளவு சிரத்தையோடு முன்னேறி வருகிறது என்பதை எளிமையாக ஆனால் அழகாக வர்ணிக்கிறது கத்தார் அரங்கு. என்னடா பெண்கள் எல்லாம் நீண்ட வரிசையில், அதுவும் அரங்குக்கு உள்ளே காத்து நிற்கிறார்களே என்று அருகே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, கைகளில் மருதாணியால் வடிவங்கள் வரையும் ஒரு பெண்ணி்டம் தங்கள் கைகளை நீட்டி அழகுபடுத்தத்தான் சீன இளம்பெண்களும், சிறுமிகளும் வரிசையில் நிற்கிறார்கள் என்று. புறங்கைகளில் அழகான வடிவங்களில் மருதாணியால் எழுதிக்கொண்டு புன்சிரிப்போடு பெண்கள் கத்தார் அரங்குக்கு வெளியே ஒருவர் மற்றவருடன் ஒப்பிட்டுக்கொள்கின்றனர்.

அங்கிருந்து வெளியே வந்தபோது ஈரான் அரங்குதான் கண்களுக்குத் தெரிந்தது. செய்திகளில் அடிக்கடி புழங்கும் சொல்லாகிப்போன ஒரு நாட்டின் அரங்கை சென்று பார்த்தபோதுதான் வியப்பான ஒரு காட்சி கண்களுக்கு தெரிந்தது. எல்லா அரங்கிலும் மக்கள் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற தாகத்தோடு திரிவதை பார்த்த நமக்கு, ஈரான் அரங்கின் உள்ளே பாலைவனச் சோலை போன்ற வடிவத்தில் இருந்த இடத்தில் மக்கள் ஆற அமர உட்கார்ந்து இளைப்பாறுவதை கண்டதும் வியப்பாகத்தான் இருந்தது. ஈரான் அரங்கு மக்கள் இளைபாறுவதற்காகவே இந்த சோலையை உள்ளே வைத்திருக்கும் போல. காரணம் யாரும் அமர்ந்து ஓய்வெடுக்கும் மக்களை எழுப்பவோ, வெளியே அனுப்பவோ இல்லை. அரங்கின் பணியாளர்கள் ஐயம் கேட்பவர்களுக்கு மட்டும் புன்சிரிப்புடன் பதிலளிக்கின்றனர்.

நாளைய நம் உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பது நம் கையில்தான். கரிவெளியேற்றத்தை குறைக்கவேண்டும், அதற்கு இயன்றவரை இன்றே முயற்சிக்க வேண்டும். வசதியான பொதுப்போக்குவரத்து இருக்க, தேவையின்றி சீருந்தில் சீறிச்செல்ல நினைத்து போக்குவரத்து நெரிசலில் மாட்டி சுற்றுச்சூழலை சீரழிக்கத் தேவையில்லை. நாளைய உலகை பேணிக்காக்க எடுக்கப்படும் முயற்சிகள் இன்றைக்கே தொடங்கினால்தான் சாத்தியப்படும் என்ற செய்தியை தந்த சீன அரங்கின் அனுபவங்களை அசைபோட்டபடி ஷாங்காயிலிருந்து தேன்மொழி, கலைமகள் மற்றும் க்ளீட்டஸ்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040