அமெரிக்க தொழில் நிறுவனங்கள், நாணயம் மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த 21 புகழ்பெற்ற பிரமுகர்களுடன், சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் நியூயார்க் நகரில் புதன்கிழமை கலந்துரையாடல் நடத்தினார். சீன-அமெரிக்க உறவு, இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பாக அவர்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்ததோடு, வென்ச்சியாபாவ் சீனாவின் நிலைப்பாட்டையும் கருத்தையும் விளக்கிக் கூறினார்.
உலக நாணயச் சீர்திருத்தம், பொருளாதார நிலைமை, அமெரிக்க-சீனா வர்த்தகம், நாணய மற்றும் வணிக உறவு உள்பட பல அம்சங்கள் பற்றி, அமெரிக்க பிரதிநிதிகள் தமது கருத்துக்களை விளக்கினர். அமெரிக்க-சீன பொருளாதார வர்த்தகம் சீராக வளர்ச்சியடைவதே, இரு தரப்புக்கு நலன்களை தருகின்றது என்று ஒருமனதாக கருதப்பட்டது. இரு நாடுகளிடையே நிலவுகின்ற பிரச்சினைகள் மற்றும் கருத்துவேற்றுமைகளை உகந்த முறையில் தீர்க்க வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
தவிரவும், அமெரிக்க பிரதிநிதிகள் முக்கியமாக கவனம் செலுத்திய அமெரிக்க-சீன வர்த்தக நிலுவைப் பற்றாக்குறை, ரென்மின்பி மாற்று விகிதம், அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு, வெளிநாட்டு முதலீட்டுக்கு சூழ்நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு, வென்ச்சியாபாவ் முறையே பதிலளித்தார்.