நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.நாவின் புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்கு தொடர்பான உயர் நிலை கூட்டம் 22ம் நாள் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் தமது உரைகளில் கூட்டு முயற்சிகள் மூலம் 2015ம் ஆண்டிற்குள் ஐ.நா புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்கை நிறைவேற்ற பாடுபடுவதாக உறுதிப்படுத்தினர்.
2000ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா பொதுப் பேரவையின் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் இந்த இலக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன. 2015ம் ஆண்டுக்கு முன் உலகளவில் வறிய மக்கள் தொகையில் 50 விழுக்காட்டைக் குறைக்கும் நோக்கம் கொண்ட நடவடிக்கைத் திட்டமாக இது திகழ்கின்றது.
இன்னல்கள் இருந்த போதிலும் பல்வேறு நாடுகள் முயற்சிகளை இரட்டிப்பாக்கினால் இந்த புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்கை நிறைவேற்றுவதில் ஐயமேயில்லை என்று நடப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 140 நாடுகளின் தலைவர்கள் அடுத்தடுத்து உரை நிகழ்த்திய போது வலியுறுத்தினர்.