இந்திய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கின் அழைப்பை ஏற்று, சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் இவ்வாரத்தில் இந்தியாவில் பயணம் மேற்கொள்வார். இந்தியாவிலுள்ள சீன தூதர் சாங் யென், இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் அம்மையார், சீனாவிலுள்ள இந்திய தூதர் எஸ். ஜெயசங்கர் முதலிய இரு நாடுகளின் உயர் அலுவலர்கள் 13ம் நாள் புது தில்லியில் இது குறித்து விவாதக் கூட்டத்தை நடத்தினர். "புதிய உலக ஒழுங்கில் சீனாவும் இந்தியாவும் எதிர்நோக்கும் வாய்ப்புகளும் அறைகூவல்களும்" என்ற தலைப்பையொட்டி, அவர்கள் வென்சியாபாவின் இந்தியப் பயணம், சீன-இந்திய உறவு முதலியவற்றை விவாதித்தனர்.
சீன-இந்திய உறவு, 21ம் நூற்றாண்டில் உலகளவிலான மிக முக்கிய இரு தரப்புறவாகும். சீனாவுடனான நட்பு ஒத்துழைப்பை இந்தியா பேணி மதிக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் நிரூபமா ராவ் அம்மையார் கூறினார்.
சீனா, இந்தியாவின் மிகப் பெரிய அண்டை நாடாகும். நீண்ட காலமாக சீனாவுடனான பரிமாற்றத்துக்கும் ஒத்துழைப்புக்கும் இந்தியா முக்கியத்துவமளித்து வருகிறது. சீனாவுடன் புரிந்துணர்வு மற்றும் நட்புறவின் பாலத்தை நிறுவி ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் இரு தரப்புறவை வளர்க்க இந்தியா விரும்புகிறது என்று அவர் கூறினார்.
சீனாவும் இந்தியாவும் மேலும் நீண்டகால நெடுநோக்குப் பார்வையில் இரு தரப்புறவைக் கையாள வேண்டுமென இந்தியாவிலுள்ள சீன தூதர் சாங் யென் கூறினார். சீனாவிலுள்ள இந்திய தூதர் எஸ் ஜெயசங்கர் இக்கருத்தை ஏற்றுக் கொண்டார்.
சீன மற்றும் இந்திய பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு நட்பான அமைதியான சூழ்நிலை தேவைப்படுகிறது. எந்த நாட்டின் நிதானமும் வளர்ச்சியும், அதன் அண்டை நாட்டை பொறுத்தவரை சாதகமானது என்று அவர் கூறினார்.
தவிரவும், கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளின் வர்த்தகத் துறையிலான ஒத்துழைப்பு மாபெரும் சாதனையைப் பெற்று இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு வலிமையான ஊந்து விசையை வழங்கியது. பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், கல்வி முதலிய துறைகளிலான ஒத்துழைப்பும் நாளுக்கு நாள் ஆழமாகியது. வென்சியாபாவின் பயணத்தைப் பயன்படுத்தி, இரு நாடுகள் மொழிக் கல்வித் துறையின் பரிமாற்றத்தை மேற்கொள்ளும். இந்தியாவில் சீன மொழிக் கல்வியை பரப்புரை செய்வதற்கு சீனா முழு முயற்சியுடன் ஆதரவளிக்கும் என்று யாங் யென் தெரிவித்தார்.
ஒத்துழைப்பும், கூட்டு வெற்றியும் எதிர்கால இரு தரப்புறவின் முக்கிய தலைப்பாகும். வென்சியாபாவின் இந்திய பயணத்தை இந்திய தரப்பினர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இரு தரப்புறவு புதிய கட்டத்தில் நுழையும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.