
சென்ஷோ-8 விண்கலம் 58 மீட்டர் உயரமான லாண்மார்சு-2 F ஏவூர்தி மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு, புவியின் மையத்திலிருந்து குறைவான தூரம் 200 கிலோமீட்டரும், அதிகமான தூரம் 329.8 கிலோமீட்டரும் கொண்ட ஆரம்ப சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. சீன ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டத்தின் தலைமை ஆணையாளர் சாங் வான்சுவான் இந்த வேளையில், சென்ஷோ-8 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்று அறிவித்தார்.
1999ம் ஆண்டு முதல் முறையாக சென்ஷோ-1 விண்கலத்தை சீனா செலுத்தியது. சீனாவின் ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்படி, ஆட்கள் நீண்டகாலமாக தங்கியிருக்கக் கூடிய விண்வெளி நிலையத்தைக் கட்டியமைக்கும் பணி மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும். இந்த முறை சென்ஷோ-8 மற்றும் தியேன்குங்-1 விண்கலங்களின் இணைப்பு 2வது கட்டத்தின் முக்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ஷோ-8 விண்கலத்தின் நீளம் 9 மீட்டராகும். அதன் எடை 8.802 டன்னாகும். சீன ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்பணியின் செய்தித் தொடர்பாளர் வூ பிங் அம்மையார் கூறியதாவது
விண்கலத்தில் 600க்கு மேற்பட்ட சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் பாதி அளவில் தொழில்நுட்பச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.
புதிய இணைப்புக் கடமையை நிறைவேற்ற, ஏவு மையம், ஏவூர்தி முதலிய தொகுதிகளில் பெரிதளவு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சென்ஷோ-8 விண்கலத்தில் விண்வெளி உயிர் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும். விண்வெளி அறிவியல் பயன்பாட்டுத் துறையில் சீனா சர்வதேச ஒத்துழைப்பில் முதல்முறையாக ஈடுபடும். சீனா மற்றும் ஜெர்மன் அறிவியலாளர்கள் மொத்தமாக 17 அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வர்.
சென்ஷோ-9, சென்ஷோ-10 விண்கலங்கள் அடுத்த ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என்று வூ பிங் அம்மையார் தெரிவித்தார்.