
சீனப் பொருட்கள் பற்றிய இந்திய நுகர்வோரின் கருத்து மாறி வருகிறது. கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில், சீனப் பொருட்களை விலை குறைவான தரமற்ற பொருட்களாக இந்தியர்கள் பொதுவாகக் கருதினர். ஆனால், சுமார் 10 ஆண்டுகளுக்கு பின், பல்வகை நடுத்தர மற்றும் உயர் தரமான சீனப் பொருட்கள் மலிவான விலையில் இந்தியச் சந்தையில் முக்கிய பங்கெடுத்து, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை இந்திய மக்கள் வியப்புடன் அறிந்து கொண்டனர். புதுதில்லியிலுள்ள ஒரு கடையின் உரிமையாளர் ரமேஷ் செய்தியாளரிடம் கூறியதாவது—
"சீனாவிலிருந்து இறக்குமதி செய்யபட்ட பொருட்கள் தரமிக்கவை. விலையும் மலிவு. எளிய பொது மக்களும் வாங்கக் கூடியவை. எடுத்துக்காட்டாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட செல்லிடபேசியின் விலை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதை விட மிகவும் குறைவு" என்று அவர் கூறினார்.
இந்தியாவில் முக்கிய விழாக்களின் போதெல்லாம், அன்பளிப்பு மற்றும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் சந்தைகளில் சீனப் பொருட்களை காண முடியும். மேலும், கடந்த சில ஆண்டுகளில், சீன-இந்திய இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தகப் பரிமாற்றம் விரைவாக வளர்ந்து வருகிறது. தற்போது, இந்தியாவின் முதலாவது பெரிய இறக்குமதித் தளமாகவும் மூன்றாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் சீனா திகழ்கிறது. இந்தியா, சீனாவின் ஒன்பதாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும். மின்னாற்றல், தொலைத்தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் கட்டுமானத் துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருநாடுகளுக்கிடை வர்த்தகத்துக்கு, இந்திய நகரவாசிகள் பலர் ஆதரவளிப்பதோடு, இவ்வர்த்தகம் இருநாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாகவும் கருத்து தெரிவித்தனர். சீனாவில் பலமுறை பயணம் மேற்கொண்ட புதுதில்லி நகரவாசி யோகேஷ் கூறியதாவது—
"தற்போது எங்கள் சந்தையில், விளையாட்டுப் பொம்மை, பட்டாசு, மட்பாண்ட மற்றும் பீங்கான் பொருட்கள் உள்ளிட்ட பல்வகைப் பொருட்களில் சீன தயாரிப்புப் பொருட்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய இருதரப்பு வர்த்தகம் இருநாடுகளுக்கும் நன்மை பயக்கும் என கருதுகின்றேன்" என்று அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில், இந்திய சந்தையின் கதவு, சீன வணிகப் பொருட்களுக்கு பெருமளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சீன வணிகப் பொருட்கள் இந்திய சந்தையில் மேலும் பெரும் வரவேற்பைப் பெறும்.