திபெத் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இது குறித்து, சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவருமான பாத்மா திரின்லி 7ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் உரை நிகழ்த்தினார். தற்போது திபெத்தின் நிலைமை அமைதியாக இருந்து வருகிறது. தேசிய இனங்கள் ஒன்றுபட்டு, பல்வேறு தேசிய இன மக்கள் இன்பமாக வாழ்க்கை நடத்தி வேலை செய்கின்றனர் என்று அவர் கூறினார். அதேவேளை, தேசிய இன ஒருமைப்பாடு, திபெத்தின் பல்வேறு இன மக்களின் உயிர் நாடியாகத் திகழ்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அரசுப் பணியறிக்கையைப் பரிசீலித்த போது பாத்மா திரின்லி இவ்வாறு கூறினார். அமைதியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நடுவண் அரசின் கோரிக்கையின்படி, இவ்வாண்டு திபெத் தனது தனிச்சிறப்புகளுக்கிணங்க, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும். வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பணிகளைச் செவ்வனே மேற்கொள்வதோடு, சமூக நிர்வாகத்தையும் புத்தாக்கம் செய்து, சமூகத்தின் நல்லிணக்கத்தையும் முன்னேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், திபெத்திற்கு சிறப்பான சலுகைக் கொள்கைகள் பலவற்றை நடுவண் அரசு வகுத்துள்ளது. கடந்த ஆண்டில் திபெத்திற்கான 362 உதவித் திட்டப்பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 240 கோடி யுவானுக்கு மேலான உதவித் தொகை திபெத்தின் நடைமுறைப் பயன்பாட்டுக்காகச் செலவிடப்பட்டுள்ளது என்றும் பாத்மா திரின்லி தெரிவித்தார்.