ஜுலை 23ஆம் நாள் முற்பகல், பயணிகளை ஏற்றிச் செல்லும் முதலாவது பேருந்து ஷி ச்சுவான் ஹே சிறு நகரத்தில் இயங்கத் தொடங்கியது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஆலி பகுதியின் முதலாவது தொகுதி பேருந்துகள் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டில் இறங்கியுள்ளன. இது, இப்பகுதியின் பேருந்து இல்லாத வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
ஆலி பகுதி, திபெத்தின் மேற்கில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்திலுள்ள இப்பகுதியின் அடிப்படைப் போக்குவரத்து வசதி பலவீனமாக உள்ளது. திபெத்தின் மேற்குப் பகுதியின் போக்குவரத்து மையமாகவும், பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாகவும் எல்லைப் பகுதியின் வர்த்தக மையமாகவும் ஷி ச்சுவான் ஹே சிறு நகரம் திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அது விரைவான வளர்ச்சி அடைந்து, நகர அளவு விரிவாகி வருகிறது. குடிமக்கள் அதிகரிப்பு, போக்குவரத்து வசதியின்மை, பயணச் செலவு அதிகம் ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்க, ஆலி பகுதி சுமார் 20 இலட்சம் யுவான் நிதி ஒதுக்கீடு செய்து, 6 பேருந்துகளை வாங்கியுள்ளது.