லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. ஜூலை 31 ஆம் நாள் 10 மீட்டர் ஆடவர் குழல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் ககன் நரங் மூன்றாவது இடம்பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் இன்னும் இரண்டுப் பிரிவுகளில் ககன் நரங் கலந்துக் கொள்வதால், பிற போட்டிகளிலும் இவர் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
25 மீட்டர் மகளிர் துப்பாக்கிச் சுடும் போட்டிப் பிரிவில் தகுதிச்சுற்றில் நான்காவது இடத்தை பிடித்த இந்தியாவின் வீராங்கனை ராஹி சர்நோபத் இறுதிப்போட்டியில் விளையாடும் தகுதிப் பெற்றுள்ளார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் குழல் துப்பாக்கிச் சுடும் போட்டியின் தகுதிசுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
பூப்பந்து ஒற்றையர் போட்டியில் சிறப்பாக விளையாடிய பாருபள்ளி காஷ்யாப் தன்னை எதிர்த்து விளையாடிய இலங்கை வீரரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். ஒலிம்பிக் பூப்பந்துப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை காஷ்யாப் பெற்றுள்ளார்.
ஆடவர் குத்துச்சண்டை போட்டி 64 கிலோ பிரிவில் இந்திய வீரர் மனோஜ் குமாரும், 49 கிலோ பிரிவில் எல்.தேவன்ரோ சிங்கும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.