16 நாட்கள் நீடித்த 30வது கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 12ஆம் நாளிரவு இலண்டனில் நிறைவடைந்தது. 204 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பத்தாயிரத்துக்கு மேலான விளையாட்டு வீரர்கள் நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்கள் கலந்து கொண்ட 26 வகையான போட்டிகளில், மொத்தமாக 300 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 54 பிரதிநிதிக் குழுக்கள் தங்கப் பதக்கங்களை வென்றன. 85 பிரதிநிதிக் குழுக்கள் பதக்கங்களைப் பெற்றன. அமெரிக்கா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் பதக்க வரிசையின் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன.
அதில், சீன பிரநிதிதிக் குழு 38 தங்கப் பதக்கங்கள், 27 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 22 வெண்கலப் பதக்கங்களை வென்றது. மொத்தமாக 87 பதக்கங்களைக் கொண்டுள்ள சீனா தங்கப் பதக்க வரிசையிலும் பதக்க வரிசையிலும் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற 32 தங்கப் பதக்கங்களின் பதிவைச் சீனா தாண்டியுள்ளது. மேலும் சீன வீரர்கள் 6 உலகச் சாதனைகள் மற்றும் 6 ஒலிம்பிக் சாதனைகளை உருவாக்கினர்.