9ஆம் நாள் காலை 9 மணிக்கு, பெய்ஜிங் மேற்கு தொடர்வண்டி நிலையத்தின் பயணச்சீட்டு விற்பனை மண்டபத்தில், வசந்த விழா விடுமுறையின் முதல்நாள் பயணச்சீட்டை வாங்க வரிசையில் நின்ற பயணிகள் அதிகமில்லை. இந்நிலையத்தின் கட்சிக் குழு துணைச் செயலாளர் சுன்ஜியன்குவ் செய்தியாளரிடம் கூறியதாவது—
"இவ்வாண்டு பயணச்சீட்டு முன்பதிவுக் காலம் சீரமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் இணையம் மூலம் 20 நாட்களுக்கு முன் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். தொடர்வண்டி நிலையத்திலும் பயணச் சீட்டு அலுவலகத்திலும் 18 நாட்களுக்கு முன் தான் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். மதிப்பீட்டின்படி, 40 விழுக்காட்டு பயணிகள் தொலைபேசி மற்றும் இணையம் மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்" என்று அவர் கூறினார்.
பயணச்சீட்டு முன்பதிவு வசதியாகவும் வேகமாகவும் செய்யப்படுவதால், தொலைபேசி மற்றும் இணையம் மூலம் பயணச் சீட்டுகளை வாங்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீன இருப்புப்பாதை அமைச்சகத்தின் போக்குவரத்துப் பணியகத்தின் அலுவல் பிரிவின் துணைத் தலைவர் வெய்ருய்மிங் பேசுகையில், இணையம் மற்றும் தொலைபேசி மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் முறைமை இவ்வாண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
இவ்வாண்டு வசந்த விழா விடுமுறை ஜனவரி 26 முதல் மார்ச் 6ஆம் நாள் வரை தொடரும். இக்காலத்தில் தொடர்வண்டி மூலம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 22 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்படுகிறது. பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு வசதியளிக்க, பல்வேறு தொடர்வண்டி நிலையங்களும் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பெய்ஜிங்கிலுள்ள தொடர்வண்டி நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்களும், தொலைபேசி மற்றும் இணையம் மூலம் பதிவு செய்வோருக்கு அதிகாரப்பூர்வ பயணச்சீட்டை வழங்கும் இயந்திரங்களும் புதிதாகக் காணப்படுகின்றன. அவை பயணிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதைத் தவிர, பெய்ஜிங் தொடர்வண்டி நிலையமும், பெய்ஜிங் மேற்கு தொடர்வண்டி நிலையமும் பயணச்சீட்டு விற்பனை சன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்துள்ளன. இவ்விரு நிலையங்களின் சதுக்கங்களில், தற்காலிக பயணச்சீட்டு விற்பனைகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.