சீனப் பண்பாட்டு நிகழ்ச்சியில் அடக்கம், பிறருக்கு மதிப்பு, சுயகட்டுப்பாடு பற்றி கூறப்பட்டது. இந்த நேரத்தில் அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்ற திருக்குறள்தான் நினைவுக்கு வந்தது. 4.11.2009 அன்று நேயர் நேரம் நிகழ்ச்சி கேட்டேன். அதில் திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன் கூறும்போது ஆடு, மாடு, பன்றி இறைச்சி சிவப்பாக இருக்கும். இது கொழுப்பு அதிகம் நிறைந்த இறைச்சி கோழி இறைச்சி வெள்ளையாக இருக்கும். இதில் கொழுப்பு மிகக் குறைவு என்று கூறினார். இந்த வேறுபாடு பற்றி இதுவரை நான் அறிந்ததில்லை. நல்ல ஒரு தகவலை சீன வானொலி மூலம் தெரிந்து கொண்டேன். தகவல் தந்த வி.டி.இரவிச்சந்திரனுக்கும் வழங்கிய சீன வானொலிக்கும் நன்றிகள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு 25.10.2009 அன்று ஒலிபரப்பு தெளிவாக இருந்தது. மலர்ச்சோலையில் ஷாங்காய் உலகக் கலைவிழா, அதில் 55 நிகழ்ச்சிகள் உண்டு என்பதையும் அறிய முடிந்தது. இந்தக் கலைவிழா பற்றிய செய்தி, மலர்ச்சோலையோடு நின்று விடாமல் ஒரு தொகுப்பு நிகழ்ச்சியாக ஒலிபரப்புங்கள். உலக பண்பாட்டை நாங்கள் அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்குகக்ம. நோபல் பரிசு பெற்றவர்கள் யுனெஸ்கோ விருது பெற்றிருக்கிறார்கள். இந்த சாதனையாளர்கள் பற்றி செய்தியை நான் மலர்சோலை மூலமே அறிந்தேன். மலர்சோலை தொகுத்தவருக்கும் சீன வானொலிக்கும் பாராட்டுக்கள். ஆனால் மலர்சோலை தொகுத்தவர் விளையாட்டுச் செய்தியையும் தொகுத்து அளித்து விட்டார். இதை தவிர்த்து இருக்கலாம். நேயர் விருப்பத்தில் ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது என்ற அருமையான பாடலை சீதா வழங்கினார். வேலையில் மன இறுக்கம் கூடாது, வேலையில் ஈடுபாடு இல்லை என்றால், உடல்வலி, சோர்வு, பின்னடைவு ஏற்படும் என்பதை உணர்த்தும் பாடல் இது. வழங்கியமைக்கு நன்றி.
26.10.2009 செய்தியில் 3வது உலக வரி மாநாடு பெய்ஜிங்கில் என்ற செய்தி கேட்டேன். மக்கள் சீனம் உலக மகளிர் மாநாட்டை சிறப்புடன் நடத்தி உலகை தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. அதன்பின் உலக அளவில் நடைபெறும் மாநாடு, கருத்தரங்கு என்று எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. உலக அளவில் ஏற்பாடு செய்யும் பல்வேறு கருத்தரங்குகளை சீனா செம்மையாக நடத்தி முடிப்பதால் தொடர்ந்து மக்கள் சீனத்திலேயே உலக கருத்தரங்கு நடைபெறுகிறது. இது திறமை மட்டுமல்ல, துாதாண்மை உறவும் இதில் உண்டு என்பது முக்கிய செய்தியாகும். சீன வரலாற்றுச் சுவடுகள் பகுதியில் சீன மகளிர் மாநாடு முதல் இப்போது வரை நடைபெற்ற கருத்தரங்கு, மாநாடுகள் பற்றி செய்தி வழங்கலாம். பொருளாதார வளர்ச்சியில் சாதனை என்பது போல் இதுவும் ஒரு சாதனைதான். உலக மாநாடா, பொறுப்பை சீனாவிடம் கொடுங்கள், திறம்பட நடத்தும் என்ற நிலைக்கு இன்று மக்கள் சீனம் நடைபோடுகிறது. வாழ்த்துக்கள்.
சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் ஹீலின் மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலக் காடுகளில் பறவைகள் எப்படி போற்றி காக்கப்படுகிறது என்ற செய்தி கேட்டேன். மனிதர்கள் பறவைகளின் வாழ்க்கை முறையை மாற்ற முயற்சிக்காமல் அதோடு பழகினால் அங்கு இனிமையான சூழல் நிலவும் என்பது தெரிகிறது. இங்கு தமிழகத்தில் ஒரு கிராமத்தில் மிகப் பெரிய மரங்கள் நிறைந்த நீர்ப்பகுதி உள்ளது. அங்கு வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டு முழுவதும் வந்து செல்வதை மக்கள் அறிந்து அந்த கிராமத்திலும் அதற்கு அருகே உள்ள சில கிராமங்களிலும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பட்டாசு வெடிப்பதில்லை என்ற முடிவை பல தலைமுறையாக வெற்றியுடன் செயல்படுத்தி வருகின்றனர். அந்த கிராமத்தில் ஆண்டு முழுவதும் உலகின் பல இடங்களில் இருந்து பறவைகள் வந்து செல்வது இன்றும் நடைபெறுகிறது. இன்றைய சீன சமூக வாழ்வு எனக்கு இந்த தமிழக கிராமத்தை நினைவுக்கு கொண்டு வந்தது. இன்றைய நிகழ்ச்சி, மனிதன் தன் சுற்றுச் சூழலை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று புரிய வைத்தது. சீன வானொலிக்கு நன்றி.
1.11.2009 மலர்ச்சோலை நிகழ்ச்சி கேட்டேன். அதில் சீன தேசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றிய செய்திகள் வழங்கக் கேட்டேன். இந்த விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி, மலர்ச்சோலையில் தவிர்த்து இருக்கலாம். அடிக்கடி இப்படி மலர்ச்சோலையில் நிகழ்ச்சி மாறி ஒலிபரப்பாகிறது.
அரசு விடுமுறை நாட்கள் பற்றிய செய்திகளை 1.11.2009 மலர்ச்சோலையில் கேட்டேன். சீன, இந்திய அரசு விடுமுறை நாட்கள் பற்றிய செய்திகளை 1.11.2009 தேதியாகிய இன்று இரவு 7 மணிக்கு நாளிதழில் படித்தேன். அதே தகவல்கள் இன்று நமது மலர்ச்சோலை நிகழ்ச்சியில் இடம்பெற்று இருந்தது வியப்பாக இருந்தது. அதே மலர்ச்சோலை நிகழ்ச்சியில் பெய்ஜிங் சுற்றுலாவில் பறவைக் கூடு அரங்கம் முதல் இடம்பெறுகிறது என்ற செய்தி கேட்டேன். இது சில ஆண்டுகளுக்குத்தான். என்றும் பெருஞ்சுவர், அரண்மனை போன்ற காலத்தால் அழியாத வரலாற்றுச் சான்றுகளை சுற்றுலாவில் இருந்து பிரிக்க முடியாது. இதுதான் உலக இயல்பு.