நவம்பர் திங்கள் 10 ஆம் நாள் இடம்பெற்ற சீனக்கதை நிகழ்ச்சியைக் கேட்டேன். இன்றைய நிகழ்ச்சியில் •முரசொலி• என்னும் கதை இடம்பெற்றது. சீ மற்றும் லு என்னும் இரு நாடுகளிடையே நிகழ்ந்த போரின் பின்னணியைக் கொண்டு சாங்வெய்குவான் என்பவரின் மதிநுட்பத்தி வெளிக்கொணருவதாக இன்றைய கதை நிகழ்ச்சி அமைந்திருந்தது. முரசொலிக்குக் கூட இத்துணை பொருள் உண்டா என்ற வியப்பு எனக்குள் ஏற்பட்டது. மதிநுட்பம் உள்ளவர்களுக்கு எப்போதும் வெற்றி உண்டு என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டிய கதை ஒன்றை ஒலிபரப்பியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வணக்கம்.
நவம்பர் திங்கள் 10 ஆம் நாள் ஒலிபரப்பான •சீனாவில் இன்பப் பயணம்• நிகழ்ச்சியில் •சியாங்சு மாநிலத்தின் பண்டைக்கால கிராமம்• என்ற கட்டுரையைக் கேட்டேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் பாரம்பரியம் மிக்க மேப்பீ கிராமம் பற்றிய சில அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. அக்காலத்திலேயே 28 குடியிருப்புக்களிடையே இணைப்பு இருந்தது என்பதை அறியும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆனாலும், அக்கால மக்கள் எப்போதும் தகுந்த விழிப்புணர்வுடன்தான் இருந்திருக்கிறார்கள். கழிவு நீர் வெளியேற்றத்திற்கு அக்கால மக்கள் தந்த முக்கியத்துவத்தை இக்கால மக்கள் ஒருபோதும் அளிப்பதேயில்லை. சுவையான கட்டுரை. வழங்கிய நண்பர் கலைமகள் அவர்களுக்கு என் நன்றி.
நவம்பர் திங்கள் 9 ஆம் நாள் இடம்பெற்ற சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியைக் கேட்டேன். இன்றைய நிகழ்ச்சியில், நவம்பர் 8 ஆம் நாள் சீன செய்தியாளர் நாளாக கொண்டாடப்பட்டது, 1990 ஆம் ஆண்டு பேரிடர் நீக்கப் பணியை பாராட்டி தாங்ஷான் நகருக்கு விருது வழங்கப்பட்டது, 1999 ஆம் ஆண்டு சீனாவும் அமெரிக்காவும் இருதரப்பு உடன்படிக்கையை உருவாக்கியது என பல்வேறு தகவல்களை அறிந்து மகிழ்ந்தேன். குறிப்பாக, இயற்கை பேரிடர் நிகழ்வை எதிர்கொண்டற்காக தாங்ஷான் நகரம் விருது பெற்ற நிகழ்வு என்னைப் பெரிதும் கவர்ந்தது. காரணம், எப்போதும் இயற்கைச் சீற்ற நிகழ்வுகளுடன் சீனாவின் வளர்ச்சி எப்போதும் இணைக்கப்பட்டிருக்கிறது. இயற்கைப் பேரழிவு எப்போதும் ஒரு நாட்டின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகும். ஆனாலும் அதனையே ஏணிப்படியாகக் கொண்டு சீனா மாபெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
நவம்பர் திங்கள் 9 ஆம் நாள் இடம்பெற்ற •நட்புப்பாலம்• நிகழ்ச்சியில், கடந்த ஆகஸ்டு திங்கள் முதலாம் நாள் பெருந்துறையில் நடைபெற்ற விழாவின் 11வது பகுதியைக் கேட்டு மகிழ்ந்தேன். கடந்த வாரமும், இன்றும் ஆக இரு வாரங்களாக என்னுடைய உரை இடம்பெற்றது. ஏறக்குறைய 12 நிமிட நேர உரையில் என்னுடைய திபெத் பயண அனுபவங்களை நேயர்களுக்கு புரிய வைத்திருக்க முடியும் என நம்புகின்றேன். இன்றைய நிகழ்ச்சியை கேட்ட பின்பு, என்னைத் தொடர்பு கொண்ட சில நேயர்கள், என் உரைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அதன் மூலம், திபெத்திய பயணத்தின் முக்கியத்துவத்தை மற்ற நேயர்களுக்கு புரிய வைக்க முடிந்தது என்றே நான் நம்புகின்றேன். மிக்க நன்றி.