நிகழ்ச்சிகளை கேட்டு கடிதம் மூலம் தெரிவித்த கருத்துக்களை பாருங்கள்.
கலை கடிதப்பகுதியில் இலங்கை கினிகத்தேனையிலிருந்து எஸ்.வி.துரைராஜா அனுப்பிய கடிதம். சீன வானொலி தமிழ்ப்பிரிவு நிகழ்ச்சிகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் வரவேற்கக்கூடியவை. நவ சீனாவின் வைரவிழா நிறைவை கொண்டாடியுள்ள இவ்வாண்டில், புதிய தலைமுறைக்கு ஏற்ற மாற்றங்களாக இந்த நிகழ்ச்சி மாற்றங்களை பார்க்கிறோம்.
தமிழன்பன் அடுத்தாக, மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி மதுரை திருமங்கலம் பி. கதிரேசன் எழுதிய கடிதம். ஏற்றுமதிப் பொருட்களின் பொருட்காட்சியில் 500க்கு மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றதை இந்நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன். இதில் கலந்துகொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு, அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத தொழில் நிறுவனங்களை பற்றி அறியும்போது சீனாவின் உற்பத்தி ஆற்றலை உணர்த்தவர்களாய், அனைவரும் பயன்பெறுவதை அறிய முடிகிறது.
கலை தொடர்வது, ஆரணி இ.பவித்தரா அனுப்பிய கடிதம். கன்ஃசியஸ் வகுப்பு மூலம் சீனமொழி கற்பதில் ஜிம்பாபுவே மாணவர்கள் ஆர்வமுடன் இருப்பதை பற்றி சீன வானொலி மூலம் அறிந்தேன். சீன அரசின் சார்பில் ஜிம்பாபுவே மாணவர்கள் 10 பேர் ஒரு மாதக்காலம் சீனாவில் தங்கி, சீன மொழி பயின்று, சீனாவை சுற்றிப்பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். சீனாவின் பண்பாட்டை அறிந்து, வளர்ச்சியை பார்த்து, எழுச்சியை கண்டு வியந்துள்ளனர். சீனாவின் வளர்ச்சி உலகிற்கே வியப்பூட்டுவதாக உள்ளபோது அவர்களுக்கு மலைப்பூட்டியதில் மிகையில்லை.
தமிழன்பன் வேலூரிலிருந்து கு.ராமமூர்த்தி கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். இதுவரை நடைபெற்ற 10 சீன தேசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றியும், அவற்றில் எட்டப்பட்ட வரலாற்று சாதனைகளையும் கலையரசி அவர்கள் தெளிவாக விளக்கினார். 11 வது தேசிய விளையாட்டுப் போட்டி பற்றிய தகவல்களையும் அதில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை மற்றும் ஈடுபடும் தொண்டர்களை பற்றிய விபரங்களையும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி பல புதிய தகவல்களை எங்கள் மனதில் பதிய வைத்தது.
கலை அடுத்து, நேயர் கடிதம் நிகழ்ச்சி பற்றி பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன் அனுப்பிய கடிதம். நேயர்களின் கடிதங்களை சிறப்பாக கையாண்டு தொகுத்துவரும் சீன வானொலிப் பணியாளாகளுக்கு பாராட்டுக்கள். சீன வானொலிக்கு அனுப்பபப்படும் கடிதங்கள் அனைத்தும், தமிழ் ஒலிபரப்பின் எண்ணெய்யாக மாறி எப்போதும் ஒளிவீச உறுதுணையாக அமையும் என்பதை எண்ணும்போதே மகிழ்ச்சி மேலிடுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளும் செயல்படும் நேயர்களுக்கு பாராட்டுக்கள்.
தமிழன்பன் தொடர்வது, இலங்கை காத்தான்குடியிலிருந்து ந.பாத்திமா றிப்னா அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இந்நிகழ்ச்சி மாணவரான என்னை போன்ற அனைவரையும் கவர்கின்ற, பயன்னுள்ள தகவல்களோடு ஒலிபரப்பாகி வருகின்றது. சுருங்க சொன்னால் அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி மாணவர்களின் அறிவுக்கு விருந்து.
கலை சோமனூர் எம்.சோமசுந்தரம் நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். அனைத்திந்திய நேயர் மன்ற தலைவர் எஸ்.செல்வம் அவர்களின் திபெத் பயண அனுபவங்களை கேட்டேன். திபெத் மக்களின் பண்பாடு, நாகரிகம், திருவிழாக்கள், லாசா நகரமென, உயரமான மலைப்பகுதியில் அவரது சுற்றுலா அனுபவங்கள் என்னை மலைப்புக்கு உள்ளாக்கின. தண்ணீரை சாலைகளில் தெளித்து சுத்தம் செய்கின்ற வண்டிகளால் திபெத்திய வீதிகள் பராமரிக்கப்படுவதை அவர் குறிப்பிட்டார். பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பிக்கப்படும் புதிய முறையையும் அறிமுகப்படுத்தினார். வெளிநாட்டு பயணிகளை கவரும் வகையில் செயல்படுத்தப்படும் நடைமுறைகளையும் அறிவிக்கும் இந்நிகழ்ச்சியே அமைந்துவிட்டது.