இப்போது சீனர்களின் சர்வதேச நண்பர்களது வாழ்க்கை மற்றும் கதைகள் நட்புப் பாலம் நிகழ்ச்சியில் தனித்தனியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. கடந்த வார நிகழ்ச்சியில் சீன மக்களின் நம்பிக்கைக்குரிய நண்பரான தாய்லாந்து இளவரசி Maha Chakri Sinindhorn பற்றிய கதையை அறிமுகப்படுத்தினோம். இன்றைய நிகழ்ச்சியில் சீன மக்கள் மட்டுமல்ல நியூசிலாந்து மக்கள் மறக்கவே முடியாத வீரர் ரேவி ஆலே பற்றி கூறுகின்றோம்.
80 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து இளைஞர் ஒருவர் ஆர்வத்துடன் சீனாவுக்கு வந்தார். அப்போது முதல் அவருடைய தலைவிதி சீன மக்களின் விடுதலையுடனும் கட்டுமான லட்சியத்துடனும் ஒன்றிணைந்துள்ளது. அந்த இளைஞர்தான் ரேவி ஆலே. அவர் சீனாவில் 60 ஆண்டுகளாக வாழ்ந்தார்.
ரேவி ஆலே 1897ம் ஆண்டு டிசெம்பர் 2ம் நாள் நியூசிலாந்தின் Springfield என்னும் சிறிய வட்டத்தில் பிறந்தார். அவரது நூறாவது பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் ரேவி ஆலே நினைவுப் பூங்காவை அவரது ஊர் மக்கள் கட்டியமைத்தனர். நீங்கள் கேட்ட பாடல் மக்கள் அவருக்கென இசைத்த பாடலாகும். பூங்காவில் வைக்கப்பட்ட அவருடைய சிலையின் பக்கத்தில் அமைந்த தூபியில் ரேவி ஆலே சீன மக்களின் நம்பகரமான நண்பர். சீன மக்கள் மற்றும் நியூசிலாந்து மக்களால் என்றுமே மறக்கப்பட முடியாதவர் என்ற சொற்கள் செதுக்கப்பட்டன.
ஆலேவின் மரு மகன் டேவி அவரது மாமா பற்றி வர்ணிக்கிறார். அவர் கூறியதாவது.
வாழ்க்கை மீது அவரது குடும்பம் கண்டிப்பான மனப்பான்மை கொண்டது. வாழ்க்கையில் மற்றவருக்கு உதவ வேண்டும். சும்மா இருக்கக் கூடாது என்று டேவி நினைவு கூறினார்.
ரேவி ஆலேயின் தாயார் கிளாரா ஆலே அம்மையார் நியூசிலாந்தில் புகழ் பெற்ற பெண்ணுரிமை இயக்கத்தின் உறுப்பினராவார். குடும்பத்தின் பாதிப்பினால் ரேவி சிறு வயதிலிருந்தே எதையும் எளிதில் விட்டுக்கொடுக்காத பண்பை பெற்றிந்திருந்தார். இதுதான் அவர் சீனாவில் தனது லட்சியத்தை மேற்கொண்டதன் காரணமாகும்.
1937ம் ஆண்டு சீனாவை ஜப்பான் ஆக்கிரமித்தது. அப்போது முதல் சீனத் தொழிற்துறை முழுதும் தேக்க நிலையில் சிக்கியது. விலைவாசி வானளவு உயர்ந்தது. பொருட்பற்றாகுறையால் சீன மக்கள் மிகவும் துன்பப்படுத்தினர். ஆலேயும் எட்கர் ஸ்னோ தம்பதியும் சீன தொழிற்துறையை மீட்டு வளர்க்க முன்மொழிந்தனர். இந்த நோக்கத்துடன் சீன தொழிற்துறை ஒத்துழைப்பு இயக்கம் 1938ம் ஆண்டில் நிறுவப்பட்டது. ரேவி ஆலே அவ்வமைப்பின் தலைமைச் செயலாளராக பணி புரிந்து சீனத் தொழிற்துறையின் வளர்ச்சிக்காக முயற்சித்தார்.
1942ம் ஆண்டு அவர் ஷான்சீ மாநிலத்தில் பைலி பள்ளியை நிறுவினார். தொழில் நுட்பத் தொழிலாளர்களுக்கு இந்த பள்ளி பயிற்சி வகுப்பு நடத்தியது. ஜப்பானின் குண்டு வெடிப்பை தவிர்க்கும் வகையில் பள்ளி ஷான்சீ மாநிலத்திலிருந்து கான்சூ மாநிலத்தின் சான்தென் மாவட்டத்துக்கு இடம்நகர்ந்தது. சான்தென் பைலி பள்ளியின் துணைத் தலைவர் லியூ கோ ச்சுன் மீளாய்வு செய்து கூறியதாவது.
சான்தெனில் ரேவி ஆலே பற்றி கூறினால் அனைவரும் அவரை அறிந்து கொண்டுள்ளனர். மிக மதி்ப்புக்குரிய மனதுடன் அவரை பற்றி நினைவு கூறுகின்றனர் என்றார் அவர்.
நவ சீனா நிறுவப்பட்ட பின் மேலை நாடுகளின் பகைமை மற்றும் தண்டனையின் பின்னணியில் சிவப்பு சீனாவுக்கு ஆதரவளித்த ரேவி ஆலே ஒரு காலத்தில் நியூசிலாந்து அரசால் துரோகி என கருதப்பட்டார். இருந்தாலும் அவர் நியூசிலாந்திலுள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் மறக்கப்பட வில்லை. தொழிற்துறை ஒத்துழைப்பு இயக்கத்துக்காக பாடுபட்ட மக்கள் நியூசிலாந்து-சீன நட்புறவுச் சங்கத்தை நிறுவினர். சங்கத்தின் தலைவர் Eric Livingstone கூறியதாவது.
நாம் பெருமை அடைகின்றோம். சீனத் தலைவர்கள் ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்ட போது நாம் சீனாவின் முக்கிய தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றோம். இதுதான் ரேவி ஆலே எங்கள் இருநாடுகளுக்கு விட்டுச் சென்ற நட்பாகும். அவர் என்றுமே எங்கள் நியூசிலாந்தின் மகத்தான வீரராவார் என்று அவர் கூறினார்.
1987ம் ஆண்டு ரேவி ஆலே பெய்ஜிங்கில் மரணமடைந்தார். அவரின் கடைசி விருப்பத்தின் படி மக்கள் அவருடைய சாம்பலை அவரது இரண்டாவது ஊரான கான்சூ மாநிலத்தின் சான்தெனில் தூவினர். சீனத் தலைவர் தென்சியௌபிங் அவரை நினைவு செய்யும் பட்டுத் துணியில் "மகத்தான சர்வதேச கம்யூனிஸ்ட் வீரர் என்றுமே வாழ்க"என்று எழுதினார்.
இன்று நியூசிலாந்து அல்லது சீன மக்கள் பல்வேறு வடிவங்களில் இந்த மகத்தான வீரரை நினைவு செய்கின்றனர். அவர் பயின்ற தொடக்கப் பள்ளியான Wharenui School ரேவி ஆலே பெயரில் சீன மொழிப் பள்ளியை நிறுவியது. பள்ளியின் தலைவர் லயூ ச்சு ஹுன் கூறியதாவது.
எங்கள் பள்ளி நிறுவப்பட்டு பத்து ஆண்டுகளாகிவிட்டது. ரேவி ஆலேவுக்கும் சீனாவுக்குமிடையிலான பண்பாட்டு ஊற்றுவளத்தினால் நாம் நிதானமாக வளர்ந்துள்ளோம். திரு ரேவி ஆலேயின் எழுச்சியை வெளிக்கொணர்வது எங்கள் கடமையாகும் என்று அவர் கூறினார்.
ரேவி ஆலே சீனாவின் பத்து முக்கிய சர்வதேச நண்பர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை கேட்ட போது ஆலேவின் மரு மகள் Phillipa Reynolds கூறியதாவது.
ஆமாம். நான் மாமாவுக்காக பெருமையடைகின்றேன். அவர் பெற்ற சாதனைகளை நினைக்கும் போது நான் பெருமை அடைகின்றேன். அவர் மகத்தான மனிதராவார் என்று அவர் பெருமையுடன் கூறினார்.
நேயர்கள் இதுவரை சீன மக்கள் மட்டுமல்ல நியூசிலாந்து மக்களும் மறக்க முடியாத வீரர் ரேவி ஆலே பற்றி கேட்டீர்கள்.
இத்துடன் நட்புப் பாலம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. அடுத்த வாரம் திங்கள் கிழமை இடம் பெறும் நட்புப் பாலம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம். வணக்கம் நேயர்களே.