கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, இலங்கை மட்டக்களப்பிலிருந்து டி.பிரவீன் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். வானொலி பொழுதுபோக்கிற்கு மட்டுமே என்றல்லாமல் மக்களுக்கு பயிற்றுவிக்கவும் பயன்படும் கருவி என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்து வருகிறது. அகத்தியர் வளர்த்த தமிழை, வள்ளுவன் போற்றிய தமிழை, கம்பன் பாடிய தமிழை, பாரதி போற்றிய தமிழை வாழ்வாங்கு வாழவைக்கும் சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு எனது பாராட்டுக்கள்.
தமிழன்பன் அடுத்ததாக, கரூர் இரா செல்லமுத்து சீன உணவரங்கம் பற்றி எழுதிய கடிதம். தக்காளி மாவை பயன்படுத்தி இறைச்சி சமைக்க இந்நிகழ்ச்சியில் கற்றுக் கொடுத்தனர். தக்காளி மாவு என்பது இங்கு பொதுவாக கிடைக்காததால் அதை பற்றி அதிகமாக தெரியவில்லை. ஆனால் சுவையான இறைச்சி சமையல் செய்வதற்கு கற்றுக்கொடுத்த முறை நன்றாகவே புரிந்தது.
கலை தொடர்வது, சென்னை ரேணுகாதேவி அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இயற்கை சீற்றங்கள் அடிக்கடி ஏற்படும் நிகழ்வுகளாகி விட்டன. இதனால் மனிதகுலத்தின் உணவு வகைகளில் மிக முக்கிய கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவது இந்நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. மீன்கள் இடம்பெயர்வது, மீன் இனங்கள் அழிவது, அதனால் ஏற்படும் மீன்வள பாதிப்பு, கடலோர மக்களின் வாழ்வாதார பாதிப்பு என பல்வேறு இன்னல்களை பிரிட்டன் கொலம்பிய பல்கலைக்கழக ஆய்வு விளக்கியதை இந்நிகழ்ச்சி விவரித்து அறிய தந்தது.
தமிழன்பன் இனி, பொள்ளாச்சி எஸ்.செந்தில்குமார் நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீன வானொலி நேயரான தோழர் தார்வழி முத்து அவர்களின் குடும்பத்தை பற்றியும், அவரது தொழில், சீன வானொலிக்கு அவரது பங்களிப்பு என பல தகவல்களை இந்நிகழ்ச்சியில் கேட்க முடிந்தது. அவர் பல்வேறு தகவல்களை மனம்திறந்து சிறப்பாக பகிர்ந்து கொண்டார். வானொலி நேயர்களை தூண்டுகின்ற அளவில் அவரது கூற்றுகள் அமைந்தன. பழைய நேயர்களை மட்டுமே பேட்டி காணாது புதிய நேயர்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்க கேட்டுக் கொள்கின்றேன்.
கலை நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஒருவர் பின் ஒருவர் வாய்ப்பு பெறுகிறார். இதில் பங்குகொள்ள விரும்புவோர், நீங்கள் எழுதும் கடிதங்களில் உங்களது செல்லிடபேசி அல்லது தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு, நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம். அடுத்ததாக, காரியாப்பட்டினம் எஸ் ரமேஷ் எழுதிய கடிதம். சீன வானொலி அனுப்பிய பரிசுகள் இனிய நினைவுகளாய் உள்ளன. பிற நிகழ்ச்சிகளை கேட்பதை விட சிறந்த உணர்வு சீன வானொலி கேட்கும்போது கிடைக்கிறது. சீன வானொலி நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டாலே சீனாவை பற்றிய புது தகவல்களை அறியும் ஆவல் தானாகவே பிறக்கிறது. அதுவே நாள்தோறும் நிகழ்ச்சிகளை கேட்கவும் தூண்டுகிறது.
தமிழன்பன் தொடர்வது, நீலகிரி குந்தா மஞ்சூர் ஆர்.சிவகுமார் சீனக் கதை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். பேரரசர் மற்றும் அமைச்சர் தவான் இருவரைப் பற்றிய கதையை கேட்டேன். நாம் ஒருவருக்கு நன்மை செய்தால் என்றாவது ஒரு நாள் அவர்கள் நமக்கு நன்மை செய்வார்கள் என்ற அறநெறியை அறிந்து கொண்டோம். கதை மூலம் அறநெறி கற்பிக்கும் சீன வானொலிக்கு நன்றிகள்.
கலை இனி, விழுப்புரம் எஸ்.சேகர் நவ சீனாவின் முக்கிய பங்கு பற்றி எழுதிய கடிதம். நவ சீனா ஆற்றுகின்ற முக்கிய பங்கு அளவிட முடியாதது. 171 நாடுகளில் தூதாண்மை உறவு, ஆசிய கண்டத்தில் நட்புறவு நாடுகளில் முதன்மை, வெளியுறவுக்கு பஞ்சசீலக் கொள்கை, அனைத்துலக பிரச்சனைகளை கையாள பங்களிப்பு, உலக நிதி நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்க முயற்சி, அமைதி வளர்ச்சி பாதையில் வழிநடப்பது என உலக அரங்கில் சீனாவின் பங்களிப்பு அளவிட முடியாததாக உயர்ந்து வருகிறது.
தமிழன்பன் அடுத்தாக, ஆரணி எஸ்.சதீஸ் தனது மனம் கவர்ந்த சீன வானொலி நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். அறிவை வளர்க்கும் அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியும், கேள்வியும் பதிலும் மிகவும் மாணவரான எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகள். நான் சீன வானொலியை கேட்க தொடங்கியதிலிருந்து எனது குடும்பத்தார் அனைவரும் தற்போது இணைந்துள்ளனர். இதுவே, சிறியோர், இளையோர், முதியோர் என அனைவரையும் கவரும் தன்மையை சீன வானொலி கொண்டிருப்பதை காட்டுகிறது
கலை தொடர்வது, பாப்பம் பாளையம் பி.டி.சுரேஷ் குமார் மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். நோபல் பரிசு பெற்றோரில் இந்தியர் ஒருவரும் சீனர் ஒருவரும் இடம்பெற்றிருந்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது. வளர்ந்த அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இணையாக சீனாவும் இந்தியாவும் வளர்ந்து வருவதை உலகளவில் முதன்மை பெறும் இது போன்ற நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
தமிழன்பன் இனி, சிவகங்கை எஸ்.புஸ்பராசம் சீனத் தமிழொலி இதழ் பற்றி அனுப்பிய கடிதம். நீங்கள் அனுப்பிய சீனத் தமிழோலி இதழில் இடம்பெற்றிருந்த திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் அழகிய அரண்மனைகள், பழையக் கட்டிடங்கள், அவற்றின் கலைநுட்பங்கள், மலைத் தொடர்கள், நீர்வீழ்ச்சிகள் எல்லாம் மனம் கவர்ந்தன. சீன மண்ணின் அதிக தகவல்களை அள்ளிதருவதாக இது அமைந்தது. சீன வானொலி தமிழ்ப் பிரிவு இந்திய-சீன நட்புறவின் பாலமாக என்றுமே விளங்க வாழ்த்துக்கள்.