1860 முதல் 1912ம் ஆண்டு வரையான காலம் பெய்ஜிங்கின் அண்மைய காலமாகும். 1860இல் பெய்ஜிங் ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட பின் வெளிநாட்டுத் தூதாண்மை அதிகாரிகளுக்கும் மதப் பரப்புரை செய்பவருக்கும் பெய்ஜிங் நகரில் நுழையும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது முதல் நகரின் எல்லா இடங்களிலும் ஆலயங்கள் கட்டியமைக்கப்பட்டன. தூதரகங்கள் துங்சியோமின்சியான் சாலையில் குவிந்து அமைந்தன. 1860ம் ஆண்டில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கூட்டுப் படைகள் பெய்ஜிங்கை ஆக்கிரமித்தன.
1890ம் ஆண்டு எட்டு வெளிநாடுகளின் கூட்டுப் படைகளால் பெய்ஜிங் சின்னாபின்னமாக்கப்பட்டது. 1911ம் ஆண்டு சிங்ஹெய் புரட்சி நடைபெற்ற பின் சீன தேசம் அதே ஆண்டு ஜனவரி முதல் நாள் நாடாக நிறுவப்பட்டது. அதன் தலைநகர் நான்சிங் ஆக இருந்தது. அதே ஆண்டு மார்ச் திங்கள் தலைநகர் நான்சிங்கிலிருந்து பெய்ஜிங்கிற்கு இடம் மாறியது. சிங்குவா பல்வக்கலைகழகம், யேசிங் பல்க்கலைகழகம், பீங்கிங் பல்கலைக்கழகம், பூஃரென் பல்கலைக்கழகம், சியேஹொ மருத்துவவியல் கழகம் உள்ளிட்ட உயர் நிலை கல்வி நிறுவனங்கள் அப்போது பெய்ஜிங்கில் நிறுவப்பட்டன.
1937ம் ஆண்டு ஜுலை 7ம் நாள் நிகழ்வுக்கு பின் அப்போது பெய் பிங் என அழைக்கப்பட்ட பெய்ஜிங் ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டது. சீன மக்களின் நாட்டில் தற்காலிக பொம்மை அரசு நிறுவப்பட்டது. நகரின் பெயர் பெய்ஜிங் ஆக மாற்றப்பட்டது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21ம் நாள் ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்ததாக அறிவித்த பின் கோமின்தாங் கட்சியின் தலைமையின் கீழுமுள்ள படைப் பிரிவுகள் பெய்ஜிங்கில் நுழைந்தன. அதற்குப் பின்னர் நகரின் பெயர் மீண்டும் பெய்பிங் ஆக மாற்றப்பட்டது.
1949ம் ஆண்டு ஜனவரி 31ம் நாள் கோமின்தாங் ஜெனரல் பூஃச்சோயி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டார். பின்னர் அவரது தலைமையில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோமின்தாங் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் சீன மக்கள் விடுதலை படை பெய்பிங் மாநகரில் நுழைந்தது. அப்போது பெய்பிங் விடுதலை பெற்றது. 1949ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதலாவது தேசிய முழு அமர்வு நடைபெற்றது. சீன மக்கள் குடியரசின் தலைநகர், நாட்டுப் பண், தேசிய கொடி ஆகியவை தொடர்பான தீர்மானம் இம்முழு அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெய்பிங் மீண்டும் பெய்ஜிங் ஆக பெயர் மாறியது. 1949ம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் சீன மக்கள் குடியரசின் மத்திய அரசாங்கம் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது.