கடந்த நிகழ்ச்சியில் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் பெய்ஜிங் மாநகர் பற்றி முன்வைத்த வினாக்களில் பெய்ஜிங்கின் அண்மைக் கால நிகழ்வுகள், பெய்ஜிங் பெயர் உருவாக்கம், பெய்ஜிங் மாநகரின் நகர கட்டமைப்பு, மதச் சுந்திரம் முதலிய அம்சங்கள் பற்றி விபரமாக விளக்கிக் கூறினோம். இன்றைய நிகழ்ச்சியில் செல்வம் பெய்ஜிங் மாநகர் பற்றி கேட்ட கேள்விகளுக்கு தொடர்ந்து விடை அளிக்கின்றாம். நிகழ்ச்சியில் முக்கியமாக பெய்ஜிங் மக்கள் தொகை, தனிச்சிறப்பியல்பு மிக்க உறைவிட கட்டமைப்பு, பொருளாதாரத்தை ஆதரிக்கும் நிதித் துறைப் பரவல் ஆகியவை பற்றி கூறுகின்றோம். தி. கலையரசியான நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன். கேட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
பெய்ஜிங் சீனாவின் 56 தேசிய இன மக்களும் வாழ்கின்ற மாநகரமாகும். சிறுபான்மை தேசிய இன மக்கள் தொகை 4 இலட்சத்து 80 ஆயிரத்து 384 ஆகும். இது நகரின் மொத்த மக்கள் தொகையில் 3.84 விழுக்காடு வகிக்கின்றது. இந்த புள்ளிவிபரம் 2007ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து தெரிய வந்துள்ளது. ஹான் இனத்தவரின் எண்ணிக்கை நகரின் மக்கள் தொகையில் 95.69 விழுக்காடாகும். மென் இனத்தவர், மங்கோலிய இனத்தவர், குவெய் இனத்தவர் மற்றும் கொரிய இனத்தவரின் மக்கள் தொகை சராசரியாக பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.
பண்பாட்டு புகழ் பெற்ற நகரம் என்ற புகழ் பெய்ஜிங்கையே சாரும். வரலாற்றில் 5 வம்சங்களும் பெய்ஜிங் நகரம் தலைநகராக இருந்துள்ளது. மூவாயிரம் ஆண்டு கால அரசு நிலை வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்ட நகரமாக பெய்ஜிங் புகழ் பெற்றுள்ளது. பெய்ஜிங்கில் அரசமாளிகைகள், அரச குடும்பப் பூங்காக்கள், கோயில்கள், கல்லறைகள் ஆகியவை பல்வகை கலை வடிவங்களில் அமைந்துள்ளன. உலகில் புகழ் பெற்ற பெய்ஜிங் அரண்மனையின் இன்னொரு பெயர் பாஃர்பிடன் சிட்டி அதாவது தடைசெய்யப்பட்ட நகரம் என்பதாகும். இது மிங் சிங் வம்சக்கால மன்னர்களால் அரச மாளிகையாக பயன்படுத்தப்பட்டது. 24 மன்னர்கள் இங்கே வாழ்ந்து ஆட்சி புரிந்தனர்.
சீன தேசத்தின் மதிப்புக்குரிய பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றான தியென்தான் என்ற சொர்க்கக் கோவில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ் பெற்றது. மிங், சிங் இரண்டு வம்சக்கால மன்னர்கள் அமோக அறுவடை பெற வழிபாடு செய்யும் இடமாக தியென்தான் பயன்படுத்தப்பட்டது. பெய்ஜிங்கில் புகழ் பெற்ற சுற்றுலா இடங்களில் ஒன்றான யூன்மின்யுவான் சீனாவில் மிகவும் புகழ் பெற்ற அரசக் குடும்பப் பூங்காவாக பாராட்டப்படுகிறது. அதில் இடம் பெறும் காட்சியிடங்கள் மிக உயர்ந்த கலை மதிப்பு கொண்டுள்ளன. பல்லாயிரம் பூங்காக்களின் பூங்கா என்ற பெருமை இதற்கு உண்டு. மிங்வம்சத்தின் 13 கல்லறைகள் பெய்ஜிங்கிலுள்ள மிகப் பெரிய மன்னர் குடும்ப கல்லறை தோட்டமாகும். மின் வம்சக்காலத்தின் 13 மன்னர்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் இக்கல்லறை தோட்டத்தில் உள்ளன.