பெய்ஜிங் மாநகரிலுள்ள ring road எனப்படும் வட்டவழிச் சாலைகள் சாலை வசதி வலைப்பின்னல்களக்கு அடிப்படையை உருவாக்கியுள்ளன. நகருக்குள் வந்து செல்லும் சாலைகளும் பாதைகளும் இந்த வலைப்பின்னலின் பரவல் படி நீண்டு செல்கின்றன. நகரம் வளர்ந்து விரிவாகியதுடன் பெய்ஜிங்கை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வட்ட வழிச் சாலைகளின் எண்ணிக்கை 6 ஆகும். பதிவேட்டின் படி 2007ம் ஆண்டு வரை பெய்ஜிங் மாநகரின் சாலைகளின் நீளம் 25 ஆயிரத்து 765 கிலோமீட்டரையும் நகரின் இருப்புப் பாதைகளின் நீளம் 962 கிலோமீட்டரையும் எட்டியது. பெய்ஜிங்கிலிருந்து வட சீனாவின் ஹெலுங்சியான் மாநிலத்தின் தலைநகர் ஹார்பிங்குச் செல்லும் இருப்புப் பாதை, பெய்ஜிங்கிலிருந்து பொருளாதார மற்றும் வர்த்தக மாநகரான ஷாங்காய்க்குச் செல்லும் இருப்புப் பாதை, பெய்ஜிங்கிலிருந்து தென் சீனாவின் குவாதுங் மாநிலத்தின் தலைநகர் குவான் சோவுக்குச் செல்லும் இருப்புப் பாதை உள்ளிட்ட பல இருப்புப் பாதைகள் பெய்ஜிங்கை மற்ற பல இடங்களுடன் இணைக்கின்றன. இது தவிர, நகர இருப்புப் பாதை கட்டுமானத்தில் பெய்ஜிங் மாநகரில் இதுவரை 8 சுரங்க மற்றும் நகர இருப்புப் பாதை நெறிகள் உள்ளன. 1969ம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் போக்குவரத்துக்கு இறங்கிய சீனாவின் முதலாவது சுரங்க இருப்புப் பாதை பெய்ஜிங்கின் முதலாவது இலக்க தரைக்கடி இருப்புப் பாதையாகும். அதன் தூரம் சுமார் 30.4 கிலோமீட்டராகும். வழியில் 23 நிறுத்தங்கள் அமைந்துள்ளன. பிங்கோ பூங்கா நிறுத்தம் அதன் புறப்படும் நிலையமாகும். ஸ்குவெய் அதன் சென்றடையும் நிறுத்த நிலையமாகும்.
பெய்ஜிங்கில் சுரங்க தொடர்வண்டி போக்குவரத்தில் இரண்டாம் இலக்க தரைக்கடி இருப்புப் பாதை நகரை சுற்றி வளைந்து பயணிக்கும் வட்ட வழி இருப்புப் பாதையாகும். அதன் நீளம் 23.1 கிலோமீட்டரை எட்டும். மொத்தம் 18 நிறுத்தங்கள் இந்நெறியில் அமைக்கப்பட்டுள்ளன. இது நகரை சுற்றி வட்டவடிவில் பயணம் செய்தால் அதன் தொடக்க நிறுத்தமும் சென்றடையும் நிறுத்தமும் ஒரே நிலையமாக அமைந்துள்ளது. அதன் பெயர் சீ ச்சி மன் என்பதாகும்.
பெய்ஜிங் 13வது இலக்க சுரங்க இருப்புப் பாதை பெரும்பாலான நிலத்திற்கு அடியில் அல்லாமல் நிலத்திலும் மேம்பாலத்திலும் செல்கின்றது. அதன் நீளம் 40.5 கிலோமீட்டராகும். மொத்தம் 16 நிறுத்தங்கள் அதில் இடம் பெறுகின்றன. அது புறப்படும் மற்றும் சென்றடையும் நிறுத்தம் சீ ச்சி மன்.
பெய்ஜிங்கின் 8வது இலக்க சுரங்க இருப்புப் பாதை ஒலிம்பிகின் துணை போக்குவரத்து நெறியாக அழைக்கப்படுகின்றது. அது முழுமையாக கட்டியமைக்கப்பட வில்லை. இதுவரை 4 நிறுத்தங்கள் மட்டுமே. 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது இது இயங்க தொடங்கியது.
பெய்ஜிங் விமான நிலையத்துக்கு செல்லும் சுரங்க இருப்புப் பாதையின் நீளம் 27.3 கிலோமீட்டர். துங்ச்சிமன் நிறுத்தத்திலிருந்து தலைநகர விமான நிலையத்தின் 3வது முனையத்துக்கு நேரடியாக செல்லலாம்.
பெய்ஜிங்கில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 60வது ஆண்டை கொண்டாடும் வகையில் கடந்த அக்டோபர் திங்களில் இயங்க தொடங்கிய 4 மாவட்டங்களை தாண்டி செல்லும் 4வது இலக்க சுரங்க இருப்புப் பாதை 28.177 கிலோமீட்டர் தூரம் வரை செல்கின்றது. நகர இருப்புப் பாதையின் வளர்ச்சி பற்றி இதுவரை நாம் விபரமாக விளக்கமளித்தோம். Batong line பற்றி குறிப்பில் சுரங்க இருப்புப் பாதை மூலம் பயணம் செய்வதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை மிகவும் அறிந்து கொள்ள எதிர்பார்க்கிறீர்கள் தானே? பெய்ஜிங்கில் சுரங்க இருப்புப் பாதை மூலம் பயணம் மேற்கொண்டால் ஒரு முறை ஒருவருக்கு 2 யுவான் தேவை. இந்திய ரூபாயை கணக்கிட்டால் 2 யுவானுக்கு 10 ரூபாய் சமமாகும்.