திருச்சி அண்ணாநகர் வீட்டி. இரவிச்சந்திரன்
நடைபெறவுள்ள 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய குழுவின் 3வது கூட்டத்தொடரில் பெரும் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினைகள் குறித்து, சீன வானொலியின் 41 மொழி்களின் இணையதளங்கள் மூலம், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பது குறித்து விளக்கம் செவிமடுத்தேன். இதற்கு நேயர்கள் ஆக்கப்பூர்வமாக பதில் அளித்திருப்பது சீனாமீது அவர்கள் காட்டும் ஈடுபாட்டினை காட்டுகிறது. பரந்த அளவில் நேயர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது சமுதாய நலன் தொடர்பான பிரச்சனைகள் ஆகும்.
வளவனுர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்,
பிப்ரவரித் திங்கள் 28 ஆம் நாள் இடம்பெற்ற செய்திகளைக் கேட்டேன். நிகழ்ச்சியில், மார்ச் திங்களின் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் சீனாவின் இரு முக்கியக் கூட்டத் தொடர்கள் பற்றிய சில தகவல்களை வழங்கினீர்கள். சீனத் தலைமை அமைச்சர் வழங்க இருக்கும் சீன அரசுப் பணியறிக்கையின் உள்ளடக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றேன். இவ்விரு கூட்டத்தொடர்கள் பற்றிய விரிவான தகவல்களை வழக்கம்போல வழங்குவீர்கள் என உறுதியாக நம்புகின்றேன்.
விழுப்புரம், எஸ். பாண்டியராஜன்
சீன மகளிர் நிகழ்ச்சியில் இணையதள வல்லுநர் பற்றிய செய்தியை வழங்கிவிட்டு அடுத்ததாக இசை நிகழ்ச்சியில் மாதுளம்பூ என்ற பாடல் வழங்கக் கேட்டேன். மாதுளை என்றாலே பெண்கள் சார்ந்த பழம், பூ ஆகும். இன்றைய நிகழ்ச்சி எதிர்பாராமல் தற்செயலாக இப்படி ஒற்றுமையாக அடுத்தடுத்து அமைந்தது, சிறப்பான ஓர் அமைவாக இருந்தது. பாராட்டுக்கள்.
முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர்
வசந்தவிழா காலத்தின் போது சீனாவில் இருப்புப்பாதை மூலம் பயணம் மேற்கொண்ட மக்கள் பற்றிய செய்திகளை அறிந்தேன். 22 நாட்களில் மட்டுமே ஏறக்குறைய பத்து கோடிக்கு மேற்பட்ட மக்கள் பயணம் செய்தது பெரிய சாதனையாகவே கருதுகிறேன். இதற்காக சீன அரசு மக்களின் வசதியை கருத்தில் கொண்டு முன்பதிவுகள், கூடுதலான தொடர்வண்டிகள் என உரிய ஏற்பாடுகளை செய்திருப்பது பயனுள்ளதாக அமைந்ததை அறியமுடிகிறது.
பரசலூர் PS.சேகர்
பிபரவரி 14ம் நாளன்று சீன வானொலி வழங்கிய நட்புப்பாலம் நிகழ்ச்சியை கேட்டேன். வேலூரில் அமைந்துள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் கல்வித்திட்டம், சீனாவின் சென் ஜு பல்கலைகழகத்துடன் இணைந்து கல்விபுகட்டும் திட்டம் ஆகியவை பற்றி வேந்தர் விஸ்வநாதனுடனான கலந்துரையாடல் பல தகவல்களை அரியத்தந்தது. இருதரப்புப் பல்கலைகழகங்களிலும் இந்திய சீன மாணவர்கள் கல்வி கற்றுவருவது பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்று ஆசிய நாடுகளிலும் ஒன்றுபட்டு செயல் பட நினைப்பது நன்று.
பாண்டிச்சேரி N.பாலகுமார்
செய்தி விளக்கம் நிகழ்ச்சி வழியாக சீனாவில் சொந்தமாக தொழில் புரியும் இளைஞர்கள் பற்றிய தகவல்களை கேட்டேன்.
கால் காசாக இருந்தாலும், அரசாங்க காசாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை, காலபோக்கில் மறைந்து, சொந்தமாகத் தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது பரவலாக உலமெங்கும் பரவி வருவதை, காணமுடிகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் ஒருசிலர் மட்டுமே சொந்தமாகத் தொழில் துவங்கி, மாபெரும் வெற்றி பெற்றார்கள். முதலில் தன்னம்பிக்கை வேண்டும். நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கைதான் தொழிலுக்கான மூலதனம். தற்போது உள்ள போட்டி உலகில், நம்பிக்கையோடு சொந்தமாக தொழில் துவங்கி, வெற்றி பெற்றவர்களை, நாம் சாதனையாளராகவே நினைக்கவேண்டும்.
புதுக்கோட்டை ஜி வரதராஜன்
செய்தி விளக்கத்தில் தொடர்புடைய புள்ளி விபரங்களின் படி சீனாவில் சொந்தமாக தொழில் நடத்தும் பட்டதாரிகள் பற்றிக் கூறக் கேட்டேன். இந்தக்கால இளம் வாலிபர்கள் பல வகைத் இன்னல்களை அனுபவித்தபோதும் அனுபவங்களை பெற்றுள்ளபோதும் சிலர் தொழிலை கைவிட்டுவிட்டுவிட சிலர் இந்த இலட்சியத்தில் உறுதியாக செயல்பட்டது பாராட்டுக்குரியது.
பெருந்துறை பல்லவி. K.பரமசிவன்
சீனாவின் சின்ச்சியாங்கில் ஈலி பள்ளத்தாக்குப் பிரதேசத்தில், 3000க்கு மேலான வீடுகள் இடிந்து 70 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து மனம் வருந்தினேன். இச்சமபவத்தால் அப்பிரதேசத்தில் சுமார் 5000 வீட்டு வளர்ப்பு விலங்குகள் உயிரிழந்த செய்தியும் அதிர்ச்சியைத் தருகிறது. இதன் சேத மதிப்பு 10 கோடி யுவானை தாண்டியிருப்பது பெரும் இழப்பாகும். அரசின் உதவியால் அங்கு இயல்புநிலை ஏற்பட்டுள்ளதை அறிந்தேன்.
சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
ஒரு நாடு அபரிதமான வளர்ச்சி பெறவேண்டுமெனில் அந்நாடு சிறந்த கல்வி வளர்ச்சியினை பெற்றிருக்க வேண்டும்.
கல்வி வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டு வரையிலான நாட்டின் கல்வி சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கான வரைவு திட்டத்தை சீன கல்வி அமைச்சகம் வெளியிட்டு இருப்பதை அறிந்தேன் மேலும் இந்த நூற்றாண்டின் சீனாவின் முதல் கல்வி திட்டமான இத்திட்டம் சீனாவின் கல்வித்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மேலும் மனித வளத்தில் சீனா விரைவில் முதலிடம் பிடிக்கும் என்பதில் மாற்றம் இல்லை.
ஊட்டி; எஸ்.கே.சுரேந்திரன்
பிப்ரவரி 22 ஆம் நாள் திங்கள் கிழமை அன்று ஒலிபரப்பான சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியைக் கேட்டேன். 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 24 ஆம் நாள் குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த தலைசிறந்த மாணவர்களுக்கு சீன துணைத் தலைமை அமைச்சர் லூ நன் சி தேசிய நிலை புலமைப் பரிசினை முதன் முறையாக மக்கள் மகா மண்டபத்தில் வழங்கிய நிகழ்வை அறிந்தேன். தாழ்ந்த வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த உயர் கல்வி மாணவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை வழங்கிய இந்த வரலாற்று நிகழ்வை அவர்கள் மறப்பார்களா?.