கலை: நிகழ்ச்சியில் முதல் கடிதம், இலங்கை புதிய காத்தான்குடி ஹெச். எம். புஷ்ரா எழுதியது. தொடர்ந்து சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டு வருகிறேன். இப்போது சீன வானொலி நிகழ்ச்சிகளை பற்றி இங்கே பலர் பேசுவதை கேட்க பெருமையாக இருக்ககிறது. பள்ளிப் பாடத்தில் படித்த ஒரு நாட்டிலிருந்து எமது மொழியில் நிகழ்ச்சி வழங்கப்படுவதை கேட்க எங்களுக்கு மகிழ்ச்சியே. சீன வரலாற்றுச் சுவடுகள் உட்பட பல சுவையான தகவல் தொகுப்புகள் இடம்பெறும் நிகழ்ச்சிகள் எமக்கு மிகவும் பிடித்துள்ளன.
க்ளீட்டஸ்: அடித்து அறிவியல் உலகம் நிகழ்ச்சி குறித்து சிறுநாயக்கன்பட்டி கே. வேலுச்சாமி எழுதிய கடிதம். சீன அறிவியலாளர்கள் செயற்கைக் கருவூட்டலில் செய்த சாதனையை பற்றி தமிழன்பன் வழங்கிய நிகழ்ச்சியை கேட்டேன். பன்றியை செயற்கைக் கருவூட்டல் மூலம், குரோமோசோம்களை பிரித்தெடுத்து ஆண் அல்லது பெண் பன்றிக்குட்டிகளை கருவாக்கி ஈன்றெடுக்க முடியுமென செய்து சாதனை படைத்தது சீன அறிவியல் வரலாற்றில் புதிய மைல் கல் எனலாம்.
கலை: அடுத்து ஈரோடு எம். சி. பூபதி எழுதிய கடிதம். ஜனவரி திங்கள் 26ம் நாள் ஒலித்த நிகழ்ச்சியில் இதயக்கமலம் என்ற திரைப்படத்திலிருந்து, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல என்ற பாடலை ஒலிபரப்பினீர்கள். அதற்காக நன்றி. நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஊட்டி நேயர் கே. கே, போஜன் அவர்கள் தமது அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டார். நன்றி.
க்ளீட்டஸ்: நிலவுத் திருநாள் பற்றிய இசை நிகழ்ச்சி குறித்து ஆரணி. பொன். தங்கவேலன் எழுதிய கடிதம். தமிழகத்தில் "நிலா நிலா ஓடிவா" என்ற சிறார் பாடல் உண்டு. "அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா" என்று காதலனும் " அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்" என்று காதலியும் பாடும் திரைப்படங்களும் உண்டு. அந்த வகையில் நிலவுத் திருநாள் என்ற விழாவை சீனாவில் கொண்டாடும் வழமை பற்றி இசை நிகழ்ச்சியில் திலகவதி அவர்கள் வழங்கினார். நிலவு திருநாள் பற்றிய கதை, நிலா கேட் வழங்கும் விதம், நிலா பற்றிய சீன இசைப்பாடல் என நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.
கலை: சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி குறித்து மெட்டாலா எஸ். பாஸ்கர் எழுதிய கடிதம். எள்ளு சூப் எப்படி தயாரிப்பது என்பது பற்றிய விரிவாக விளக்கினீர்கள். செய்து பார்க்கத் தூண்டிய புது வகையான உணவாக இருக்கிறது. மேலும் வைட்டமின் ஈ சத்து கொண்ட கறுப்பு எள்ளு, ஈரல் சிறுநீரகம் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது. உடல் மூப்பையும் தாமதம் செய்யும் என்ற கூடுதலாக துணுக்குகளை நிகழ்ச்சியில் வழங்கியதற்கு பாராட்டுக்கள்.
க்ளீட்டஸ்: அதே நிகழ்ச்சி பற்றி கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். எள்ளு சூப் பற்றிய எளிய தயாரிப்பு முறையை கேட்டேன். பலவகை சூப்களை நாம் அறிவோம். ஆனால் எள்ளு சூப் பற்றி இந்த நிகழ்ச்சியில்தான் அறிந்தோம்.
"இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு" என்றொரு பழமொழி உண்டு. இளைத்த உடல் கொண்டோர் எடை கூட எள்ளை உட்கொள்ளவேண்டும், உடல் பருமன் கொண்டோர் எடை குறைய கொள்ளை உட்கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். உடல் நலத்துக்கு எள்ளும், கொள்ளும் பலன் தரக்கூடியவை. செலவும் குறைவே.
கலை: அடுத்து செந்தலை என். எஸ். பாலமுரளி எழுதிய கடிதம்.
செய்திகளில், ஓரளவு வசதியான சமூகத்தை உருவாக்குவதில் முன்னேற்றம் என்பது பற்றி கேட்டேன். 2008ம் ஆண்டு சீனாவில் பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய மாநகரங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இந்தத் திட்டப்பணி 90% விழுக்காடு நிறைவேறியுள்ளது. வடகிழக்கு மற்றும் மத்திய பகுதியில் முறைடே 70 விழுக்காடும், 66 விழுக்காடும் நிறைவேறியிருப்பது வசதியான சமூகத்தை உருவாக்குவதில் சீனா பெர்ற முன்னேற்றத்தை காட்டுகிறது.
க்ளீட்டஸ்: மலர்ச்சோலை நிகழ்ச்சி குறுத்து மதுரை, திருமங்கலம் பி. கதிரேசன் எழுதிய கடிதம். காலை உணவுக்கு மூன்று கோப்பை என்ற தகவல் மலர்ச்சோலையில் இடம்பெற்றது. கற்றாழைச் சாறு ஒரு கோப்பை, ஊட்டச்சத்து அடங்கிய பானம் ஒரு கோப்பை, மூலிகைச்சாறு ஒரு கோப்பை என மூன்று கோப்பையும் காலை உணவாக அருந்தினால் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலன் தரும் என்ற தகவல் அருமை.
கலை: அடுத்து பெரியகாலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம். இந்திய திரைப்பட விழா தொடங்கப்பட்டது பற்றியும், பின்னணித் தகவல்களையும் நா. கடிகாச்சலம் அவர்கள் வழங்கக் கேட்டோம். 47 நாடுகளைச் சேர்ந்த 57 திரைப்படங்கள், அதிலும் குறிப்பாக கோதுமை என்ற சீன திரைப்படமும் பங்குகொண்டதை அறிந்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். கடிகாசலம் அவர்களுக்கு நன்றி.
க்ளீட்டஸ்: தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி சாத்தூர் சி. மனோகரன் எழுதிய கடிதம். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி, பயனுள்ளதோர் நிகழ்ச்சி. சீன மொழியை வானொலி மூலம் கற்றுக்கொள்வதோடு, தாங்கள் அனுப்பிய புத்தகம் மூலமாகவும் கற்றுக்கொள்ள முடிகிறது. நல்லதொரு நிகழ்ச்சியை வழங்கும் நிலையத்தாருக்கு நன்றி.