இந்த கடிதப் பகுதியில் 11 பேர் அவர்களின் நிகழ்ச்சிகளை கேட்பது பற்றிய கருத்தை தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு மிக்க பாராட்டும் நன்றியும்
கலை: சீனாவில் ஏற்பட்ட பனிப்பொழிவு குறித்து பகளாயூர் பி. ஏ. நாச்சிமுத்து எழுதிய கடிதம். வட சீனாவில் பல்வேறு இடங்களில் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்ப்பிரிவின் செய்திகள் மூலம் அறிந்துகொண்டேன். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என்று நம்புகிறேன். இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் இத்தகைய இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடுகளும், புவி வெப்பமேறலும் உலகின் காலநிலையை மாற்றியிருக்கின்றன.
க்ளீட்டஸ்: ராமபாளையம் ஆர். கேசவன் எழுதிய கடிதம். சீனாவில் மக்கள் உள்நாட்டில் சுற்றுலா மேற்கொள்ளும் விகிதம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறதாக செய்திகள் மூலம் அறிந்தேன். உள்நாட்டுச் சுற்றுலா அதிகரிப்பது மகிழ்ச்சிக்குரியதே. சீனாவில் சுற்றுலாத்தலங்களுக்கான மவுசும், வரவேற்பு குறையவில்லை என்பதை இது உணர்த்துகிறது.
கலை: பரசலூர் பி. எஸ். சேகர் எழுதிய கடிதம். ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துன்பப்படும் மக்களுக்கு உதவ சீன அரசு மீட்புதவிக்குழுவை அனுப்பி, மருந்து மற்றும் அவசியத் தேவை பொருட்களை அனுப்பியது பற்றி நமது செய்திகள் மூலம் விரிவாக அறிந்துகொண்டோம். சிறிய நாடோ பெரிய நாடோ, இயற்கைப் பேரிடர் எங்கு நிகழ்ந்தாலும் சீனா உடனே உதவிக்கரம் நீட்டுவது பாராட்டுக்குரியது.
க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடி ஒய். எல். எம். ராபிக் எழுதிய கடிதம். அழகான சிச்சுவான் பொது அறிவுப்போட்டியில் வெற்றி பெற்று சீனாவில் பயணம் மேற்கொண்ட தமிழக நேயர் கண்ணன்சேகர் அவர்களின் அனுபவக் கட்டுரையை சீனத் தமிழொலி இதழில் இடம்பெறச் செய்ததற்கு நன்றி. அவரது அனுபவத்தை வாசிக்கையில் நானே சீனாவில் இருந்து பார்த்து ரசித்தது போன்ற உணர்ந்தேன். அவருக்கும், தமிழொலி இதழுக்கும் நன்றி.
கலை: மலர்ச்சோலை நிகழ்ச்சி குறித்து குருணிகுளத்துப்பட்டி சொ. முருகன் எழுதிய கடிதம். ஜனவரி 11ம் நாள் இடம் பெற்ற மலர்ச்சோலை நிகழ்ச்சியின் மூலம் சீனாவில் வருகின்ற கல்வியாண்டு முதல் மழலையர் கல்வியை இலவசமாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளதை அறிந்தேன். நாங்கள் பார்ப்பது பணத்தைச் சுரண்டும் பள்ளிகளைத்தான். இலவசக் கல்வியை வழங்கும் சீனாவைப் போல் எல்லா நாடுகளும் மழலையர் பள்ளி முதலே இலவசக் கல்வியை வழங்கவேண்டும்.
க்ளீட்டஸ்: குடியாத்தம் டி. சுடர்க்கொடி எழுதிய கடிதம். ஜனவரி 14ம் நாளன்று, பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை மாணவ மாணவியர் மூலம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது சீன வானொலி தமிழ்ப்பிரிவு. பலகுரல் பேச்சு, குடிபோதை மற்றும் வரதட்சணை ஒழிப்பு, ஹைக்கூ கவிதை என பல்சுவையுடன் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. சேவலுக்கு முன்பாக விழித்து நிகழ்ச்சிகளை அமைத்து உதவிய நேயர் திருச்சி அண்ணா நகர் வி.டி ரவிச்சந்திரனுக்கு பாராட்டுக்கள்.
கலை: சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சி குறித்து எஸ். கே. பாப்பம்பாளையம் பி.டி.சுரேஷ்குமார் எழுதிய கடிதம். ஜனவரி 11ம் நாளன்று வானொலியில் இடம்பெற்ற சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியின் மூலம் 1989ம் ஆண்டு சீனாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்க் வந்ததை அறிந்தேன். 96 வகை விலங்குகள் முதல் நிலை விலங்குகளாக அறிவிக்கப்பட்டதையும், விலங்குகளுக்கு உரிய சட்டப் பாதுகாப்பை வழங்கிய சீனாவின் முயற்சிகளையும் அறியமுடிந்தது.
க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை ஒட்டமாவடி ஈ.எல்.எம்.இர்ஷாத் எழுதிய கடிதம். நண்பர் ஒருவர் மூலமாக சீனத் தமிழொலி இதழ் எனக்கு கிடைத்தது. அதன் பின் நான் இணையதளத்தினூடாக சீன வானொலியின் தமிழ் நிகழ்ச்சிகளை கேட்டேன். சீன மொழியை கற்கும் ஆர்வம் மட்டும் இருந்து வழிதெரியாமல் நின்ற எனக்கு சீன வானொலி வழங்கும் நிகழ்ச்சிகளின் மூலம் கற்கும் வாய்ப்பை
நண்பர் அறிமுகப்படுத்தினார். சீன வானொலியின் புதிய நேயராக இணைந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்.
கலை: அடுத்து கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி ஆரணி இ. நரேஷ் எழுதிய கடிதம். நாச்சிமுத்து அவர்களும், கலையரசி அவர்களும் சீனாவின் எரியாற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு, எரியாற்றல் சிக்கனம் ஆகியவை பற்றி உரையாடினர். மின்னாற்றல், சூரிய ஆற்றல், இயற்கை எரிவாயு, அணு ஆற்றல் ஆகியவை பற்றி மிக விரிவான தகவல்கள் வழங்கப்பட்டன. நன்றி.
க்ளீட்டஸ்: ஈரோடு எம். சி. பூபதி எழுதிய கடிதம். தமிழ்ப்பிரிவின் ஒலிபரப்பை பல ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். முன்பு தமிழ்ப்பிரிவில் பணியாற்றிய எஸ். சுந்தரன், பி. லூசா அம்மையார், மலர்விழி அம்மையார் ஆகியோர் நலமாக உள்ளார்களா??
கலை: நேயர் நேரத்தில் கேள்வி பதிலா? சரி. முதலில் தங்கள் கரிசனைக்கு நன்றி பூபதி அவர்களே. நீங்கள் கேட்ட அனைவரும் நலமாகவுள்ளனர். அவ்வப்போது தமிழ்ப்பிரிவின் கொண்டாட்டங்களில் அவர்கள் கலந்துகொள்வதுண்டு. அண்மைக்காலமாக மலர்விழி அம்மையாரும், தமிழ்ச்செல்வமும் எங்களுக்கு உதவ வாரம் இருநாட்கள் வருகின்றனர்.