இப்போது நேயர் நேரம் நிகழ்ச்சி. கலையரசியாகிய நானும், தமிழன்பனும் உங்கள் கருத்து கடிதங்களை தொகுத்து வழங்குகின்றோம்.
தமிழன்பன் உங்கள் கருத்து கடிதங்களின் தொகுப்பாய் அமையும் இந்நிகழ்ச்சியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
கலை கிலோஹாட்ஸில் மாறியுள்ள அலைவரிசை எண்களை நமது ஒலிபரப்பில் கேட்டு அறிந்திருப்பீர்கள். அந்த எண்களில் சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு, நிகழ்ச்சிகள் பற்றி உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்.
தமிழன்பன் கருத்துக் கடிதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நேயர் நண்பர்கள் அனைவரும் கொடுக்கின்ற ஆதரவுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். சரி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோமா!
கலை இன்றைய கடிதப்பகுதியில் இடம்பெறும் முதல் கடிதம், சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன் எழுதியது. போதைப்பொருளுக்கு அடிமையாகி, மறுவாழ்வு மையத்தின் மூலம் இக்கொடிய பழக்கவழக்கத்திலிருந்து விடுபட்ட சௌலி என்ற சீன நங்கை பற்றிய நிகழ்ச்சியை கேட்டேன்.
போதைப்பழக்கத்தால் ஏற்படும் நரக வாழ்க்கையை தன்னை போன்று பிறர் அனுபவித்து விடக் கூடாது என்ற இலட்சியத்தோடு மறுவாழ்வு பெற்ற மையத்திலேயே தற்போது இவர் செயல்பட்டு வருவது மகத்தான தொண்டாகும்.
தமிழன்பன் அடுத்த கடிதம், இலங்கை காத்தான்குடியிலிருந்து அ.பா.சஹானி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி அனுப்பியது. 2010 உலகப் பொருட்காட்சி இவ்வாண்டு மே முதல் நாள் தொடங்கி ஆறு மாதங்கள் ஷாங்காயில்நடைபெறுவதை அறிந்து கொண்டேன். இது, மிகவும் கோகாகலமாக நடைபெறுவதோடு, சீனாவுக்கும், ஷாங்காய் மாநகருக்கும் பெருமையை உருவாக்குவது உறுதி.
கலை தொடர்வது, திமிறி ஆர்.கேசவன் சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். பொருட்களை தொலைத்து விட்டவர்கள், அவற்றை மிக எளிதாக பெற்றுக்கொள்வதற்கு சேவை வழங்கும் பொருட்டு தனிப்பட்ட இணையதளத்தை சீனா தொடங்கியுள்ளதை பண்பாட்டு குறிப்புகளில் அறிய வந்தேன். தாங்கள் கண்டெடுத்தப் பொருட்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க எடுத்துள்ள இந்த முயற்சி பிறர் பொருளை விரும்பாத சீனரின் பண்பை விளக்குகிறது.
தமிழன்பன் இனி, நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். பெய்ஜிங் நகர் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சி மூன்று வாரங்களாக தொடர்ந்து, பல தகவல்களை அறிய தந்தது. பெய்ஜிங் மாநகரின் சுற்றலா தலங்கள், கல்வி நிறுவனங்கள், தூதரக உறவுகள் ஆகியவை பற்றி அதிக, புதிய தகவல்களை அறிந்து கொண்டோம். உலக மரபு செல்வப் பட்டியலில் இடம்பெற்ற பெய்ஜிங்கிலுள்ள இடங்களையும் இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது. பெய்ஜிங் மாநகர் பற்றிய தகவல் களஞ்சியமாகவே இது அமைந்துவிட்டது.
கலை அடுத்து இடம்பெறும் கடிதம், தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி மதுரை திருமங்கலம் பி.கதிரேசன் எழுதியது. தொலைபேசியில் குடும்பத்தாருடன் பேசுகின்ற உரையாடல்கள் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றன. புரியாமல் இருப்பதாக தோன்றினாலும், சற்று உன்னிப்பாக கவனித்து மனதை ஒருங்கிணைத்தால் சிறிது சிறிதாக புரிகிறது.
தமிழன்பன் தொடர்வது, சீன உணவரங்கம் நிகழ்ச்சி பற்றி ஈரோடு எம்.சி.பூபதி எழுதியது. இறால் வறுவல் தயாரிப்பது குறித்து உணவரங்கம் நிகழ்ச்சியில் விளக்கினார்கள். சமைக்கும் முறையை எளிதாக அறிவித்தார்கள். ஆனால், அசைவ உணவுவகைகளை சமைப்பதையே அதிகமாக இந்நிகழ்ச்சியில் இடம்பெற செய்கிறீர்கள். இந்தியாவில் சைவ உணவு சாப்பிடுகிறவாகள் பலர் உள்ளனர். எனவே சைவ உணவு வகைகள் பலவற்றை அறிமுகப்படுத்த கேட்டுக் கொள்கின்றோம்.
கலை எம்.சி.பூபதி உங்களது பரிந்துரைக்கு மிக்க நன்றி. சைவ உணவு வகைகள் பற்றியும் இந்நிகழ்ச்சியில் அவ்வப்போது அறிமுகப்படுத்தப் படுகின்றது. இருந்தாலும் உங்கள் பரிந்துரையை கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். அடுத்தாக, திருச்சி எம்.தேவராஜா சீன வரலாற்று சுவடுகள் பற்றி அனுப்பிய கடிதம். 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கம் பற்றி கேட்டேன். இது நிறுவப்பட்ட பிறகு இருகரை உறவு வளர தொடங்கியது. நேரடி விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, அஞ்சல் தொடர்பு ஏற்பட்டது. வர்த்தக தொடர்புகள் விரிவாகியது. தொடரவல்ல வளர்ச்சிக்கான சாதகமான சூழ்நிலை இதன் மூலம் தொடர்ந்து வளரட்டும்.
தமிழன்பன் இனி, ஆரணி பொன் தங்கவேலன் எழுதிய கடிதம். சீன சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான கமோஸ் இனம் குறித்து சீன வானொலி நிகழ்ச்சியில் அறிந்து கொண்டேன். சுமார் மூவாயிரம் பேர் கொண்ட இந்த சிறுபான்மை இனத்திற்கு சீன அரசின் உதவியால் புதிய குடியிருப்பு, மின்சாரம், குடிநீர் வசதிகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் கல்வி கற்றுக்கொள்ள புதிய பள்ளிக்கூடங்கள், தொழில் வளர்ச்சி பெற உழவுக் கருவிகள், இயந்திரங்கள் வாங்க உதவி செய்திருப்பது இவர்களின் எதிர்கால வாழ்க்கையை செழுமையுறச் செய்யும்.
கலை அடுத்தாக, இலங்கை காத்தான்குடியிலிருந்து பௌசுல் அனுப்பிய கடிதம். கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் பொருளாதரா வளர்ச்சி மிக விரைவாக வளர்ச்சியடைந்து வளரும் நாடுகளில் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய தொடர் வளர்ச்சியால் சீனா உலக வல்லரசாக உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
தமிழன்பன் தொடர்வது, நீலகிரி மேல் குந்தா, ஆர்.சந்திரன் சீனக் கதை நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். அறிவாளி முயலுக்கு மூன்று வளைகள் என்ற சீனக் கதை சுவையாக இருந்தது. அதை கவனித்தபோது மனது இதமான உணர்வை பெற்றேன். தொடர்ந்து இத்தகைய கதைகளை எதிர்பார்க்கிறேன்.
கலை அடுத்தாக, இடம்பெறும் கடிதம் பகளாயூர் பி.ஏ.நாச்சிமுத்து அனுப்பியது. உலகளவில் 29 முதல் 30 இலட்சம் நேயர்களை சீன வானொலி நிலையம் உருவாக்கியுள்ளதாக இயக்குனரின் புத்தாண்டுரை மூலம் அறிய வந்தேன். சீன வானொலி நிகழ்ச்சிகள் மக்களிடம் நல்ல எண்ணங்களையும், தன்னம்பிக்கையும், நல்ல பழக்கவழக்கங்களையும் உருவாக்கி, சமூகத்தில் அனைவரும் நல்ல மனிதர்களாக வாழ வழிகாட்டி வருவதால் தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்ற ஆணித்தரமாக கூறமுடியும்.