• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யூஷு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சல்
  2010-04-22 14:14:12  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை அன்பான நேயர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் கலையரசி

தமிழன்பன் நான் தமிழன்பன். நேயர்களின் பங்கேற்பை அனைவருக்கும் அறிவிக்கும் இந்நிகழ்ச்சியில் உங்கள் கடிதங்கள் இடம்பெற சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகள் பற்றி எமக்கு எழுதுங்கள்.

கடிதப்பகுதி

கலை இன்றைய கடிதப்பகுதியில் முதலாவதாக, நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சூரியனை வைத்தே நமது முன்னோர் நேரங்களை கணித்தனர். சூரியனை பார்த்துக்கொண்டு சரியான நேரத்தை சொல்லும் பெரியோர் இன்றும் நம்மிடம் உண்டு. சீனர்கள் அறுபது ஆண்டு கால சுழற்சியை சூரியன், சந்திரன் ஆகியவற்றின் நிலைகளை கணித்து அமைத்தனர் என்பதை இந்நிகழ்ச்சி எங்களுக்கு அறிமுகப்படுத்தியது

தமிழன்பன் அடுத்து, சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சி பற்றி வேலூர் ராமமூர்த்தி அனுப்பிய கடிதம். திபெத் பகுதியில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கான மருத்துகளின் தன்மையையும், அதனால் குணமடைந்தோரின பேட்டியையும் இந்நிகழ்ச்சி வழங்கியது. உயரிய மருத்துவ குணம் கொண்ட இந்த மருந்துகளை ரஷியா, தென்கொரியா போன்ற நாடுகள் கொள்முதல் செய்வது அதன் சிறப்பை உணர்த்துகிறது.

கலை தொடர்வது, இலங்கை மட்டகளப்பு புதுநகரிலிருந்து ஆர்.சகிர்தன் எழுதிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் ஒவ்வொரு நாளும் தமிழ் அல்லது சீனப் பாடலொன்று ஒலிக்கின்றது. பல தகவல்களை அறிவிக்கும் போக்கில் ஒலிபரப்பாகும் இப்பாடல்கள் எங்களை இதமாக உணர செய்கின்றன.

தமிழன்பன் இனி, வெண்ணந்தூர் முஜிப்பூர் ரகுமான் அன்றாட சீன மொழி நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இன்றைய நிகழ்ச்சியில் உடல் நலக்குறைவு பற்றிய உரையாடல் தொடர்ந்தது. நோயில் வாடும்போது பயன்படுத்தும் சொற்களை சில வரங்கள் அறிய தருவதற்கு நன்றிகள்.

கலை அடுத்தாக இடம்பெறுவது, சின்னதாராபுரம் பி.ஜெகன்குமார் மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீன விவசாயத்தில் ஆப்பிள் வளர்ப்பின் பங்கு பற்றி இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. சீனாவில் ஆப்பிள் பழம் விளைவது மற்றும் அதனால் கிடைக்கும் இலாபம் என பல தகவல்களை இடம்பெற்றன. சீன ஆப்பிளை சுவைத்துவிடவும் ஆவல் ஏற்பட்டது

தமிழன்பன் அடுத்து, உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றி சென்னை மறைமலைநகர் மல்லிகாதேவி அனுப்பிய கடிதம். செல்வம் அவர்களின் திபெத் பணய அனுபவங்கள் இதில் இடம்பெற்றன. அவரது அனுபவங்களை எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காது. இரசித்துக்கொண்டே இருக்கலாம். அத்தோடு தமிழ்ப்பிரிவின் பெருமைகளையும் சேர்த்தே வழங்கியது பாராட்டுக்குரியது.

கலை தொடர்வது, மணச்சநல்லூர் ந.சண்முகம் செய்திகள் பற்றி எழுதிய கடிதம். சீன புத்தாண்டின்போது ஆறு கோடியே 54 இலட்சம் பேரின் போக்குவரத்துக்கு வசதிகளை வழங்கிய சீன போக்குவரத்து துறையை பாராட்ட வேண்டும். அதிக மக்களுக்கு சிறந்த வசதியளிக்கும் போக்குவரத்து கட்டமைப்பு சீனாவில் உருவாகியுள்ளதை இது காட்டுகிறது.

தமிழன்பன் இனி, செய்தி விளக்கம் பற்றி ஈரோடு சி.பூபதி அனுப்பிய கடிதம். அனைத்துலக நாடுகளும் பங்கு கொள்ளும் வகையில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஏற்பாடுகளை இந்நிகழ்ச்சியில் அறிந்து கொண்டேன். சீனாவின் வளர்ச்சியை அனைவருக்கும் அறிவிக்கும் கருவியாக இது விளங்கி, உலகப் பொருட்காட்சி வரலாற்றில் சாதனை பதிவுகளை உருவாக்குவது உறுதி.

கலை அடுத்து இடம்பெறுவது விளையாட்டுச்செய்திகள் நிகழ்ச்சி பற்றி மதுரை அண்ணாநகர் என்.இராமசாமி எழுதிய கடிதம். 52 வது கிழக்காசிய விளையாட்டுப் போட்டி தகவல்களை முழுமையாக இந்நிகழ்ச்சி அறிய தந்தது. அணிவகுப்பு, விளையாட்டு அரங்கம், தொடரோட்ட தீபம் ஏற்பு, வாணவேடிக்கை ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் விளக்கிய இது, கிழக்காசிய போட்டிகளின் முக்கிய செய்திகளின் சுருக்கமாக அமைந்தது.

மின்னஞ்சல் பகுதி

முதலில் யு ஷூ நிலநடுக்கம் பற்றிய மின்னஞ்சல்கள் இடம்பெறுகின்றன.

வளவனூர் எஸ்.இரமபத்திரன்

சீனத் துணைத் தலைமையமைச்சரும், அரசவையின் பேரிடர் குறைப்பு தலைமையகத் தலைவருமான huiliangyu நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட yushu நகரில் நடைபெறும் மீட்புதவிப்பணிகளை சோதனையிட்டது, பதிக்கப்பட்ட மக்களுக்கு பேராதரவாக இருக்கும். மக்களின் உயிர் பாதுகாப்பு, பல்வேறு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு, காயமடைந்தோருக்கு அவசர சிகிச்சையென பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலையடையச் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மகத்தானது.

பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால்

சிங்காய் மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நிலநடுக்கத்தில் காயம் அடைந்த அனைத்து மக்களும் விரைவில் முழுநலம் அடைய இறை வேண்டல் செய்கிறேன். மீட்புதவிப் பணிகளில் பல்வேறு தரப்பினரின் செயல்பாடுகள் நிறைவளித்தன. சீன அரசுத்தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, துணை தலைமையமைச்சர் குவெய் லியாங் யூ நிலநடுக்கம் நிகழ்ந்த இடத்திற்குச் விரைந்தது, மீட்புக் பணிகளுக்கு அவசரமாக 5 கோடி யுவானை ஒதுக்கீடு செய்தது, கூடாரங்கள், பருத்திப் போர்வைகள் மற்றும் ஆடைகள் போன்ற மிகவும் தேவையான பொருட்களை அவ்விடத்திற்கு உடனடியாக அனுப்பியது என அனைத்து செயல்பாடுகளும் மனதை நெகிழச்செய்தன.

திருச்சி மெட்டாலா எஸ்.பாஸ்கர்

சீனாவின் சின்ஹாய் மாநிலத்திலுள்ள யு ஷுவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் வெளிநாடுகளிலுள்ள சீன மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவதை, பாகிஸ்தானில் வாழுவோர் நிவாரணத்தொகை திரட்டியதை வைத்து அறிந்தோம். நட்டுப்பற்றையும், சகோதரத்துவ பிணைப்பையும் இதன் மூலம் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

திருச்சி துப்பாக்கித்தொழிற்சாலை எம்.செந்தில் குமார்

ஏப்ரல் 14ஆம் நாள் காலை சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள சிங்காய் மாநிலத்தின் யூ ஷு மாவட்டத்தில் ரிக்டர் அளவு கோலில் 7.1ஆக பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்த செய்திகேட்டு அதிர்ந்து போனேன். மீட்ப்புதவிக்குழுக்களின் மூலம் மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகள், சீன அரசின் சிறந்த மீட்புதவி கட்டமைப்பை எடுத்துக்காட்டுகிறது.

முனுகப்பட்டு பி்கண்ணன்சேகர்

சீனாவின் சிங்காய் மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்பையும், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்புபணிகளையும் சீன அரசுத்தலைவர் பார்வையிட்டுள்ளார். வெளிநாட்டு பயணத்தை பாதியிலே விட்டுவிட்டு மக்களின் இன்னல்களில் பங்குகொள்ள அவர் விரைந்துவந்துள்ளார். அவரது நாட்டுப்பற்றையும், மக்களிடம் கொண்டுள்ள அன்பையும் உணர்ந்து மெய்சிலிர்த்துப் போனேன். மீட்பு பணிக் குழுக்களின் தீவிர தேடுதலால் ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்ற முடிந்துள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கலையும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன்

தென்மேற்கு சீனாவின் சிங்காய் மாநிலம், திபெத்தின் வடகிழக்கு பகுதிகளில் ஏற்ப்பட்ட கடும் பூகம்பத்தின் பாதிப்புகள், மக்களின் துயர நிலைகளை இந்திய தொலைக்காட்சியில் கண்டு வேதனையடைந்தேன். மீட்புதவிப்பணிகளை சீன அரசு துரிதமாக முடிக்கிவிட்டிருப்பதை சீன வானொலியில் கேட்டு சற்று ஆறுதல் அடைந்தேன்.

வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

அணுப்பாதுகாப்பு அறைகூவலை சமாளிப்பதில் சீனாவின் திட்டம் என்ற கட்டுரையை செய்தி விளக்கத்தில் கேட்டேன். அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் நகரில் நடைபெற்ற அணுப்பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சீன அரசுத் தலைவர், உலக நலனுக்கேற்ற ஐந்து முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். அணு பாதுகாப்பு தொடர்பாக உலக நாடுகள் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது போன்ற முன்மொழிவுகள், எதிர்கால அமைதிக்கு சிறந்த பங்காற்றும்.

புதுக்கோட்டை ஜி.வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்

சீன அரசுத்தலைவர் ஹீசிந்தாவ் அவர்களின் இவ்வாண்டின் முதல் வெளிநாட்டு பயணமான, அமெரிக்கப்பயணம் பற்றிய செய்தி விளக்கத்தை கேட்டேன். சீன அரசு நடவடிக்கைகளில் ஒரு மைல்கல்லாக இப்பணயம் அமைந்தது. சீனாவின் நிலைப்பாட்டை உலகம் அறிய செய்ய நல்ல வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது. சர்வதேச சமூகம் அணு ஆற்றல் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கியத்துவத்தையும், இது தொடர்பான சீனாவின் கொள்கைகளையும், எதிர்கால அறைகூவல்களை சமாளிக்க அவர் அளித்த முன்மொழிவுகளும் அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்தது.

நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்

சீனா, உலக அமைதியின் பாதுகாவலன் என்பதை அணு ஆயுத ஒழிப்பு பற்றி சீன வானொலியில் ஒலிபரப்பான தகவல்கள் அறிவித்தன. சீனா, முதலில் அணுஆயுதத்தை ஒருபோதும் பயன்படுத்தாது என்ற நிலைப்பாடு பாராட்டுக்குரியது. இதனை எல்லா நாடுகளும் அறிவித்தால் அணுஆயுத பரவல் தடுப்பு சட்டத்தின் கடமைகளை கடைபிடித்ததற்கு இணையாகிவிடும்.

மணமேடு எம்.தேவராஜா அனுப்பிய மின்னஞ்சல்

ஷாங்காய் உலகபொருட்காட்சி தொடர்பான தகவல் தொடர்பு பரிமாற்ற செய்தி அலுவலகம் கட்டி முடிக்கபட்டுள்ளது. வானிலை, செய்தி பரிமாற்றம் ஆகியவற்றை வெளியிடும் தகவல் தொடர்பு மையமாக இதன் சிறப்பான சேவை உலகிற்கும், இங்கு பயணம் மேற்கொள்வோருக்கும் அதிகம் பயன்படும்.

சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சந்திப்போம் என்ற பொது அறிவுப்போட்டியின் நான்கு கட்டுரைகளை கேட்டேன் "மேம்பட்ட நகரம் மேம்பட்ட வாழ்க்கை" என்ற தலைப்பில் நடைபெறும் இப்பொருட்காட்சியின் மங்கள சின்னமான "ஹைபௌ" பற்றி முதல் கட்டுரையில் அதிகம் அறிந்தேன். சீன அரங்கு பற்றி இரண்டாம் கட்டுரையும் அ ஹீவாங் பூ ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஷாங்காய் மாநகரை நான்காம் கட்டுரையும் அறிமுகப்படுத்தியது. "நகரமும் இணக்கமும்" என்ற கருத்தில் கட்டப்பட்டுள்ள இந்திய அரங்கத்தை 4-வது கட்டுரை அறியதந்தது. இப்பொருட்காட்சி வெற்றியடைவது உறுதி.

மதுரை அண்ணாநகர் ஆர்.அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் மேற்குபகுதி வளர்ச்சி திட்டம் செயல்பட்ட கடந்த பத்தாண்டுகளில் மாபெரும் சாதனைகள் காணப்பட்டன. அடுத்த பத்தாண்டுகளில் அங்குள்ள வளர்ச்சி திறன்களை வலுப்படுத்தி, அறிவியல் தொழில்நநுட்பங்களை அரசு புகுத்தவுள்ளது, விரைவான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.

சின்னவளையம் கு.மாரிமுத்து அனுப்பிய மின்னஞ்சல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் பேட்டியை நட்புப்பாலம் நிகழ்ச்சியில் கேட்டேன். இந்திய-சீனா நட்புறவு வளர்ச்சி பெற்று வருவதை அனைவரும் அறிவிக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது.

திருச்சி அண்ணாநகர் வீ.டி.இரவிசந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

சீன அரசு புள்ளிவிபர ஆணையம் வெளியிட்ட சீனப் பொருளாதார செயல்பாடட்டின் முதல் காலாண்டு அறிக்கையில் கடந்த ஆண்டை விட சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 11.9 விழுக்காடும், நுகர்வு விலை குறியீடு 2.2 விழுக்காடு அதிகரித்திருப்பதையும் தெரிவித்துள்ளது. சீனப் பொருளாதாரம் மீட்சியடைவதையும் இவ்வாண்டில் 8 விழுக்காடு வளர்ச்சி இலக்கு நனவாகும் என்பதையும் இதன் வாயிலாக உணரமுடிகிறது.

திமிரி புலவர் ராமதாஸ் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 80 இலட்சம் கோடி யுவானை தாண்டி கடந்த ஆண்டை விட அதிகரித்திருப்பது, தேசிய பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி வலுவடைவதை காட்டுகிறது. மேலும் தற்போதைய வளர்ச்சிச் சூழலில் நிலவும் சிக்கல்களை சமாளித்து முன்னேறுவது, சீரான‌ வ‌ள‌ர்ச்சி மூலம் நாட்டின் உய‌ர்வை நனவாக்கும்.

திருவானைகாவல் ஜி.சக்கரபாணி அனுப்பிய மின்னஞ்சல்

ஆசியாவில் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாக இந்தியாவின் NIIT நிறுவனம் புகழ்பெற்றுள்ளது. சீனாவின் தா லியான் நகரின் அயல் வணிகச் செயலாக்க சந்தையில் இது நுழைவதாக சீன வானொலி மூலம் அறிந்தேன். இது இரு நாடுகளிடையேயான வணிக உறவினை மேலும் வலுப்பபடுத்தும்

செந்தலை.N.S.பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் துணை பாதுகாப்பு படையினர் பலர் கொல்லப்பட்ட பயங்கரவாதம் குறித்த செய்திகளை கேட்டேன். நக்சலைட்டுகளால் நடத்தப்பட்டுள்ள இச்சம்பவம் வேதனையானது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராதிருக்க விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்.

பரசலூர் பி.எஸ்.சேகர் அனுப்பிய மின்னஞ்சல்

வங்காளதேசத்தில் செங்கல் சூளையில் எரிப்பதற்கு மரங்கள் பயன்படுத்தப்படுவது, காடு அழிவதற்கும், அதிக கரி வெளியேற்றத்திற்கும் காரணமாகியிருப்பதை அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் அறிந்தேன். இதனை தடுக்க ஐ.நா. வின் திட்டத்தால் புகையில்லா தொழில் நுட்பங்களை புகுத்துவது செங்கல் உற்பத்தி துறையி்ன் வளர்ச்சிக்கு வழிகாட்டும்.

ஆரணி அபி அமிர்தவதி அனுப்பிய மின்னஞ்சல்

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பிரிக் உச்சிநாட்டில் சீன அரசுத்தலைவரும் இந்திய தலைமையமைச்சரும் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தை, காலநிலைமாற்றம், தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றில் சீனாவும், இந்தியாவும் எதிர்காலத்தில் ஒத்துழைக்க இருப்பது இருநாட்டிற்கும் நலன்கள் தரும். சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இந்தியப் தலைமையச்சர் தெரிவித்த ஆறுதல், நல்ல நட்பையும் அண்டை நாட்டு தோழமை உணர்வையும் வெளிப்படுத்துகிறது.

மீனாட்சிபாளையம் கா.அருண் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவில் புதிதாக தொழில் துவங்குவதற்கான வழிமுறைகள் மிக எளிமையாக உள்ளது பற்றியும், சீனா இந்திய வர்த்தகர்களுக்கிடையே உள்ள இணக்கமான சூழ்நிலைகுறித்தும், நட்புபாலத்தில் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் எடுத்துக்கூறினார். இரு நாடுகளுக்கு இடையில் சுமூகமான வர்த்தக உறவு, சிறந்த நட்புறவுக்கு வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040