• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செல்வம் அவர்களின் திபெத் பயணம்
  2010-05-17 16:07:30  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகின் மிகவும் உயரமான இடத்தில் நடைபெற்ற 'அருமையான திபெத்' என்னும் இணையதள பொது அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புப் பரிசை பெற்ற நான், திபெத்தில் பயணம் மேற்கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். சீன வானொலியுடனான எனது பல்லாண்டுக்கால உறவில், என்னைப் பொறுத்தவரை இது மூன்றாவது முக்கிய நிகழ்வாகும். முதலாவதாக, 1992 ஆம் ஆண்டில் 'சீன வரலாறும் பண்பாடும்' என்ற பொது அறிவுப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றதன் மூலம், முதலாவது இலவச சீனப்பயணத்தை நான் மேற்கொண்டேன். இரண்டாவதாக, 43 மொழிப் பிரிவுகளில் சிறந்த நேயராக 2007 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டேன். மூன்றாவதாக, இம்முறை அருமையான திபெத்தில் அற்புதமான பயணம்.

இளமைக்காலம் தொட்டே, எனது நெஞ்சில் சீனாவைப் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ளும் ஆவல் வெகுவாக நிறைந்திருந்தது. சீன வானொலியை கேட்கத் துவங்கிய நான், சீனா பற்றிய அதிகத் தகவல்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினேன். சீனாவைப் பற்றி மேலதிகமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற என் ஆர்வத்தை சீன வானொலி முழுமையாக நிறைவு செய்தது.

ஆண்டுகள் பல கடந்து, உலக அரசியல் நிலைமை மாறிப்போக, இந்திய-சீன உறவு, காலத்தின் தேவை என தற்போது உணரப்பட்டிருக்கிறது. சீனாவும் இந்தியாவும் நெருங்கி ஒத்துழைத்தால், ஒன்றுக்கொன்று நலன் தரும் பல்வேறு சாதனைகளை ஈட்ட முடியும் என்ற நிலையும் உருவாகியுள்ளது. அந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சீன வானொலி நிகழ்ச்சிகளை நாள்தோறும் தவறாமல் கேட்டு வருகின்றேன். கேட்பதுடன் நின்றுவிடாமல், நாள்தோறும் விரிவான முறையில் குறிப்பும் எடுத்து கருத்துக் கடிதங்களையும் அனுப்பி வருகின்றேன். இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான கருத்துக் கடிதங்களையும், பல்வேறு பொது அறிவுப் போட்டிகளில் பங்குகொண்டதன் மூலம், கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்திற்கு கூடுதலான விடைத்தாட்களையும் சீன வானொலிக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்.

மேலும், 1995 ஆம் ஆண்டில் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொண்டது முதல், சீன வானொலி தமிழ்ப்பிரிவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றேன். தமிழ்ஒலி இதழின் பக்கக் கட்டுப்பாடு காரணமாக, நான் மேற்கொண்ட மன்றப் பணிகளில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் லாட்டூர் பகுதியில் நிலநடுக்கம் நிகழ்ந்தபோது நண்பர்களுடன் இணைந்து சீன வானொலியின் சார்பில் உதவித் தொகை வழங்கியது, 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற எனது திருமணத்தில் சீன வானொலிக் கொடிகள் அடங்கிய தோரணம் கட்டி சீன வானொலியின் குடும்ப விழாவாக நடத்தியது, இரண்டு நாட்களில் தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் சுமார் 800 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளின் மூலம் பயணித்து, சீன வானொலியைப் பற்றி பரப்புரை செய்ததுடன் சில மாவட்ட மன்றங்களையும் துவக்கி வைத்தது, தமிழகத்தின் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 84 மாணவ, மாணவியர் உடல் கருகி உயிரிழந்தபோது அந்தப் பள்ளிக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்த சிறார்களின் தாய்தந்தையருக்கு சீன வானொலி சார்பில் நெஞ்சுறுக ஆறுதல் தெரிவித்தது, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக செல்லிடைத் தொலைபேசி வலைப்பின்னல் அமைப்பின் மூலம் நாள்தோறும் ஏராளமான நேயர்களுக்கு சீனா மற்றும் சீன வானொலி பற்றிய குறுந்தகவல்களை நண்பர்களுடன் இணைந்து அனுப்பிக் கொண்டே இருப்பது, ஆண்டுதோறும் நேயர் மன்றக் கருத்தரங்கை நடத்த ஏற்பாடு செய்வது, 1992 ஆம் ஆண்டிலிருந்து சீன வானொலி தமிழ்ப்பிரிவின் சிறந்த நேயராக ஆண்டுதோறும் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டது, 1996ம் ஆண்டில் தமிழ் மூலம் சீனம் இதழை தயார் செய்து நேயர்களுக்கு இலவசமாக அனுப்பி வைத்தது, சீன வானொலி நேயர் மன்றம் என்ற இதழை தயார் செய்து நேயர்களுக்கு இலவசமாக அனுப்பி வைப்பது என என் பணிகளை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

உலகின் செம்மொழியாக ஐந்து மொழிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில் சீன நண்பர்களின் தாய்மொழியான சீன மொழியும், என்னுடைய தாய் மொழியான தமிழும் இடம்பெற்றிருக்கின்றன. நம்மிடையே வலுவான உறவை ஏற்படுத்த இதை விட வேறு என்ன காரணம் இருந்துவிட முடியும்?

அந்நிலையில், எனது துவக்கப்பள்ளிக் காலத்திலேயே உலகின் கூரை என அறிந்து கொண்ட திபெத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது மகிழ்ச்சியான அனுபவமாகும். குறிப்பாக, கௌதம புத்தரின் கோட்பாடுகள் போற்றப்படுகின்ற பகுதியில், என் கால்களைப் பதித்தது எனக்கு பேருவகையை அளித்தது. சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் பற்றி பல பொய்க் கூற்றுகள் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. எனக்கு வழங்கப்பட்ட திபெத் பயண வாய்ப்பை வெகு சிறப்பாக பயன்படுத்தி திபெத்தின் உண்மையான நிலையை அறிந்து கொண்டேன்.

கடந்த ஜுன் திங்கள் 28ஆம் நாள் பிற்பகல் சென்னையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6:00 மணிக்கு பாதுகாப்பான முறையில் பெய்ஜிங் மாநகரம் சென்றடைந்தேன். விமான நிலையத்தில் நண்பர் வாணி பொறுமையுடன் காத்திருந்து என்னை அன்புடன் வரவேற்றார். சீன வானொலிக் கட்டிடத்தின் வெகு அருகில் உள்ள Holiday Inn என்னும் விடுதியில் சற்று நேரம் தங்கி இளைப்பாறிக் கொண்டேன். உடனடியாக, என்னுடைய விடுதிக்கு வந்த திரு.கலைமணி, என்னை மதிய உணவிற்கு அழைத்துச் சென்றார். அவ்விருந்தில், சீன வானொலி தமிழ்ப்பிரிவின் முன்னாள் தலைவர் மதிப்பிற்குரிய திரு.எஸ்.சுந்தரன் அவர்களும் கலந்து கொண்டார். விருந்திற்குப் பின்பு, சுந்தரனின் துணைவியார் காரையோட்ட, அவருடைய காரில் சீன வானொலிக் கட்டிடத்திற்கு வந்தேன். நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தில் சீன வானொலி இயங்கி வருகிறது. அங்கே சென்றபோது தி.கலையரசி தலைமையிலான சீன வானொலி தமிழ்ப்பிரிவு குடும்பத்தினர் என்னை அன்புடன் வரவேற்று உரையாடி மகிழ்ந்தனர். பழைய நண்பரான திரு.தமிழ்ச்செல்வன் அவர்களையும் அங்கே சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது.

எனது பயணத்தின் இரண்டாவது நாளான ஜுன் திங்கள் 30ஆம் நாளன்று, நேயர்கள் ஏழு பேர் உட்பட, 20 பேரை உள்ளடக்கிய பிரதிநிதிக்குழுவினர் காலை 9.30 மணிக்கு பெய்ஜிங் விமான நிலையத்திலிருந்து 4064 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லாசா நகரத்திற்கு புறப்பட்டோம். பிற்பகல் 3.30 மணிக்கு திபெத்தின் குங்கா விமான நிலையத்தை சென்றடைந்தோம். விமான நிலையத்தில், லாசா நகர அதிகாரிகள் ஹாத்தா என்றழைக்கப்படும் பட்டுத் துண்டை எங்கள் கழுத்தில் அணிந்து வரவேற்றனர். தமிழகத்தில் மலர்மாலையை அணிவிப்பது போல, திபெத்தில் ஹாத்தா என்றழைக்கப்படும் பட்டுத்துண்டை அணிந்து வரவேற்பது வழக்கமாகும்.

இயற்கையின் அற்புதத்தை எண்ணி வியந்தவாறே அங்கிருந்து புறப்பட்ட நான், குங்கா விமான நிலையத்திலிருந்து லாசா சென்றடையும் வரை, வழியில் காணப்பட்ட இயற்கைக் காட்சிகளை கண்டுகளித்தவாறே சென்றேன். பயண வழியில் மலையில் செதுக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்ட 500 ஆண்டுக்கால பழமையுடைய புத்தர் சிலை, பண்டைய யாலுசாங்பு ஆறு, லாசா ஆறு, திபெத் புத்த மதத்தினரால் போற்றப்படும் புனித மலைகளுள் ஒன்றான தாமரை வடிவிலான மலை ஆகியவற்றை கண்டேன். இவற்றையெல்லாம் கண்டுகளித்தபோது, திபெத் பயணத்தின் மீதான என்னுடைய ஆர்வம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

'இன்றைய திபெத்' என்னும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம், திபெத்தின் சீரான வளர்ச்சியை ஏற்கனவே ஓரளவு அறிந்து கொண்டிருந்த எனக்கு அப்போது பெருமையாக இருந்தது. சீனா, திபெத்தின் வளர்ச்சிக்காக கடந்த பல பத்தாண்டுகளாக எவ்வாறெல்லாம் பாடுபட்டுள்ளது என்பதை நேரில் கண்டுணர்ந்தபோது என் தோள்கள், புளகாங்கிதத்தால் விம்மிப் புடைத்தன. பின்னர், பாரம்பரியம் மிக்க லாசா நகரின் அழகான விடுதியில் நாங்கள் தங்கினோம்.

லாசா நகரம் கடல் மட்டத்திலிருந்து 3490 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், காற்றில் 68% மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. அறிவுரையின்படி, முதல் நாளிரவு நல்ல ஓய்வு எடுத்ததால் நல்ல உடல்நிலைமை காணப்பட்டது.

ஓய்விற்குப் பின், ஜுலைத் திங்கள் முதல் நாள் பிற்பகல் லாசாவின் புகழ்மிக்க ஜோகாங் கோயிலை சென்றடைந்தோம். இக்கோயில், கி.பி.642 ஆம் ஆண்டில் பேரரசர் சொங்ஸ்டென் காம்போ, புத்தமதத்தை சேர்ந்த இளவரசி வென்செங்கை மணந்ததன் நினைவாக கட்டப்பட்டதாகும். சுமார் 25000 சதுர மீட்டர் பரப்பளவில் எழுந்துள்ள இக்கோயிலினுள் நுழைந்தபோது, 1400 ஆண்டுகளுக்கு முந்தைய சூழலில் சென்று விட்ட உணர்வு என்னுள் ஏற்பட்டது. காரணம், அக்கால பழமையான சூழ்நிலை அங்கே இன்றளவும் நிலைநிறுத்தப்பட்டிருப்பதுதான். அப்பிரமாண்டமான கோயிலின் மேற்பரப்பை தாங்கி நிற்கும் தூண்கள் அனைத்தும் மரங்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்திய விகாரைகளின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள கோயிலின் ஒவ்வொரு அங்குலப் பகுதியிலும் வண்ணப் பூச்சுக்கள், அழகான ஓவியங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அதன் பின்னர், இக்கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பண்டைக்கால பர்கோர் கடைவீதிக்குச் சென்றோம். கோயிலைச் சுற்றி வட்ட வடிவில் இருக்கும் இவ்வீதியில், திபெத்திய பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்யும் நூற்றுக்கணக்கான கடைகள் காணப்படுகின்றன. அன்றி, இந்திய நேபாள நாடுகளின் கைவினைப் பொருட்களும் இங்கே விற்கப்படுகின்றன. 1300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இவ்வீதிக்கு நாள்தோறும் சுமார் 50,000 சுற்றுலாப் பயணிகளும் வணிகர்களும் வந்து செல்கின்றனர்.

அதே நாள் மாலை, குளிரையும் பொருட்படுத்தாமல் வாணி உள்ளிட்ட சில நண்பர்களுடன் புறப்பட்டு போதலா மாளிகையைக் காணச் சென்றேன். இரவு நேர ஒளியில் போதலா மாளிகையைக் அருகில் கண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. போதலா மாளிகையின் எதிரேயுள்ள பெரிய சதுக்கம் ஒன்றில் ஏராளமான மக்கள் மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்பட்டனர். சீன இசை ஒலிக்க, அவ்விடமே ஏதோ சொர்க்கலோகம் போல காணப்பட்டது.

ஜுலைத் திங்கள் 2ஆம் நாள் என்னுடைய பயணத்தின் நான்காவது நாளாகும். அன்று காலையில் போதலா மாளிகையைக் காணச் சென்றோம். போதலா மாளிகையின் அருகே சென்றபோது, தனது வடிவத்திலும், அளவிலும், தோற்றத்திலும் எழுச்சிமிக்க அழகை வெளிப்படுத்தி அம்மாளிகை, எங்களை மலைக்க வைத்தது. சிவப்பு மலை என்னும் பொருளுடைய மார்போ ரி மலையின் மீது இம்மாளிகை எழுப்பப்பட்டுள்ளது. படிக்கட்டுக்களின் வழியே மேலே செல்லச் செல்ல, இக்கட்டிடம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாகவே அமைந்ததா என்ற பிரமிப்பு என்னுள் எழுந்தது. பேரரசர் சொங்ஸ்டென் காம்போ என்பவரால், தங் வம்சத்தின் பேரரசி வென்செங் என்பவருக்காக கி.பி.641 ஆம் ஆண்டில் முதன்முதலில் போதலா மாளிகை கட்டப்பட்டது. இம்மாளிகை போர் ஒன்றினால் சிதைக்கப்பட்டு விட, கி.பி.1645 ஆம் ஆண்டில் ஐந்தாவது தலாய் லாமாவால் மீண்டும் கட்டத் தொடங்கப்பட்ட, 13 மாடிகளைக் கொண்ட போதலா மாளிகையின் உயரம் 115.703 மீட்டராகும். ஐந்தாவது தலாய் லாமா இறந்து 12 ஆண்டுகள் கழித்து, அதாவது கி.பி.1694 ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. இம்மாளிகையில் சுமார் ஆயிரம் அறைகளும், பத்தாயிரம் நினைவுச் சின்னங்களும் இருக்கின்றன. நெரிசலை குறைக்கும் வகையில், இதனைச் சுற்றிப் பார்க்க முன்னர் நாள்தோறும் 1600 சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. சிங்காய் திபெத் இருப்புப் பாதை திறக்கப்பட்ட பின்னர், தற்போது பயணிகளின் எண்ணிக்கை 2300-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் யுனெஸ்கோ மரபுச் செல்வப் பட்டியலில், 1994 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்ட இம்மாளிகையின் மேலே அமைந்துள்ள 5 மாடிக் கட்டிடங்கள் முழுக்க முழுக்க மரத்தால் உருவாக்கப்பட்டவையாகும்.

இம்மாளிகையின் உள்ளே காணப்படும் ஒவ்வொரு அங்குலப் பகுதியும் பல்வேறு வண்ணங்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, அக்காலத்திலேயே துல்லியமாக வானிலையை அறிவிக்கும் மிகப் பெரிய உலோக வானியல் கருவி ஒன்றையும் கண்டேன். அமெரிக்காவில் புகழ்பெற்ற Good Morning America என்னும் தொலைக்காட்சி நிறுவனமும், USA Today என்னும் செய்தித் தாளும், உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக போதலா மாளிகையை அறிவித்தன என்பதை அறிந்தபோது மகிழ்ச்சியாகவே இருந்தது.

ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்து, பண்டைய வடிவிலேயே போதலா மாளிகையை பராமரிக்க சீன நடுவண் அரசு எடுத்து வரும் உண்மையான அக்கறையை நண்பர்களுடன் நேரில் கண்டு அறிந்து கொண்டேன். திபெத் புத்த மத நம்பிக்கையாளர்கள், தங்களின் வழிபாட்டினை போதலா மாளிகையிலும், அதன் வெளியேயும் எவ்வித இடையூறுமின்றி, தடையுமின்றி மேற்கொள்வதை நான் நேரில் கண்டுணர்ந்தேன்.

பின்னர், லாசா நகரில் உள்ள சாங்குவான் பிரதேசத்தின் இரண்டாவது துவக்கப் பள்ளிக்கு சென்றோம். 27 ஆசிரியப் பெருமக்கள் பணிபுரியும் இப்பள்ளியில், சுமார் 1400 சிறார்கள் துவக்க நிலைக் கல்வியை பெறுகின்றனர். சீன மொழி, திபெத் மொழி மற்றும் ஆங்கில மொழி என மும்மொழிப் பாடத்திட்டம் இங்கே நடைமுறையில் உள்ளது. நிழற்படங்கள் மற்றும் ஒளிப்படங்களின் உதவியுடன் இங்கே கல்வி கற்பிக்கப்படுகின்றது. துவக்கப் பள்ளி என்றபோதிலும், ஏதோ பெரியக் கல்லூரி போல நான்கு மாடிக் கட்டிடங்கள் இரண்டில், இப்பள்ளி நல்ல சூழ்நிலையில் நடத்தப்படுகிறது. பெரும்பாலும், இங்குள்ள மாணவர்களில் பெரும்பகுதியினர் திபெத் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். சீனாவைப் பொறுத்தவரை ஆறரை வயது முடிந்தபின்புதான் துவக்கப் பள்ளியில் சேர்ந்து, ஒன்பது ஆண்டுக்கால கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும். இதனால் மனச்சுமை ஏதும் மாணவர்களிடம் காணப்படவில்லை. ஆசிரியர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் உரையாடியபோது, திபெத் மக்களின் கல்வி அறிவை மேம்படுத்த திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசும், சீன நடுவண் அரகும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, திபெத் பாரம்பரிய மருந்து தயாரிக்கப்படும் நிறுவனம் ஒன்றை பார்வையிட்டோம். திபெத்தில் கிடைக்கும் பாரம்பரிய சிறப்பு தாவரங்களைக் கொண்டு எவ்வாறு மருந்து தயார் செய்யப்படுகிறது என்பதை நேரில் காண முடிந்தது. திபெத் பாரம்பரிய மருந்துகளின் மணத்தை சுவாசித்தவாறே, பண்டைய மருந்து தயாரிக்கப்படும் வழிமுறைகள், சிகிச்சைக் கருவிகள், ஏராளமான நிழற்படங்கள் ஆகியவற்றை கண்டுகளித்துவிட்டு விடுதிக்கு திரும்பினோம். அன்றிரவு சீன வானொலி நிலையம் மற்றும் சீன மத்திய வானொலி நிலையம் ஆகியவற்றின் லாசா செய்தி மையம் எங்களுக்கு ஏற்பாடு செய்த பாரம்பரியமிக்க விருந்து ஒன்றில் கலந்து கொண்டேன். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இவ்விருந்தில், செய்தி மையத்தின் பத்து செய்தியாளர்களும் எங்களை உற்றார் உறவினர் போல உபசரித்து மகிழ்ந்தனர். சீனாவும் இந்தியாவும் அண்டை நட்புறவு நாடுகள் என்பதை உறுதி செய்வது போல 'இமய மலையில் செல்வோம்' என்ற பாடலை அவர்கள் ஒன்றாக என் முன் நின்று குழுவாக பாடியபோது மனம் உருகியது. நண்பர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், நானும் தமிழ்ப் பாடல் ஒன்றை உணர்வுப்பூர்வமாக பாடியதோடு மட்டுமின்றி, திபெத் நண்பர்கள் மற்றும் பயணக் குழு நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து நடனமும் ஆடினேன்.

ஜுலைத் திங்கள் 3 ஆம் நாள் எனது பயணத்தின் ஐந்தாவது நாளாகும். காலையில் லாசா நகரின் தூய்மையான காற்றுக்கும், சீரான வெப்பநிலைக்கும் உத்தரவாதம் அளிக்கும் லாரூ சதுப்பு நிலம் சென்றோம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திபெத் அருங்காட்சியகம் சென்றோம். 23,508 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இவ்வருங்காட்சியகம், நவசீனா நிறுவப்பட்டு 50ஆம் ஆண்டு நிறைவும் மற்றும் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் தாய்நாட்டுடன் இணைந்த 40ஆம் ஆண்டும் நிறைவும் ஒருங்கே கொண்டாடப்பட்ட 1999 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் திறந்து வைக்கப்பட்டது. மிகப் பெரிய, விசாலமான அறைகளைக் கொண்ட கட்டிடத்தில், திபெத் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட பண்டைக்காலப் பொருட்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

சிறிது நேர ஓய்விற்குப் பின், பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் வகையில் லாசா நகரின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மையத்திற்கு புறப்பட்டுச் சென்றோம். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் முக்கியப் பிரமுகர்கள் ஏழு பேர் கலந்து கொண்டு, ஏழு நேயர்களுக்கும் சிறப்புப் பரிசுக்கான சான்றினை வழங்கினர். திபெத் தொலைக்காட்சி நிலையத்தின் தலைவரிடமிருந்து மகிழ்ச்சியுடன் சான்றினை நான் பெற்றுக் கொண்டேன். அன்றிரவு எங்களுக்கு திபெத் பிரதேச கம்யூனிஸ்ட் கட்சி விருந்தொன்றை வழங்கியது. நெடுநேரம் நீடித்த இவ்விருந்தில், நண்பர் வாணியின் உதவியுடன் பல்வேறு தலைவர்களுடன் விரிவாக உரையாடி மகிழ்ந்தேன். சீன இந்திய நட்புறவு பற்றி நான் தெரிவித்த கருத்துக்களில் மகிழ்ந்த திபெத் கம்யூனிஸ்ட் கட்சிக் கமிட்டியின் விளம்பரத் துறைத் துணைத் தலைவர் திரு. வாங்மின்சிங் அவர்கள், என் நெற்றியோடு தன் நெற்றியை வைத்து வணக்கம் தெரிவித்தார். திபெத் பிரதேசத்தில் இச்செயல் மரியாதையின் உச்சநிலையை காட்டுவதாகும் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன். நேயர்களில் இத்தகைய வாய்ப்பு எனக்கு மட்டுமே கிடைத்தது என்பதை நினைக்கும்போது பெருமையாகவும் இருந்தது.

எனது சீனப் பயணத்தின் ஆறாவது நாளான ஜுலைத் திங்கள் நான்காம் நாளன்று, உலகின் மிகவும் உயரமான இடத்தி்ல் அமைந்துள்ள உப்பு ஏரியான நாம்சோ ஏரியைக் காணப் புறப்பட்டோம். எங்கு பார்த்தாலும் பல்வடிவிலான மலைகள், மலைகளின் ஊடாக நாங்கள் பயணித்த வளைந்து நெளிந்து சென்ற நெடுஞ்சாலை, சாலைகளின் ஓரங்களில் சலசலவென ஓடிய நீரோடைகள் என நெஞ்சைக் கிறங்கடிக்கும் பயணமாக இருந்தது. அதே வேளையில், நெடுஞ்சாலைக்கு இணையாக சிங்காய் திபெத் இருப்புப் பாதையும் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பாலங்கள், மலைக் குகைககள் வழியாக அமைக்கப்பட்டிருக்கும் இருப்புப் பாதையின் கட்டுமானம் வியப்பை அளிப்பதாக இருந்தது. ஏராளமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்பாதையை கண்ணுற்றபோது, திபெத் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறெல்லாம் சீன நடுவண் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. மேலும், பயண வழியில் மேய்ச்சல் புல்வெளியில் காணப்பட்ட ஆயர்களின் கூடாரங்களையும் கண்டேன். கூடாரங்களின் வெளியே ஒன்று அல்லது இரண்டு மோட்டார் சைக்கிள்கள், சூரிய மின்னாற்றல் கருவி, தொலைக்காட்சி சேவைக்கான ஆண்டெனா போன்றவற்றை கண்டபோது மனம் நிறைவடைந்தது.

நாம்சோ ஏரியை நோக்கிய பயணத்தில், நெடுஞ்சாலை ஒரு மலையின் மீது ஏறி இறங்கியது. அப்பகுதியின் உயரம் கடல்மட்டத்திலிருந்து 5190 மீட்டராகும்.

பகல் ஒரு மணிக்கு நாம்சோ ஏரியை சென்றடைந்தோம். கடல் மட்டத்திலிருந்து 4321 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள உப்பு நீர் ஏரியாகும். நாம்சோ ஏரி என்பதன் பொருள் சொர்க்க ஏரி என்பதாகும். மிகவும் பெரிய ஏரி என்பதால், ஏரி நீர், கடல்நீரைப் போல கருநீல நிறத்தில் அமைந்திருந்தது. ஏரியின் நீர் மிக மிகத் தெளிவாக காணப்பட்டது. ஏரி நீரை கையால் தொட்டபோது, பனிக்கட்டிக்கு இணையாக சில்லென்றிருந்தது. ஏரியின் இடப்பக்கத்தில் நியன்சிங் தாங்குவா என்னும் பனிமலை உள்ளது. ஆண்டு முழுதும் பனியால் மூடப்பட்டிருக்கும் இம்மலை, திபெத் புத்த மதத்தவர்களின் எட்டு புனித மலைகளுள் ஒன்றாகும்.

ஜுலைத் திங்கள் 5 ஆம் எனது சீனப் பயணத்தின் ஏழாவது நாளாகும். இன்று காலை, சாலை வழியாக சுமார் இரண்டு மணி நேரம் பயணம் மேற்கொண்டு லோகா வட்டம் சென்றடைந்தோம். அதன் எல்லையில், பாரம்பரிய வழிமுறைகளோடு எங்களுக்கு அன்பான வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர், மின்சோலிங் கோயிலுக்கு சென்றோம். துறவியர் மடமாகவும் பள்ளியாகவும் செயல்படும் இக்கோயில், தான்சுன் வட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் சுமார் பத்தாயிரம் சதுர மீட்டர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. திபெத் புத்தமதத்தின் நீமா எனனும் பிரிவு துவங்கப்பட்ட இக்கோயிலில், புத்தரின் மிகப் பெரிய உருவச் சிலையும், ஏராளமான உலோகச் சிலைகளும் காணப்படுகின்றன. கோயிலின் மூன்றாவது தளத்தில், திபெத் புத்த மத வளர்ச்சிக்காக பாடுபட்ட மதத் தலைவர்களின் உருவப்படங்கள் அனைத்தும் வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளன. முழு சீனாவிலும், புத்த மதத் தலைவர்களின் உருவப் படங்கள் தீட்டப்பட்டிருப்பது இங்குதான் என வழிகாட்டி கூறினார்.

அங்கிருந்து புறப்பட்டு, 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட லாங்சாங்லிங் என்றழைக்கப்படும் தோட்ட வீடு ஒன்றிற்கு சென்றோம். அக்காலத்திய செல்வந்தரின் ஒருவரின் வீடான இதில், மொத்தம் ஏழு மாடிகள் உள்ளன. யென் வம்ச ஆட்சிக் காலத்தில், முழு திபெத் பிரதேசத்திலும் மொத்தம் 13 ஆட்சிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அப்போது கட்டப்பட்ட 12 மிகப் பெரிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

அங்கிருந்து திரும்பும் வழியில், சேதாங் வட்டத்தின் விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட பின், மலையின் மீது அமைந்துள்ள யான்பு லாகாங் மாளிகையைக் காண புறப்பட்டுச் சென்றோம். கி.மு.200ஆம் ஆண்டு கட்டப்பட்ட மலையின் உச்சியில் அமைந்துள்ள இம்மாளிகையைக் காண, மலையின் படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. மலையின் உச்சியில் மிகப் பெரிய புத்தர் சிலை ஒன்று காணப்படுகிறது. அச்சிலையில் இடப்புறத்தில் திபெத்தின் முதலாவது பேரரசரின் உருவச் சிலையும், வலப்புறத்தில் திபெத்தின் 33வது பேரரசரின் உருவச் சிலையும் காணப்படுகிறன.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, யாலுங் ஆற்றங்கரையில் அமைந்துள்ள காசுங் என்றழைக்கப்படும் கிராமம் ஒன்றிற்கு சென்றோம். இக்கிராமம், திபெத் பிரதேசம் தாய்நாட்டுடன் ஒன்றிணைக்கப்பட்ட பின் சீர்திருத்த நடவடிக்கைகள் துவக்கப்பட்ட முதலாவது கிராமமாகும். முன்பு இக்கிராமத்தில் வாழ்ந்த 60 குடும்பங்களைச் சேர்ந்த 606 பேரும் ஒரே பண்ணை முதலாளியின் அடிமைகளாக இருந்தனர். ஆனால், தற்போது இங்கே நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போது 59 குடும்பங்களைச் சேர்ந்த 302 பேர் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இக்கிராமத்து மக்களின் நபர்வாரி ஆண்டு வருமானம் தற்போது 6000 யுவானாகும். இது முழுப் பிரதேசத்தில் காணப்படும் சராசரி அளவை விட அதிகமானதாகும். திபெத்திய மக்களின் வாழ்க்கை நிலை எவ்வாறெல்லாம் மேம்பட்டுள்ளது என்பதை நேரில் கண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து, 7வது நூற்றாண்டில் கட்டப்பட்ட சாங்சு கோயிலுக்கு சென்றோம். திபெத் பிரதேசத்தில் உருவான முதலாவது கோயிலாக கருதப்படும் இக்கோயிலில், சீன நடுவண் அரசு ஒதுக்கிய 2 கோடியே 80 இலட்சம் யுவான் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புணரமைப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. திபெத்தின் பண்டைய இடங்களைப் பாதுகாக்க சீன நடுவண் அரசு எவ்வாறெல்லாம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்பதை அங்கே நேரில் அறிந்து கொண்டேன். கோயிலின் ஒரு பகுதியிலிருந்து மெல்லிய பாடலொலி வருவதை, பயணத்தின்போது என்னுடன் நெருங்கிப் பழகிய கொலம்பிய நாட்டின் நண்பர் சுட்டிக்காட்டினார். அங்கே சென்றபோது முதல் மாடிப் பகுதியில், திபெத்திய ஆண்களும் பெண்களும் குழுவாக பாடிக் கொண்டே தரைப்பகுதியை செப்பனிடும் பணியை மேற்கொண்டிருந்தனர். ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்பதை உணர்த்துவது போல, தங்களின் இசையறிவையும் உழைப்பையும் கலந்து அவர்கள் பணியை மேற்கொள்ளும் காட்சி, கண்களுக்கு விருந்தளிப்பதாக இருந்தது.

இக்கோயிலில் அமைந்துள்ள தாங்கா ஓவியம் ஒன்று கண்களைப் பறிப்பதாக அமைந்தது. இவ்வோவியம், சுமார் 30000த்திற்கும் அதிகமான முத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதன் இன்னொரு தனிச்சிறப்பு, சாக்கியமுனி ஒரு பெண் வடிவத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பதாகும்.

மறுநாள், அதாவது ஜுலைத் திங்கள் 6 ஆம் நாள் சேதாங் வட்டத்திலிருந்து லாசாவை நோக்கி புறப்பட்டோம். லாசா நகர் அருகே அமைந்துள்ள நியாங்ழு கிராமத்திற்கு சென்றபோது, எங்களுக்காக மாபெரும் கலைவிருந்து ஒன்று அரங்கேற்றப்பட்டது. இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், எங்களுக்காக பல்வேறு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளை நிற முகமூடி நடனம், 600 ஆண்டுக்கு முந்தைய நீலநிற முகமூடி நடனம் ஆகியவை என்னைப் பெரிதும் கவர்ந்தன.

கலை நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட கிறக்கத்துடன், அங்கே அமைக்கப்பட்டுள்ள மண்டபம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே பல்வேறு வடிவிலான திபெத் எழுத்துக்கள் அடங்கிய 108 தாங்கா ஓவியங்கள் உள்ளன. அவற்றை கவனமாக ஆய்வு செய்தேன். மேலும், அங்கே திபெத் பிரதேசத்தை ஆண்ட 42 மன்னர்களின் உருவப் படங்களும் திரைச் சீலைகளில் தனித்தனியாக ஓவியங்களாக அழகுற தீட்டப்பட்டுள்ளன.

ஜுலைத் திங்கள் 7 ஆம் நாள் காலையும் எங்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டுமொரு முறை லாசா நகரை வலம் வந்தேன். லாசா தலைமை அஞ்சல் நிலையம் சென்று அஞ்சல் தலை சேகரிப்பாளன் என்ற வகையில் அஞ்சல் தலைகள் சிலவற்றை வாங்கினேன். பயணத்தின் நினைவாக, அங்கிருந்தவாறே நண்பர் எஸ்.பாண்டியராஜன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி வான் அஞ்சல் மூலம் அனுப்பினேன். அதன் பின்னர், லாசா நகருக்கும், திபெத்தின் அன்பு மக்களுக்கும் பிரியா விடைகொடுத்துவிட்டு பெய்ஜிங் திரும்பினோம்.

ஜுலைத் திங்கள் 8 ஆம் நாள் மற்ற நண்பர்கள் அனைவரும் பெய்ஜிங்கிலிருந்து தத்தமது தாயகம் புறப்பட, நான் மட்டும் பெய்ஜிங் மாநகரில் தங்கினேன்.

பெய்ஜிங்கில் தங்கியிருந்த நாட்களில், 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற பறவைக் கூடு, நீர் கன சதுர மையம், சொர்க்கக் கோயில், தியன்மென் சதுக்கம், பெய்ஹாய் பூங்கா, கோடைக்கால மாளிகை, பண்டைய ஹுதுங் வீதி மற்றும் சீன வானொலிக் கட்டிடம் முதலிய இடங்களுக்கு சென்றேன். குறிப்பாக,பெய்ஹாய் பூங்கா மற்றும் ஹுதுங் வீதி ஆகியவற்றை கண்டுகளிக்க வேண்டும் என நான் விரும்பியதால், தி.கலையரசி மற்றும் தமிழன்பன் ஆகியோர் அவற்றை எனக்கு சுற்றிக் காட்டினர். பாரம்பரிய மிக்க ஹுதுங் வீதியில், சைக்கிள் ரிக்சாவில் அமர்ந்து சுற்றிப் பார்த்த அனுபவம் மிகவும் இனிமையானதாகும்.

2008 ஆம் ஆண்டின் உலகின் கவனத்தை ஒட்டுமொத்தமாக தன்பால் ஈர்த்த பறவைக் கூட்டை நண்பர் கலைமகளுடன் பார்த்த நிகழ்வு, மறக்க முடியாத ஓர் இனிமையான அனுபவமாகும். நண்பர் மதியழகனுடன் சொர்க்கக் கோயிலை மீண்டுமொரு முறை கண்டதும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.

இப்பயணத்தின்போது, நான் உண்டு இரசித்த உணவு வகைகளைப் பற்றி குறிப்பிடாவிட்டால், எனது பயணக் கட்டுரை முழுமை பெறாது. இருவார காலப் பயணத்தில் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தேன். குறிப்பாக, தனிச்சிறப்பு மிக்க திபெத் உணவு வகைகளை உண்ட அனுபவம், வாழ்க்கையில் மறக்க இயலாத அனுபவமாகும். நான் சாப்பிட்ட உணவு வகைகளில், இந்திய-திபெத் எல்லைப் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே விளையக் கூடிய விலைமதிப்பு மிக்க ஒருவகை கருப்பு நிறக் காளாணைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு, புற்றுநோயைக் குணப்படுத்தவல்ல மூலிகை ஒன்றைக் கொண்டு தயார் செய்யப்பட்ட ஆட்டிறைச்சி உருண்டை ஆகியவற்றை சிறப்பாக குறிப்பிடலாம். பெய்ஜிங்கில் தங்கியிருந்த காலத்தில், தி.கலையரசி தம்பதியினர் உயர்விடுதி ஒன்றில் வழங்கிய விருந்தின்போது உண்ட பெய்ஜிங் வாத்திறைச்சி உணவு, மானுடைய கீழ்க்காலின் பின்புறத்தில் காணப்படும் ஒருவகை மஜ்ஜை மற்றும் நெல்வயலில் காணப்படும் தவளைக் கறி ஆகியவற்றை கூறலாம்.

பெய்ஜிங்கில் குறுகிய காலமாக தங்கியிருந்தாலும், நான்கு முறை சீன வானொலிக் கட்டிடத்திற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நண்பர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகக் கண்டபோது எனக்குள் எழுந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. சீன வானொலி ஆங்கில மொழிப் பிரிவுக்கு வாணி அழைத்துச் செல்ல, உலகக் கடித உருண்டை போன்ற பகுதிகளை தன்னுடைய ஓய்வையும் பொருட்படுத்தாமல் கலையரசியும் கிளிட்டசும் காட்டினர். இந்த நேரத்தில் சில நினைவுகளை என்னால் அகற்றிவிட முடியாது. எனக்கான எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்து முடித்ததோடு மட்டுமின்றி நாள்தோறும் என் மனைவியுடன் தொடர்பு கொண்டு என் நலனைத் தெரிவித்த தி.கலையரசி, நோயையும் பொருட்படுத்தாமல் அடிக்கடி என்னை சந்தித்த எஸ்.சுந்தரன், திபெத் பயணத்தின்போது தன் முழு உதவியையும் நட்புடன் வழங்கிய வாணி, பெய்ஜிங்கின் சில காட்சியிடங்களுக்கு அழைத்துச் சென்று உதவியதோடு மட்டுமின்றி, பெய்ஜிங் விமான நிலையத்தில் நான் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அனைத்தையும் தாமாக மேற்கொண்டு முடித்த கலைமகள், வேலை நாள் இல்லை என்ற போதிலும் என்னை சந்திப்பதற்காகவே அலுவலகத்திற்கு வந்த மலர்விழி, சகோதர வாஞ்சையுடன் பேசி மகிழ்ந்த தமிழ்ச்செல்வம், தமிழ்ப்பிரிவு அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததுமே என்னுடைய வான் அஞ்சல் கடித உறைகளை ஆளுக்கொருவராக கையிலேந்தி என்னிடம் காட்டி மகிழ்ந்த வான்மதி மற்றும் மீனா, அன்றாட நிகழ்ச்சிகளைக் கேட்டு நான் குறிப்பெழுதும் நோட்டை ஆர்வமுடன் ஆய்வு செய்த கலைமணி, சொர்க்கக் கோயிலுக்கு என்னை அழைத்துச் சென்று ஏராளமான நிழற்படங்களை எடுத்துத் தள்ளிய மதியழகன், பயணத்தின் இறுதி நாளில் என்னை சந்தித்த தேன்மொழி, என்னுடைய நிழற்படங்களையெல்லாம் சுறுசுறுப்பாக தொகுத்து வழங்கிய திலகவதி, மூன்று நாட்கள் எனக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்கிய கிளிட்டஸ், இதற்கு முன் இருந்திராத ஒரு மகிழ்வான உணர்வில் எனக்கு விருந்து வழங்கிய தமிழன்பன் தம்பதியினர், என்னுடைய பயண மூட்டைகளை தாங்களாகவே சுமந்து வந்து வழியனுப்பி வைத்த சீன வானொலியின் ஆப்கான் மொழி சிறப்பு நிபுணர்கள், நாள்தோறும் என்னுடன் தொடர்பு கொண்டு என் நலன் விசாரித்த கண்டமங்கலம் முஜிபுர் ரகுமான்... இப்படி யாரை குறிப்பிடுவது? அல்லது யாரை விடுவது? தவிக்கின்றேன், மன நெகிழ்வால் தத்தளிக்கின்றேன்.

என்னுடைய பயணத்தின் கடைசி நாளான ஜுலைத் திங்கள் 11 ஆம் நாள், பெய்ஜிங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டேன். எஸ்.சுந்தரன் மற்றும் கலைமகள் ஆகியோர் என்னை அன்புடன் வழியனுப்பி வைத்தனர். மறுநாள், அதாவது 12ஆம் நாள் காலை 10.00 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தபோது, விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன், பாண்டிச்சேரி ஜி.இராஜகோபால் மற்றும் என்.பாலக்குமார் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். அவர்களுடன் சீனப் பயணம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டவாறே இல்லம் திரும்பினேன்.

பேச முடியும் என்றால் பாடவும் முடியும், நடக்க முடியும் என்றால் ஆடவும் முடியும் என்பது திபெத்திய பழமொழி. கேட்க முடியும் என்றால் சீன வானொலியை கேட்கவும் முடியும் என்னும் புதுமொழியை உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் உருவாக்க விரும்புகின்றேன். சீனப் பயண வாய்ப்பை வழங்கிய சீன வானொலி உயர் அலுவலர்களுக்கும், இயக்குநர் வாங்கெங் நியன் அவர்களுக்கும், தமிழ்ப்பிரிவுக் குடும்பத்தினர் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி. வணக்கம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040