கலை அன்பான நேயர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழன்பன் நேயர்களின் பங்கேற்பை அனைவருக்கும் அறிவிக்கும் இந்நிகழ்ச்சியில் உங்களோடு
கலை கலையரசி
தமிழன்பன் தமிழன்பன்
கலை நண்பர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு கடிதங்கள், மின்னஞ்சல்கள் மூலம் நீங்கள் வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றிகளை உரித்தாக்கி கொள்கின்றோம். தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேட்டு கருத்துக் கடிதங்கள் எழுதவும், பொது அறிவுப் போட்டிகளில் பங்கேற்கவும் பல்லாயிரக்கணகானோரை தூண்டி சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு எல்லா மக்களையும் சென்றடைய உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியில் கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் முதலில் இடம்பெறுகின்றன.
கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, இலங்கை காத்தான்குடியிலிருந்து எம்.எச்.எம்.ரிம்சான் அனுப்பிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் இடம்பெறும் சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி, சீனாவின் வரலாற்றை கற்கும் ஆவலை என்னில் வளர்த்துள்ளது. சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு என்னில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை,
முள்ளில் ரோஜா, கடலில் அலை
சிப்பியில் முத்து, என்னில் சீன தமிழ் ஒலிபரப்பு
என்று கவிதை வரிகளில் தான் குறிப்பிட வேண்டும்
தமிழன்பன் அடுத்தாக, நாமக்கல் வெண்ணந்தூர் முஜிப்பூர் ரகுமான் சீன உணவரங்கம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். ஆட்டிறைச்சியை முட்டையோடு கலந்து சுவையாக சமைக்கும் முறையை இந்நிகழ்ச்சியில் சொல்லிக் கொடுத்தனர். வழக்கமாக இறைச்சியோடு முட்டையை சேர்த்து சமைப்பது தமிழ் நாட்டில் குறைவு தான். சற்றே வேறுபட்ட உணவு வகையான இதனை சமைத்து சுவைத்திட ஆவல் பிறந்துள்ளது.
கலை தொடர்வது, குடியாத்தம் கே.வீரமணி நேயர் விருப்பம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். தினம் தினம் தீபாவளி எனப்பாடி ஆடி, கடவுள் உள்ளமே கருணை இல்லமே என்று தெளிவடைந்து, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் என்று பரந்த மனம் பெற்று, காதல் கிளியே காதல் கிளியே என்று துணைத்தேடி தனிமையிலே இனிமை காண முடியுமா? என்று இன்றைய நிகழ்ச்சி தொடர்ந்து. இனிமையான பாடல்களை நிறைவளித்தன.
தமிழன்பன் இனி, கரூர் குருணிக்குளத்துப்பட்டி கே.சி.முருகன் சீன வானொலி தமிழ் இணையத்தளம் பற்றி எழுதிய கடிதம். தமிழ் இணையதள பக்கம் மிகவும் சிறப்பாக, பல்வண்ணங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைய வானொலி மூலம் நிகழ்ச்சிகளை மிக எளிமையாக கேட்க முடிகிறது. பல நிகழ்ச்சிகளை தனியாக கேட்கவும் இதில வழியுள்ளது. செய்தி பக்கங்களும் வெகு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
கலை அடுத்தாக, மயிலாடுதுறை பி.எஸ்.சேகர் அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் பசுமை எரியாற்றல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெரும்ளவிலான சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுவது, காற்றாலைகள் மூலம் மின்னுற்பத்தி திட்டங்கள் அதிகரித்து வருவதை இந்நிகழ்ச்சி அறிய தந்ததது. அடுத்த தலைமுறை எரியாற்றலை வளர்ப்பதற்கு சினா அடிப்படை இட்டுள்ளதை இது விளக்கியது.
தமிழன்பன் அடுத்து இடம்பெறுவது, செய்திகள் பற்றி நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் எழுதிய கடிதம். சீன அரசு வெளியிட்ட தேசிய புள்ளிவிபர அறிக்கையின்படி இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஐந்து விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை அறிந்தேன். தொழில்துறையும், உள்நாட்டு தேவையும் அதிகரித்துள்ளன. இதனால் இவ்வாண்டின் முடிவில் சீனாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் எட்டு விழுக்காடாக இருக்கும் என்பதையும் அறியவந்தேன். சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதாரங்கள் நிலைபெற்று வளர்வதற்கு இந்நாடுகளிலுள்ள குடும்ப அமைப்பு முறைகளே காரணமாக அமைவதாக கருதுகின்றேன். நமம்மில் ஒன்றிவிட்ட சேமிப்பு பழக்கமே இதற்கு முக்கிய பங்காற்றுகிறது.
கலை தொடர்வது, ஆந்திரா அசுவபுரத்திலிருந்து எழுதுகின்ற மும்பை சுகுமார் நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். வேலூர் தொழில்நுட்ப கல்லூரி வேந்தர் ஜி.விஸ்வநாதன் அவர்களின் பேட்டி மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டேன். சீன மொழியை அடித்தட்டு மக்கள் கற்றால் அதிக பயன்கள் கிடைப்பதில் ஐயமில்லை தான். அதுபோல பௌத்த மத உறவுகளும், உலக அமைதிக் கோட்பாடுகளும் வளர வேண்டும்.