கடிதம் மூலம் 9 நேயர் நண்பர்கள் தெரிவித்த மதிப்புள்ள கருத்துக்களை வாசித்து ரசியுங்கள்
கலை அன்பான நேயர்களே, நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
தமிழன்பன் உங்களது பங்கேற்பை அனைவருக்கும் அறிவிக்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்திப்பது
கலை கலையரசி
தமிழன்பன் தமிழன்பன்
கலை சிச்சுவான் எதிர்பார்ப்புக்குரிய இடம் என்ற பொது அறிவுப்போட்டி இன்னும் 36 நாட்களில் அதாவது ஜூலை ஒன்றாம் தேதி நிறைவடையும். உங்களது போட்டியாற்றலை, படைப்பாற்றல் மிக்க கட்டுரைகள், ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் வாயிலாக பங்கேற்று, சிச்சுவானில் இலவசப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை பெற உங்களை வாழ்த்துகின்றோம்.
தமிழன்பன் நீங்கள் அனுப்புகின்ற படைப்புகள் அனைத்தும் ஜூலை முதல் நாள் அஞ்சல் முத்திரை குத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கு பின்னர் அனுப்பப்படும் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளில் அடங்காது என்பதையும் அறிவித்து கொள்கின்றோம்.
கலை இருக்கின்ற இந்த 36 நாட்களில் மேலும் அதிக படைப்புகளை பலரும் அனுப்ப நேயர் அன்பர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக கடிதப்பகுதி.
கலை முதலாவதாக, இலங்கை காத்தான்குடியிலிருந்து ஆர்.எப்.ரிஃப்தா சீனப் பாடல்கள் பற்றி அனுப்பிய கடிதம். சீன வானொலியில் ஒலிபரப்பாகும், சீனப் பாடல்களும், சீன இசை நிகழ்ச்சியும் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. நாங்கள் இதுவரை கேட்டுவரும் பாடல்களுக்கு மாற்றான இசை இலயத்தை வழங்கி மகிழ்வூட்டுவதாக இந்நிகழ்ச்சிகள் அமைகின்றன. சீன தமிழொலி இதழில் சீனாவில் இலவசமாக சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அவர்களின் பயண அனுபங்களை வாசித்தேன். சுவாரசியமாக இருந்தது.
தமிழன்பன் அடுத்தாக, சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி பற்றி சின்னதாராபுரம் ஆர்.ஜெகன்குமார் எழுதிய கடிதம். ஷாங்காயில் பயணம் மேற்கொண்டு உலகப் பொருட்காட்சியை பார்வையிடுவது குறித்த விபரங்கள் கேட்டேன். சீன அரங்கம், சீன தேசிய இனங்களை குறிக்கும் தூண்கள் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் என்னை கவர்ந்தன. சீன வானொலி தமிழ் இணையப் பக்கத்தில் வெளியாகியுள்ள உலகப் பொருட்காட்சி பற்றிய அதிக தகவல்கள் மிகவும் சிறப்பு.
கலை தொடர்வது, ஆர்காடு ஜி.மீரா சீனப் புத்தாண்டு கொண்டாடம் பற்றி அனுப்பிய கடிதம். சீனப் புத்தாண்டை சீன மக்களும் வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர்களும் பல்வேறு வடிவங்களில் கொண்டாடியதை செய்திகளிலும் இதர நிகழ்ச்சிகளிலும் அறிய தந்தீர்கள். இந்த கொண்டாட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இவ்விழாவை சீன மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடுவதை விளக்கியது.
தமிழன்பன் அடுத்து இடம்பெறுவது, சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிசந்திரன் நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜனின் பேட்டியை இதில் கேட்டேன். சீன வானொலிக்கும், அவருக்குமுள்ள தொடர்பையும், அவர் வைத்திருக்கும் சங்கத்தையும் பற்றி விளக்கமளித்தார். அத்தோடு வானொலி நிகழ்ச்சிகளை பற்றி அருமையான விளக்கங்களை அளித்து அனைவரையும் மலைக்க செய்தார். அவரை பற்றி தனிப்பட்ட முறையில் அதிகமாக அறிந்து கொள்ள இந்நிகழ்ச்சி உதவியது.
கலை இனி, புதுகை ஜி.வராதராசன் மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீனாவில் எரியாற்றல் உற்பத்தியின் வளர்ச்சி இதில் விவரிக்கப்பட்டது. எரியாற்றல் உற்பத்தியில் சீனா புதிய காலக்கட்டத்தை எட்டியுள்ளதையும், பிற நாடுகளுக்கு அத்துறையில் சீனா முன்மாதிரியாக விளங்குவதையும், இன்றைய நிகழ்ச்சி படம் பிடித்து காட்டியது. வளரும் நாடுகளுக்கு சீனா எப்போதும் ஒரு முன்மதிரியே.
தமிழன்பன் அடுத்து, கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி சென்னை மறைமலைநகர் மல்லிகா தேவி அனுப்பிய கடிதம். பெய்ஜிங் மாநகரம் பற்றிய தகவல்களை இன்றைய நிகழ்ச்சி அள்ளிதந்தது. சுற்றுலா செல்பவர்களுக்கு ஏற்ற சிறந்த அறிமுக நிகழ்ச்சியாக இது அமைந்தது. கேள்விக்கு பதிலளிப்பதாய் அமைந்தது நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.
கலை தொடர்வது, சேலம் எ.வேலு சீன தேசிய இனக் குடும்பம் பற்றி எழுதிய கடிதம். சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேச பள்ளிகளில் கற்பிக்கப்படும் கல்விமுறையை இந்நிகழ்ச்சி விளக்கியது. இருமொழிக்கல்வி மூலம் அங்குள்ள குழந்தைகள் பரந்த மொழி வாய்ப்புகளை பெற முடியும். இவ்வாறான மொழிக் கொள்கையால் பிரதேச அளவிலும் தேசிய அளவிலும் அப்பகுதி மக்கள் வளர இந்த கல்விமுறை வாய்ப்பாக அமையும் என்று கருதுகிறேன்.
தமிழன்பன் அடுத்து இடம்பெறவது, மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி திருச்சி எம்.தேவராஜா எழுதிய கடிதம். இன்று இடம்பெற்ற தகவல்களும் வியப்பூட்டுபவையாக இருந்தாலும், பாலின சமத்துவ வரைபடம் திருமணமும், முறிவுகளும் சிந்திக்க தூண்டுபவையாக அமைந்தன. பாலின சமத்துவத்தில் மகளிர் அடைந்துவரும் மகத்தான முன்னேற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், மணமுறிவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலை தருவதாக இருக்கிறது. முன்னேற்றமும் வளர்ச்சியும் நம்மை எங்கே கொண்டு செல்கின்றது என்ற கேள்விகூட சிலவேளை எழுகிறது.
கலை இனி, இலங்கை காத்தான்குடியிலிருந்து எம்.ஐ.எம். ஃபாய்ரூஸ் அனுப்பிய கடிதம். இலங்கை வானொலி நிகழ்ச்சிகளை இணையதளம் வழியாக வாசித்தும் கேட்டும் வருகின்றேன். தமிழில் இலகுவாக நிகழ்ச்சிகளை வழங்கி வருவதற்கு பாராட்டுக்கள். சீன மொழியை தமிழில் சொல்லிதரும் நிகழ்ச்சிகளும் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன.