தற்போது, பெய்ஜிங் மாநகரில் போக்குவரத்துச் சேவை மிகவும் வசதியாக உள்ளது. பேருந்து, சுரங்க வண்டி, வாடகைச் சீருந்து முதலியவை போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்கின்றன. எனவே, சொந்தமாக வாகனம் வாங்கும் தேவையில்லை. இருப்பினும், மலை ஏறுதல், புறநகரில் சுற்றுலா உள்ளிட்ட நடவடிக்கைகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளதால், வசதியாக இருக்க சொந்தமாக சீருந்தை வாங்க திட்டமிட்டேன்.
இதை வாங்கும் முன்பு, பல முன்னேற்பாட்டுப் பணிகள் தேவைப்பட்டன. சீருந்தின் பல்வகை திறன்கள், விலை, பயன்பாட்டாளர்களின் கருத்துக்கள் உள்ளிட்ட தகவல்களை முறையாக அறிந்து கொள்ள வேண்டும். பல்வகை அம்சங்களைக் கூர்மையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், பிரான்ஸ் மற்றும் சீனா கூட்டாக ஆராய்ந்து தயாரித்த "Peugeot 207"சீருந்தை வாங்க முடிவு செய்தேன். இதன் விலை, காப்பீடு, வரி முதலிய பல்வகை செலவுகளுடன் சேர்த்து, சுமார் 70ஆயிரம் யுவான் ஆனது.
புதிய ஓட்டுநராக, சீருந்தை ஓட்டும் அனுபவங்கள் எனக்கு அதிகமில்லை. எனவே, இதைப் பயன்படுத்தும் துவக்கக் காலத்தில், பல பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக, வாகனங்களை நிறுத்தும் இடங்களை தேடுவது கடினம். தவிர, போக்குவரத்து நெரிசல் நேரமாக இருந்தால், பல தொந்தரவுகள் உண்டு. எனவே, திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான 5 நாட்களில் வாகனத்தை பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமில்லை. சனிக்கிழையிலும் ஞாயிற்றுக்கிழையிலும் சீருந்தில் உலா வரலாம்.
பசுங்கூட வாயுவெளியேற்றத்தைக் குறைக்கும் வாழ்க்கை வழிமுறை, தற்போது சீனாவில் பரந்த அளவில் பரவி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மிக முக்கியமானது. இதில் ஆர்வத்துடன் ஈடுபடும் ஒருவனாக நான் முயற்சி செய்து, உரிய முறையில் என் சீருந்தைப் பயன்படுத்துவேன்.