விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
ஆகஸ்ட் முதல் நாள் தமிழ் ஒலிபரப்பின் துவக்க நாளாகும். இந்நாளில் தமிழ்ப்பிரிவிற்கு மின்னஞ்சல் அனுப்புவதில் மகிழ்ச்சி. 1963 ஆகஸ்ட் முதல் நாளிலிருந்து இன்று வரை தமிழ்ப்பிரிவு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த உயர்வுக்கு உழைத்த தமிழ்ப்பிரிவு பணியாளர்கள் ஏராளம். நேயர்களின் பங்கு மிக அதிகம். அனைவருக்கும் எனது நன்றிகள். முன்னர், இதே நாளில் சீன விடுதலைப்படை துவங்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் சீன விடுதலைப் படைக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
உத்திரக்குடி கலைவாணன் இராதிகா அனுப்பிய மின்னஞ்சல்
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு 48 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கக்கூடிய நிலையில் அதன் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும், எழுச்சியையும் பார்க்கும்போது உளம் மகிழ்கின்றேன். இது தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியில் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர், செயலாளர் இருவரின் வாழ்த்துரைகளும், தமிழ்ப்பிரிவின் தலைவர் தி.கலையரசி அவர்களின் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வு கட்டுரையின் சுருக்கமும் ஒலிபரப்பாகியது. இரண்டாம் நாள் ஒலிபரப்பாகிய பெண்கள் நாட்டின் கண்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எய்ட்ஸ் நோய், புகை நமக்கு பகை, தொலைக்காட்சியின் தீமைகள் ஆகிய தலைப்புகளில் பள்ளிக் குழந்தைகளின் இனிய நிகழ்ச்சி வாழ்வில் கடைப்பிடிக்கும் சில மதிப்பீடுகளை தூண்டுவதாய் அமைந்தது. பள்ளிக் குழந்தைகளுக்கு பாராட்டுக்கள்.
நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கான்ஷு மாநிலத்தை சீன தலைமையமைச்சர் வென்சியபாவ் பார்வையிட்டுள்ளார். துயரப்படும் மக்களுக்கு ஆறுதலாகவும், நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தவும் அவரது பயணம் உதவியிருக்கும். மக்களின் இடர்பாடுகளை போக்க சீனத் தலைவர்கள் உடனடியாக அவர்களை நேரில் சந்தித்து ஆவன செய்வது மிகவும் சிறந்த செயல்.
வேலூர் புலவர்.வீர ராமதாஸ் அனுப்பிய மின்னஞ்சல்
அண்மையில் Shan Xi மாநிலத்தில் சீனத் துணை தலைமையமைச்சரும், தேசிய வெள்ளத்தடுப்பு தலைமையகத்தின் தலைவருமான Hui Liang Yu வெள்ளப்பெருக்கு தடுப்பு பணிக்கு வழிகாட்டியதை அறிந்தேன். மீட்புதவி பணிகளை செவ்வனே செய்து, பாதிக்கப்பட்ட பொது மக்களைக் குடியமர்த்த பாடுபட வலியுறுத்தியது மனித முதன்மை இலக்கையும், தாயக பற்றையும் வெளிப்படுத்துகிறது.
மதுரை 20 ஆர்.அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்
வரலாற்றில் கண்டிராத புயல் மழை இவ்வாண்டு கோடைக்காலத்தில் சீனாவின் தெற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பெய்ததுள்ளதை வானொலி நிகழ்ச்சிகள் மூலம் அறிந்தேன். சுமார் 20கோடி மக்கள் இந்த வெள்ளபெருக்கால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை தருகிறது. உயிரிழந்தோருக்கு இரங்கலையும், அவர்களது குடும்பத்தினருக்கும் உடமையிழந்தோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறேன். இவ்விடங்களில் விரைவில் இயல்பு நிலை திரும்ப விரும்புகிறேன்.
வளவனூர் புதுபாளையம் எஸ். செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
கடந்த சில வாரங்களாக இசை நிகழ்ச்சியில் 56 தேசிய இனங்கள் பற்றிய பாடல்களை வழங்கிய பாடகி தேஜாவின் படைப்புக்களை வழங்கிய திலகவதி அவர்கள், இன்றைய நிகழ்ச்சியில், தேசிய இனப் பாடல்களுக்கு அப்பாற்பட்டு அவரின் சில இனிமையான பாடல்களை வழங்கினார். இன்று மூன்றாவதாக இடம்பெற்ற •அன்பான சீனா• என்ற பாடல் என்னைப் பெரிதும் கவர்ந்தது. 2010 ஆம் ஆண்டு வசந்த விழா கலைநிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட •தாய்நாடு வாழ்க• என்ற பாடலும் மிக கம்பீரமாக ஒலித்தது. மேலும் ஆக்கப்பணிகளுக்கு அணுப்பொருட்களைப் பயன்படுத்தும் வகையில், அமெரிக்காவும் வியட்நாமும் இணைந்து உடன்படிக்கை உருவாக்கியுள்ள தகவலை செய்திகளில் கேட்டபோது, ஓர் உலகம் ஒரு கனவு என்ற இலட்சியம் படிப்படியாக நிறைவேறி வருவதை உணர்ந்தேன்.
புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் 148 தொழில் நிறுவனங்கள் இவ்வாண்டு அமெரிக்க நஸ்தாக் பங்குச்சந்தையில் சேர்க்கப்பட்டு, 2007 ஆம் ஆண்டு முதல் பங்குசந்தையில் மிகப்பெரிய வெளி நாட்டு மூதலீட்டு சந்தையாக சீனா விளங்கி வருவது அமெரிக்க மக்களின் வாழ்வோடு சீனா பினைந்திருப்பதை செய்திகளில் கேட்டு வியந்து போனேன். இவற்றில் 125 நிறுவனங்கள் சீனப் பெருநிலப்பகுதியை சேர்ந்தவை எனபதனை அறியும்போது சீன தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி சீன எல்லையை கடந்து அமெரிக்கா, ஐரோப்பா என பல நாடுகளின் களம் கண்டுள்ளது பாராட்டுக்குரியது. இதற்காக பாடுபட்ட சீனர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை உரித்தாக்குகின்றேன்.
திருச்சி அண்ணாநகர் வீடி.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
மத்திய கிழக்கின் சிக்கலான நிலமை பற்றி செய்திவிளக்கம் கேட்டேன். லெபனானின் முன்னாள் தலைமையமைச்சர் ரஃபிக் ஹரிரியின் கொலையுடன் இஸ்ரேல் தொடர்புடையது என்பதை நிரூபிக்க, லெபனானின் ஹெஸ்புல்லா கட்சியின் தலைவர் உறுதியான சான்றுகளை வழங்கவிருப்பதை அறிந்தேன். இதன் உள்நோக்கம் போகபோக தான் தெரியவரும்.
பகளாயூர் பி.ஏ.நாச்சிமுத்து அனுப்பிய மின்னஞ்சல்
சீன வானொலி தமிழ்ப்பிரிவின் தலைவர் கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு வழங்கிய உரை சிறப்புக்களை பெற்றுத்தந்தது. அனைத்துலக தமிழ் மக்கள் சீனாவை பற்றியும், உலக நாடுகளை பற்றியும் அறிவதற்கு சீன வானொலி ஓர் அறிவுப்பாலம். இதற்காக பணிபுரியும் சீன அரசுக்கும், சீன வானொலிக்கும், ஈரோடு மாவட்ட நேயர்கள் சார்பாகவும், பகலாயூர் சீன வானொலி நேயர் மன்றம் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
காங்கேயம் பி.நந்தகுமார் அனுப்பிய மின்னஞ்சல்
ஹாங்காங்கின் சீன வ்ணிக சங்கமும், அதன் கிளை தொழில் நிறுவனங்களும் 2009ம் ஆண்டு சமூக பொது நல நடவடிகைக்களுக்கு வழங்கிய நன்கொடை தொகை 80 இலட்சம் ஹாங்காங் டாலரை தாண்டியதை சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மூலம் அறிந்தேன். மேலும், கணினி வசதி இல்லாதவர்கள் செல்லிடைபேசி மூலம் கூட மின்னஞ்சல் அனுப்பலாம் என்பதை தெள்ளத்தெளிவாக கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி தெரிவித்தது, நேயர்கள் மனதில் பசுமரத்தாணிப்போல் பதிந்திருக்கும்.
பொள்ளாச்சி தேவநல்லூர் செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்
ஆகஸ்ட் 9 அன்றைய நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் எமது உறவினர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பின் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை. இதயக்கனி திரைப்படத்திலிருந்து ஒலித்த "நீங்க நல்ல இருக்கனும்" என்ற பாடல் பழைங்கால பாடல் வரிகள் மூலம் இன்பத்தை உணர செய்தன.