கலை அன்பான நேயர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் தி.கலையரசி
தமிழன்பன் நான் தமிழன்பன். நீங்கள் அனுப்பிய கருத்துக்கடிதங்களை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
கலை நேயர் நண்பர்களே! பணி அழுத்தங்களுக்கு நடுவிலும் நேரம் ஒதுக்கி கருத்துக்கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பும் உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றிக் கூறிக் கொள்கின்றோம்.
தமிழன்பன் கருத்துக்கடிதங்களோ, மின்னஞ்சல்களோ அனுப்புகின்றபோது, ஒவ்வொரு நிகழ்ச்சிகளாக குறிப்பிட்டு அது பற்றிய உங்களை கருத்துக்களை தெரிவிக்கவும்.
கலை நீங்கள் கருத்துக்கடிதங்கள் மூலம் தெரிவிக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கள், நிகழ்ச்சிகளை மெருகூட்டவும், நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தவும் பயன்படும் என்பதை மறக்க வேண்டாம்.
தமிழன்பன் ஒரு நாள் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரிசையாக தெரிவித்து, அனைத்தும் சிறப்பாக உள்ளன என்று பொதுவாக எழுதி அனுப்பவுதை தயவுசெய்து தவிர்க்கவும். இலங்கை நேயர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.
கலை இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி பற்றி ஈரோடு காயத்திரி தேவி எழுதிய கடிதம். சுற்றுலா என்றால் எப்போதாவது தானே சென்று வருவார்கள். ஆனால் நான் வாரம்தோறும் சீனா சென்று வருகிறேன் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை. சீனாவில் இன்பபப்யணம் நிகழ்ச்சியை கேட்டால் வாராம்தோறும் சீனாவிலுள்ள ஏதாவது ஓரிடத்திற்கு சுற்றுலா சென்று வந்த அனுபவம் கிடைக்கிறது.
தமிழன்பன் அடுத்து, செய்திகள் பற்றி வேலூர் கு.இராமமூர்த்தி அனுப்பிய கடிதம். சீன ஜப்பான் பொருளாதார ஒத்துழைப்புக்கு அவ்விரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை சிறந்த அடிப்படையிடும். மேலும் சீனா ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து சர்வதேச சுற்றுச்சூழல் , மாசுபாடற்ற பொருள் மற்றும் பாதுகாப்பு பற்றி கூட்டம் நடத்தி விவாதிப்பது அதிக பயனை இந்நாடுகளுக்கு விளைவிக்கும்.
கலை தொடர்வது, இலங்கை பதுளையிலிருந்து சா.ஹ.மர்ஸனா எழுதிய கடிதம். சீன வானொலி உலகிலுள்ள தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் பாலமாக வளர்ந்து வருகிறது. இலங்கை தமிழர்கள் யாரையாவது சந்தித்து உரையாடும்போது சீன வானொலி பற்றிய விவாதம் தோன்றிவிடுகிறது. சீன வானொலி நேயராக மாறியதிலிருந்து தமிழ் மூலம் சீனம், அன்றாட சீன மொழி ஆகிய நிகழ்ச்சிகள் வழியாக நீங்கள் அளித்த தூண்டுதலால் தற்போது சில சீன சொற்களை கற்றுக் கொண்டு மனப்பாடம் செய்துவருகிறேன்.
தமிழன்பன் இனி, சீனக் கதை பற்றி நீலகிரி கிழ்குந்தா கே.கே போஜன் அனுப்பிய கடிதம். அரசியல், அதிகாரம் என்றாலே தந்திரமே என்றும் தந்திரம் அறியாதவன் இவற்றிற்கு தகுதியில்லை என்றும் இன்றைய கதை உணர்த்தியது. மதிப்பீடுகள், படிப்பினை, சிந்தனை, நகைச்சுவை ஆகியவை கொண்டவைகளாக சீனக் கதை நிகழ்ச்சி இடம்பெறுவது சிறப்பு.
கலை அடுத்தாக, சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி பற்றி மதுரை 20 என்.இராமசாமி எழுதிய கடிதம். ஊழல் ஒழிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இக்கட்டுரை மூலம் அறிந்து கொண்டேன். மக்களுக்கும், அதன் மூலம் நாட்டிற்கும் நீதி தவறாது பணிபுரியும் தாகத்தை வெளிப்படுத்துவதே ஊழல் ஒழிப்புப் பணி என்றால் மிகையில்லை.
தமிழன்பன் தொடர்வது, பரசலூர் பி.எஸ்.சேகர் பொருளாதார சீர்திருத்த உச்சி மாநாடு பற்றி அனுப்பிய கடிதம். பொருளாதார சீர்திருத்த உச்சி மாநாட்டில் பிரிக் நாடுகள் அதாவது பிரேசில், ரஷியா, சீனா, இந்தியா முதலிய நாடுகளின் பங்கு பற்றி விரிவாக இக்கட்டுரையில் ஆராயப்பட்டது. காலநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இதில் விரிவாக விளக்கப்பட்டது. இந்த நான்கு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் உலக வளர்ச்சிக்கு அடிப்படையிடுவது நிச்சயம்.
கலை இனி, திமிரி வீர.இராமதாஸ் அணு ஆயுதக் குறைப்பு மாநாடு பற்றி எழுதிய கடிதம். வாஷிங்டன்னில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சீனா ஆற்றிய பங்கு அனைவராலும் பாராட்டப்பட்டது. சீனாவின் கருத்துக்கள் அனைத்து தரப்பாலும் வரவேற்கக் கூடியவை. வளரும் நாடுகளும் வளர்ந்த நாடுகளும் ஒன்றுக்கொன்று உதவி, ஒன்று மற்றதன் குறையை நிறைவு செய்யும் நாடுகளாக உருவாகுமானால் அணு ஆயுதக் குறைப்பு நனவாவது உறுதி.
தமிழன்பன் அடுத்து, சோமனூர் எம்.சோமசுந்தரம் சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீன சந்தையில் பொருட்களின் விலைவாசியை கட்டுக்குள் வைக்கவும், பொருட்களின் வினியோகம் சீராகவும், சரியாகவும் இருக்கவும் உத்தரவாதம் அளித்துவரும் சீன அரசை பாராட்டுகிறேன். கட்டுபாடில்லாமல் விலைவாசி வளர்வதை அரசு உத்திரவாதம் செய்யுமானால் இச்செயல்பாடு மக்களுக்கு அதிக நன்மைகளை கொண்டுவரும்.
கலை தொடர்வது, இலங்கை காத்தான்குடியிலிருந்து, எம்.எப்.எம்.ஹஸீம் எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் காலையில் இடம்பெறும் மறுஒலிபரப்பில் கேட்டுவருகின்றேன். உலகில் நடக்கின்ற பல புதிய நிகழ்வுகளை இதன்மூலம் அறிய முடிகிறது. சில முக்கிய தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்கிறேன். இதில் இடம்பெறும் சீனப் பாடல்களின் வரிகள், மொழி தெரியாததால் புரியாவிட்டாலும், கேட்பதற்கு வேறுப்பட்ட இசைலயத்தோடு, இனிமையாய் இருக்கிறன.