கலை அன்பான நேயர்களே! இப்போது நேயர் நேரம் நிகழ்ச்சி.
உங்கள் கடிதங்களையும், மின்னஞ்சல்களையும் கலையரசியாகிய நானும், தமிழன்பனும் தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
தமிழன்பன் நேயர் நண்பர்களின் கருத்துகளை அனைவருக்கும் அறிவிக்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
கலை இந்நிகழ்ச்சிக்கு நேயர் நண்பர்கள் வழங்கிவரும் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி கூறுகின்றோம். மேலும் பல நேயர்களை கருத்து கடிதங்கள் எழுத தூண்ட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழன்பன் குறைந்த பட்சமாக நாளுக்கொரு கருத்துக் கடிதம் எழுத முடிவெடுத்து செயல்படுத்த தொடங்கினால் இன்னும் அதிக கருத்து கடிதங்களை அனுப்பலாம் அல்லவா! சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டாலும், இதுவரை கடிதங்கள் எழுதாமல் இருக்கும் நேயர்கள் இதனை செயல்படுத்தலாமே!
கலை இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் எழுதிய கடிதம். பாம்புகள் தொடர்பாக சீனாவில் பரவாலாக கூறப்படும் பழமொழிகளை இந்நிகழ்ச்சியில் அறிந்து கொண்டேன். ஆறாவது ராசியாக இருக்கும் டிராகன் என்னும் பறக்கும் பாம்பு ஆண்டு பிறந்தவர்கள் எத்தகைய குணநலன்கள் பெற்றிருப்பர் என்பது பற்றியும், தமிழ்ப்பிரிவிலுள்ள பணியாளர்களில் இவ்வாண்டுகளில் பிறந்தவர்கள் பற்றியும் இந்நிகழ்ச்சியில் கேட்டு இன்புற்றோம்.
தமிழன்பன் அடுத்து, இலங்கை நின்தாவூர் பி.அப்துல் மஜித் அனுப்பிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் சேவையை நினைத்து பெருமையடைகிறேன். உலகளவில் செய்தி சேவை ஆற்றிவரும் சிறந்தொரு வானொலியின் நேயராக இருப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். எனது பொழுதுபோக்காகவும், தகவல் பெறும் உலகமாகவும் உள்ள சீன வானொலி தமிழ் ஒலிபரப்புக்கு வாழ்த்துக்கள்.
கலை தொடர்வது, ஆந்திரா மாநிலம் அசுவபுரத்திலிருந்து எழுதும் மும்பை சுகுமார் அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆடுகள், மது உண்டிருந்தால் வாகன இயக்கத்தை தடுக்கும் கருவி போன்ற சீனாவின் கண்டுபிடிப்புகள் உலகிற்கு அதிக நன்மைகளை வழங்கும். அறிவியல் கண்டுபிடிப்புகளில் சீனாவின் பங்களிப்புகள் அதிகரித்து வருகின்றன. வளரும் நாடுகளுக்கு இக்கண்டுபிடிப்புகள் மிகுந்த பயனளிக்கும்.
தமிழன்பன் இனி, ஆரணி டி.சரவணன் மகளிர் உச்சி மாநாடு பற்றி அனுப்பிய கடிதம். பெய்ஜிங்கில் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகின் பல நாடுகளிலிருந்து பங்குகொண்ட பெண்கள், மகளீரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான விவாதங்களை மேற்கொண்டு சிறப்பித்துள்ளதை அறியவந்தேன். மகளிருக்கிடை தொடர்பையும், பரிமாற்றத்தையும் மேம்படுத்தும் இத்தகைய உலகளவிய முயற்சிகள் அதிகரிக்க வேண்டும்.
கலை அடுத்தாக, தாசப்பகவுண்டன் புதூர் எஸ்.சுதர்ஷன் மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு முன்னேற்பாடாக தரையிலிருக்கும் கலன் ஒன்றில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அறிய வந்தேன். சென்றுவர ஏறக்குறைய 500 நாட்களாகின்ற செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பல வீரார்களில் ஒருவர் சீனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.
தமிழன்பன் தொடர்வது, தார்வழி பி.முத்து உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். முன்பு தமிழ்ப்பிரிவில் பணியாற்றிய சிவக்குமார் அவர்களின் உரை அருமையாக இருந்தது. அவர் சீன வானொலியில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவத்தினை சிறப்பாக பகிர்ந்து கொண்டார். மேலும் தமிழ் மொழி கற்பதிலும், பணிபுரிவதிலும் சீன மக்களின் காட்டும் ஆர்வத்தையும் கேட்டு மகிழ்ந்தோம்.
கலை இனி, உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றி சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிசந்திரன் எழுதிய கடிதம். தேனீர் குடிப்பதற்கு மட்டுமே என்று எண்ணியிருந்தேன். மாவுடன் பிசைந்து தின்பண்டங்கள் தயாரிக்கவும் தேனீர் பயன்படுவதை இன்றைய நிகழ்ச்சியில் அறிய தந்தீர்கள். தேனீர் கலந்த மாவு நாங்கள் இதுவரை ருசிக்காத சுவையை தரும் என எண்ணுகிறேன்.
தமிழன்பன் அடுத்து இலங்கை காத்தான்குடி எ.எப்.எம்.சுஹாயில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி அனுப்பிய கடிதம். உலகையே சீனாவை நோக்கி திருப்பியுள்ள ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய தகவல்கள் நமது ஒலிபரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஷாங்காயில் நடப்பதை அப்படியே விளக்கும் நிகழ்ச்சியாக இது தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி விளங்குகிறது. இலங்கையில் இருந்து கொண்டு நேரடியாக ஒலிபரப்பை கேட்கும் உணர்வை இது தருகிறது.
கலை தொடர்வது, சுகாதார நாள் கொண்டாட்டம் பற்றி திமிரி அம்புஜபாலன் எழுதிய கடிதம். உலக சுகாதார நாள் சீனாவில் கடைபிடிக்கப் பட்டதையும் அதையொட்டிய பரப்புரை நிகழ்ச்சிகளையும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு அறிய தந்தது. நலவாழ்வு கருத்துகள் அடிமட்ட மக்களை சென்றடைந்தால் தான் சிறந்த பயன் கொடுக்கும் என்பதனை கருத்தில் கொண்டு நலவாழ்வு விழிப்புணர்வை சிறந்த முறையில் அந்நாளில் வழங்கியுள்ளது சீன அரசு மக்களின் நலவாழ்வில் காட்டும் முக்கியத்தவத்தை வெளிப்படுத்துகிறது.