கலை அன்பான நேயர்களே! இப்போது நேயர் நேரம் நிகழ்ச்சி! உங்கள் கடிதங்களை தொகுத்து வழங்குவது கலையரசி.
தமிழன்பன் தமிழன்பன். உங்கள் கருத்துக்களை ஒலியலை மூலம் உங்களையே வந்தடைய செய்யும் இந்த நிகழ்ச்சியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
கலை நாட்கள் தவறாது எமக்கு கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பிவரும் நேயர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது உங்களுடைய முழு ஒத்துழைப்பால் என்பதையும் இங்கே பதிவு செய்கின்றோம்.
தமிழன்பன் உங்கள் கடிதங்கள் சினா வானொலியில் உங்கள் பங்கேற்பை எடுத்துக் காட்டும். தொடர்ந்து எமக்கு எழுதுங்கள். சரி! இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோம்.
கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, இலங்கை கினிகத்தேனையிலிருந்து எம்.பி.மூர்த்தி சீன வானொலி இலங்கை பண்பாலை 102 யில் நிகழ்ச்சிகளை கேட்டபோது எழுதி அனுப்பிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு இலங்கையில் சிற்றலையிலும், பண்பலையிலும், இணையம் மூலமும் என எல்லா வசதிகளிலும் மக்களை சென்றடைய செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கிறன. சீன வானொலியிலிருந்து அடிக்கடி வரும், கடிதங்கள், சீன தமிழொலி இதழ், நாள்காட்டி, அஞ்சல் பட அட்டை ஆகியவை அனைத்தையும் பெறும்போது பெருமிதம் ஏற்படுகிறது.
தமிழன்பன் அடுத்து, சீன தேசிய இன குடும்பம் நிகழ்ச்சி பற்றி வேலூர் குமார ராமமூர்த்தி எழுதிய கடிதம். திபெத் பண்பாட்டை விளக்கி, திபெத் இன மக்களின் தலைவர் பெய்ஜிங் வந்து சீன நடுவண் அரசு அதிகாரிகளை சந்தித்து திபெத்தின வளர்ச்சி பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதை இதில் அறிய தந்தீர்கள். திபெத்தின் நாட்டுபுற பண்பாட்டு வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வளர்ச்சிகளை தொடங்க இப்பேச்சுவார்த்தை நடைபெறுவது, திபெத்தின் வளர்ச்சியை விரைவாக்கும் முயற்சியாகும்.
கலை தொடர்வது, விழுப்புரம் எஸ்.சேகர் சீனக்கதை நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். வெள்ளி நாணயங்கள் கதை நேர்மைக்கு கடவுள் தந்த பரிசை உணர்த்தியது. நான்கு பெருக்கல் ஏழு இருபத்தி எட்டு இல்லை இருபத்தி ஏழு என்ற நகைச்சுவையுடன் பொருள் பொதிந்த கதை பயனில்லா முட்டாள்தனமான வழக்கங்களை நாம் உதற வேண்டுமென அறிவுறுத்தியது. மக்களின் வாழ்க்கைக்கு பயனுள்ள கதைகள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறன.
தமிழன்பன் இனி, உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றி சென்னை ரேணுகாதேவி எழுதிய கடிதம். நாமக்கல் நேயர் மன்றம் வழங்கிய நிகழ்ச்சி தொகுப்பு ஒலிபரப்பானது. நேயர்கள் பலரின் பங்கேற்புடன் அமைந்த இந்த நிகழ்ச்சி அருமையாக இருந்தது. நேயர்களின் குரலாய் ஒலிப்பதால் உங்கள் குரல் என்று இந்த நிகழ்ச்சிக்கு வழங்கியிருக்கும் பெயர் சால பொருந்துகிறது.
கலை அடுத்ததாக, திமிறி பாலூர் பி.எஸ். சுந்தரராஜன் சீன வானொலியின் கடிதத் தொடர்பு பற்றி அனுப்பிய கடிதம். தித்திக்கும் சீன வானொலியின் தகவல்களை நான் பெற்றுக்கொண்ட கடிதங்கள் மூலம் அறிந்தேன். சீன வானொலி தமிழ்ப் பிரிவு நிலைத்து வளர, நேயர்களின் கடிதங்கள் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகின்றது. எனவே தான் புதிய செயல்பாடுகளில் கவனம் செலுத்தினாலும், பழைய செயல்பாடுகளின் இனிமையை விடாமல் பின்பற்றுகிறது.
தமிழன்பன் தொடர்வது, ஈரோடு எம்.சி.பூபதி சீனாவில் இயற்கைப் பேரிடர் குறித்து எழுதிய கடிதம். சீனாவில் பெய்த கன மழையால் ஆங்காங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டு நிகழ்ந்த பேரழிவுகள் எம்மை துயருக்கு உள்ளாக்கின. இத்தகைய இயற்கை சீற்றங்கள் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அவற்றை வெல்ல முடியாவிட்டாலும் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு மூலம் அழிவை கூடியவரை குறைக்கும் முயற்சிகளை உடனடியாக தொடங்குவது அவசியம்.
கலை இனி, மெட்டாலா எஸ் பாஸ்கர் அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். புற்றுநோயை வாழ்க்கை முறை மாற்றங்களால் கணிசமான அளவு குணமாக்க முடியும் என்பதை இன்றைய நிகழ்ச்சி விளக்கியது. இதற்கு முழு சமூகத்தின் செயல்பாடும் கடமையுணர்வும் தேவையாகிறது. மருத்துவ வல்லுநர்கள் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு புதிய சிகிச்சை முறைகளை கையாளுவதையும் பாராட்டியாக வேண்டும்.
தமிழன்பன் அடுத்து, கோவை என். வெங்கடாசலம் சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீன நாள்காட்டியின்படி பாம்பு ஆண்டில் பிறந்தோரின் குணநலன்கள் பற்றியதாக இன்றைய நிகழ்ச்சி அமைந்தது. இந்தியாவின் சோதிடத்தை போல சீனாவில் சற்று வேறுபட்ட நிலையில் இருந்துவருவதை இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது. இனிவரும் நிகழ்ச்சிகளுக்காக காத்திருக்கிறேன்.
கலை தொடர்வது, இலங்கை தர்கா நகரிலிருந்து பாத்திமா ஷஸ்னா தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். செவ்வாய்கிழமை என்றால் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை கேட்பதற்கு புது உற்சாகம் தொற்றிவிடுகிறது. ஒலிபரப்பு தொடங்குவதற்கு முன்பே குறிப்பேடு மற்றும் எழுதுகோலை எடுத்து கொண்டு அமர்ந்து விடுவேன். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி கேட்பதற்கு தான் இவ்வளவு தயாரிப்பும். இந்நிகழ்ச்சியை கேட்டு சொற்களை எழுதி படித்து வருகிறேன்.