கலை அன்பான நேயர்களே! புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் நேயர் நேரம் நிகழ்ச்சியை தொடங்குவது, தி.கலையரசி
புஷ்பா புஷ்பா. புத்தாண்டில் புது எண்ணங்களுடன் வளமுடன் வாழ, வளர வாழ்த்துகின்றோம்.
கலை நேயர் நண்பர்களே! ஒவ்வோர் ஆண்டும் நமது செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டும். சீன வானொலி நேயர்களின் எண்ணிக்கை அதிகரித்து, பங்கேற்பும் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளை நாமனைவரும் இணைந்து செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். உங்கள் பங்கேற்பை வழங்குவதற்கு ஒரு வழி, சீன வானொலி தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துகளை கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாக எங்களுக்கு அனுப்புவது. இவ்வாண்டு முன்பை விட அதிகமாகவே ஆதரவு தருவீர்கள் என்று நம்புகின்றோம்.
புஷ்பா புத்தாண்டில் சீன வானொலிக்கு அதிக கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பும் உறுதி ஏற்று, செயல்படுத்துவோம். இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கேட்கலாம்.
கலை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சி பற்றி நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் அனுப்பிய கடிதம். உலகப் பொருட்காட்சியின் விபரமும், பயன்பாடும் என்ற கட்டுரை கேட்டேன். இப்பொருட்காட்சி பூங்காவில் இன்பமாய் பொழுதை கழித்து, அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வழிமுறைகளை வாணி தொகுத்தார்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பொருட்காட்சி பூங்காவை பார்வையிட்டோரின் எண்ணிக்கை அறிவிப்பு, போலி நுழைவுச் சீட்டுகளின் பயன்பாடு தடுப்பு, சீனா முழுவதும் உலகப் பொருட்காட்சி பற்றிய செய்திகள் உடனடி பரவல் என்பன போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளதை அறிந்தபோது மலைத்து போனோம்.
புஷ்பா அடுத்து, இலங்கை புதிய காத்தான்குடியிலிருந்து எம்.எப்.எம்.ஃபஹீம் சீன வானொலி அறிமுகம் பற்றி எழுதிய கடிதம். வெளிநாடுகளை பற்றி, குறிப்பாக இலங்கையின் சிறந்த நட்பு நாடாக விளங்கும் சீனா பற்றி பல்வேறு தகவல்களை திரட்டி வந்தேன். எனது பெற்றோர், ஆசியரியர்கள் என பலரிடம் தகவல்கள் சேகரித்தேன். அப்போது தான் சீனா பற்றி அறிய யாரிடமும் செல்ல வேண்டாம். சீன வானொலி தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகளை கேட்டால் போதும் என்று அறிய வந்தேன். எனது விருப்பதை நிறைவு செய்துவரும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகின்றேன்.
கலை தொடர்வது, தேனி உத்தமபாளையம் கே.துர்காதேவி நேயர் மன்ற கருத்தரங்கம் பற்றி அனுப்பிய கடிதம். பெருந்துறையில் நடைபெற்ற நேயர் மன்ற கருத்தரங்கின் ஒலிபரப்பை கேட்டேன். திரு.ஸ்டாலின் குணசேகரன், திரு பல்லவி கே. பரமசிவன், ஆகியோரின் உரைகளை சிறப்பாக இருந்தன. தமிழ்ப்பிரிவின் தலைவர் தி.கலையரசி செம்மொழி மாநாட்டில் ஆற்றிய உரை அற்புதமாக இருந்தது. சீனாவில் தமிழ் மொழி பரவியுள்ளதை அறியவந்தபோது ஆச்சரியமடைந்தேன்.
புஷ்பா இனி, சிவகங்கை எஸ்.புஸ்பராசன் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் கடிதத் தொடர்பு பற்றி அனுப்பிய கடிதம். நேயர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து உடனடியாக பதில் கடிதங்களை அனுப்பி வருவதால் தான் எந்த வானொலியும் செய்யாத அற்புத சாதனையை சீன வானொலி தமிழ்ப் பிரிவு செய்துவருகிறது. இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும். இந்திய சீன நட்புறவுக்கு பாலமாக இருந்துவரும் தமிழ்ப்பிரிவு வழங்குகின்ற பல்சுவை நிகழ்ச்சிகள் அவற்றை கேட்கின்ற நேயர்களுக்கு ஊக்கமூட்டும் மருந்து.
கலை அடுத்ததாக, அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி ஈரோடு எம்.சி.பூபதி அனுப்பிய கடிதம். கடல் பாசியை கொண்டு உடைகள், தீ பற்றிக் கொள்ளாத பாதுகாப்புப் பொருட்கள் ஆகியவற்றை தயாரிக்கும் தொழி்ல்நுட்பம் பற்றி கேட்டோம். இதற்காக கடல்நீர் பாசி வளர்ப்பை சீனா ஊக்குவிப்பது நல்லதே. மேலும், எரியாற்றல் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்து உலகளவில் சீனா முன்னணி இடத்தை பெற்றுள்ளதை செய்திவிளக்கத்தில் செவிமடுத்தேன். வளர்ச்சியால் உலக கவனத்தை ஈர்க்கும் சீனாவின் முயற்சிகள் வெற்றி படிகட்டுகளாகட்டும்.
புஷ்பா தொடர்வது, நட்பு பாலம் நிகழ்ச்சி பற்றி முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் எழுதிய கடிதம். சீன இந்திய தூதாண்மை உறவின் 60 வது நிறைவு விழாவை கொண்டாடிவரும் வேளையில் சீன அரசின் நட்புறவு விருது பெற்ற முனைவர் ந.கடிகாசலம் அவர்களை நோர்காணல் செய்தது பொருத்தமானது. அவர்கள் இரு நாட்டின் உறவு நிலைகளை, வளர்ச்சி காட்டும் தகவல்களை விளக்கி சுட்டிக்காட்டியதை தனிச்சிறப்பாக கருதுகிறேன். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தலைவர் கலையரசிக்கு நன்றிகள்
கலை இனி, சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி ஆரணி ஜி. ராஜசேகரன் அனுப்பிய கடிதம். தாவ் மதத்தின் பொருள், நீடு வாழ வழி, மதத்தின் நோக்கம் ஆகிய பல தகவல்கள் அடங்கிய பெட்டகமாக இந்நிகழ்ச்சி ஒலிக்கிறது. சீன மக்களின் மனதில் ஊறிகிடக்கும் பண்புகளின் அடிப்படையாய் விளங்கும் தாவ் மதம், அவர்களின் பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் கருவியாக உள்ளதை நினைத்து பெருமைப்படுகின்றோம்.