கலை அன்பான நேயர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களது கருத்துக் கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் தொகுத்து வழங்குவது தி.கலையரசி
தமிழன்பன் தமிழன்பன். நேயர்களின் பங்கேற்பை அனைவருக்கும் அறிவிக்கும் இந்நிகழ்ச்சியில் உங்கள் கருத்துக்கள் இடம்பெற வேண்டுமா? சீன வானொலி தமிழ்ப்பிரிவு நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
கலை பல்லாயிரக்கணக்கான நேயர்கள் கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பி சீன வானொலி தமிழ்ப்பிரிவோடு தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் இவ்வாறு தொடர்பு கொள்வோரில் மிகவும் குறைந்தோரே கருத்துக் கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்புகின்றனர். தொடர்ந்து கருத்துக் கடிதகங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பி தமிழ்ப்பிரிவுக்கு ஆதரவு வழங்கிவரும் நேயர் நண்பர்களுக்கு மிகவும் நன்றிகள். தொடர்பு கொள்கின்ற அனைவருமே கருத்துக் கடிதங்களும், மின்னஞ்சல்களும் அனுப்பினால் இன்னும் நலமாக இருக்குமல்லவா! முயற்சியுங்கள்.
தமிழன்பன் சீன வானொலி தமிழ்ப்பிரிவோடு தொடர்பு கொள்வோர் அனைவருமே கருத்துக் கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பி, தங்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம். இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, கடிதங்கள் மூலம் பெறப்பட்ட கருத்துக்களை கேட்கலாம்.
கடிதப்பகுதி
கலை முதலாவதாக, விளையாட்டுச் செய்திகள் பற்றி சின்னதாராபுரம் ஆர்.ஜெகன்குமார் அனுப்பிய கடிதம். வெற்றிகரமாக நடந்து முடிந்த குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றி இதில் அறிவிக்கப்பட்டது. பிரமாண்டமான துவக்கவிழா, ஆசிய நாடுகளின் சிறந்த பங்கேற்பு, அனைத்து நாடுகளின் செய்தி ஊடகங்களின் கவனம், போட்டிகளுக்கான சிறந்த ஏற்பாட்டிற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி அமைப்பு தலைவரின் பாராட்டு என பல தகவல்களை எங்களுக்கு இந்நிகழ்ச்சி வழங்கியது. உலகம் போன்றும் விதத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பெருமை சேர்த்துள்ள சீனாவுக்கு வாழ்த்துக்கள்.
தமிழன்பன் அடுத்தாக, தார்வழி டி.கே.பொன்னுசாமி தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். புதிய சீன சொற்கள் பலவற்றை இன்றைய வகுப்பில் அறிவிப்பாளர்கள் கற்றுக் கொடுத்தனர். தெளிவான உச்சரிப்புடன், நிறுத்தி சொல்லிக்கொடுப்பது பாராட்டத்தக்கது. சீன மொழியின் அறிமுகத்தை இந்நிகழ்ச்சி சிறப்பாக வழங்கி வருகிறது. மேலும், அடுத்த பத்தாண்டுகளில் வறுமையை ஒழிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதை செய்திகளில் கேட்டேன். வறுமையை இல்லாமல் ஆக்கும் சீனாவின் செயல்பாடுகள் வறுமையை ஒழிக்கும் உலக நாடுகளின் பணிகளில் சிறந்த பங்காற்றும்.
கலை தொடர்வது, இலங்கை பொலநறுவை எ.எல்.மஃபாஸ் அகமட் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து இக்கவிதையை எழுதியனுப்பியிருக்கிறார்.
பல சேவைகளுடன் இயங்கிவரும் சிஆர்ஐ வானொலியே
நீ மேலும் பல தசாப்தங்களில் -
மென்மேலும் பல நேயர்களை இணைத்துக் கொண்டு
நீ மேலும் பல நூற்றாண்டுகள் –
வையகத்தில் சேவையாற்ற பல கோடி வாழ்த்துக்கள்
நீ ஒலிபரப்பும் நிகழ்ச்சிகள், நிகழ்ச்சி மட்டுமல்ல,
நீ அனுப்பும் கடிதங்கள் வெறும் கடிதங்கள் மட்டுமல்ல
இவையெல்லாம் என் போன்ற நேயர்களுக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல
ஆர்வமூட்டும், எதிர்பார்ப்பு நிறைந்த பூரிப்புகளும் தான்
வாழ்க வளமுடன்.
தமிழன்பன் இனி, சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி இராசபாளையம் கா.கடற்கரை தங்கம் எழுதிய கடிதம். ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை போல சீனாவின் எழுத்துக்களை எழுதுவது கையெழுத்துக் கலையாக உள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். சீன எழுத்துக்களை எழுதுவதையே சிறந்த கலையாக கொண்டுள்ள சீனர்களின் கலை இரசனையை பாராட்டுகின்றேன். ஒவ்வொரு கலைத்துறையிலும் ஏற்படும் வளர்ச்சி அக்கலைகளை இக்காலத்திற்கு ஏற்றபடி மெருகூட்டும். வளர்ச்சியடைய செய்யும். அதுபோல சீன கையெழுத்துக் கலையில் ஏற்படும் வளர்ச்சி சிறந்த, அழகான சீன எழுத்துக்களின் உருவாக்கத்திற்கு அடிப்படையிடுவது திண்ணம்.
கலை அடுத்து, நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றி பொருநை பாலு அனுப்பிய கடிதம். நண்பர் இராகம் பழனியப்பன் வழங்கிய பேட்டியை இந்நிகழ்ச்சியில் கேட்டேன். சீன வானொலி பற்றிய தகவல்கள், அவரது ஈடுபாடு என பலவற்றை அவர் பகிர்ந்து கொண்டார். சீன வானொலியை வளர்ப்பதில் அவரோடு சேர்ந்து ஈடுபடும் நண்பர்கள் அனைவரையும் அவர் அறிய தந்தார். அவர் பேட்டி வழங்கிய விதமும் நடையும் பாராட்டத்தக்கது.
தமிழன்பன் தொடர்வது, உத்திரக்குடி கலைவாணன் ராதிகா சீன இசை நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒவ்வொரு சீனப் பாடலும், சீனாவின் பண்பாட்டையும், வளர்ச்சி கண்ணோட்டத்தையும் பாடலாய் ஒலித்து, மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தியது. குறிப்பாக இன்பம் காணும் தாய் நாடே உனக்கு நிரந்தர வாழ்த்துக்கள் என்ற பாடலும், நல்லிணக்கமான சீனா என்ற பாடலும், தாய் நாட்டுப்பற்றை காட்டியது.
கலை இனி, தார்வழி பி.முத்து செய்தி விளக்கம் பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் முதுமைகால காப்புறுதி சேவை பற்றி இதில் விளக்கப்பட்டது. சீனாவிலுள்ள பதினாறு கோடியே எழுபது இலட்சம் முதியோருக்கு குடியிருப்பு சேவை, முதுமைகால சேவைகளை வழங்குவதற்கு சீன நடுவண் அரசு நிதி உத்தரவாதம் செய்யும் நடவடிக்கை இதில் அறிவிக்கப்பட்டது. மேலும், முதுமைகால காப்புறுதியிலுள்ள குறைபாடுகளை அடுத்த ஐந்தாண்டுகளில் களைய முற்படுவதையும் இக்கட்டுரை எடுத்துக் கூறியது.
தமிழன்பன் அடுத்ததாக, பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன் சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். தேயிலை அருங்காட்சியகத்தை அறிமுகம் செய்யதன் மூலம், சீனாவில் தேயிலையின் சிறப்பு, பெருமை, பண்பாடு மற்றும் விழா அனைத்தையும் விளக்கி எங்களை நேரில் பார்த்ததுபோல் அறிவிப்பாளர் உணர செய்தார். பச்சை, சிவப்பு, வெள்ளை, கறுப்பு என பல வண்ணங்கள் கொண்ட தேயிலை வகைகள் சீனாவில் உள்ளதை கேள்விப்பட்டபோது, சீனாவில் தேயிலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் அறிய முடிந்தது.
கலை தொடர்வது, நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி விழுப்புரம் எஸ்.சேகர் அனுப்பிய கடிதம். சிறுவயதிலிருந்தே கவிதை எழுத தொடங்கி, பின்னர் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது சிறந்த கவிஞராக வலம்வரும் கவிஞர் சால்மா அவர்களின் பேட்டியை கேட்டு இரசித்தோம். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்ணொருவர் முன்னுக்கு வந்து வெளியுலகில் சிறப்பாக செயல்பட தொடங்குவதில் பல தடைகள் உண்டு. பொதுவாக, இந்தியாவில் பெண்களுக்கு மதிப்பு இருப்பதையும், தனித் தொகுதிகளில் மனைவி போட்டியிட்டு வெற்றிபெற்றால், அவரது கணவனே எல்லா செயல்பாடுகளையும் கவனிப்பதையும் அவர் மனம் திறந்த பேசியது மிகவும் பிடித்திருந்தது.