கலை அன்பான நேயர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்கள் கருத்து கடிதங்களையும், மின்னஞ்சல்களையும் தொகுத்து வழங்குவது தி.கலையரசி
தமிழன்பன் தமிழன்பன். நேயர் நண்பர்களின் கருத்துக்களை இந்நிகழ்ச்சி வழியாக அனைவருக்கும் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
கடிதப்பகுதி
கலை இன்றைய கடிதப்பகுதியில் முதலாவதாக, அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி ஆரணி ஜெ.அண்ணாமலை எழுதிய கடிதம். 2010 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சீனாவின் இடைகால மற்றும் நீண்டகால திறமைசாலிகள் வளர்ச்சி வரைவு திட்டம் இந்நிகழ்ச்சியில் விவரிக்கப்பட்டது. புத்தாக்க அறிவியல் தொழில்நுட்ப திறமைசாலிகளை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளித்து, உயர்நிலை புத்தாக்க தொழில்நுட்ப அணிகளை வளர்ப்பது பற்றி இதில் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளின் திறமைசாலிகளை புகுத்துவதற்கு இத்திட்ட வரைவு ஈர்ப்பு ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழன்பன் அடுத்தாக, மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி புதிய காத்தான்குடி எம்.ஆர்.எப்.அத்தீகா அனுப்பிய கடிதம். கடலுக்கு முத்து, புவிக்கு வானம், ஆசியாவுக்கு சீனா, சீனாவிற்கு சீன வானொலி என்று சிறப்பு மக்கள் மனங்களில் நிலவி வருவதில் பெருமையடைகின்றேன். தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளில் மலர்ச்சோலை நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். சீனாவில், உலகில் நடைபெறும் பல வியப்பான நிகழ்வுகளை எமக்கு அறிய தரும் சிறந்த நிகழ்ச்சியாக இது ஒலிக்கிறது. அடுத்த நிகழ்ச்சியை கேட்பதற்கு ஒவ்வொரு வாரமும் ஆவலாய் காத்திருக்க செய்யும் நிகழ்ச்சி இது.
கலை தொடர்வது, கொரிய தீபகற்ப அமைதி பற்றி ஈரோடு எம்.சி.பூபதி எழுதிய கடிதம். கொரிய தீபகற்ப பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு சீனாவிற்கு தான் உள்ளது. அமெரிக்கா கொரிய பிரச்சனையில் தலையிடுவது தேவையற்றது. முறையற்றதும் கூட. அமெரிக்கா உலகின் காவல்காரன் அல்லவே. மேலும், சீனா இந்தியா இடையே 14வது சுற்று பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெற்றது பற்றி கேட்டோம். இவ்விரு நாடுகளும் அதிக மக்கள்தொகையுடன், சிறந்த வளர்ச்சி பெற்றுவரும் மனிதநேய மிக்க நாடுகள். இவற்றின் நட்புறவு நாளும் வளர்க!
தமிழன்பன் இனி, சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சி பற்றி மெட்டாலா எஸ்.பாஸ்கர் அனுப்பிய கடிதம். திபெத்திலுள்ள போத்தலா மாளிகையில் இருக்கின்ற பழங்கால தொல்பொருட்களை சீன நடுவண் அரசும், திபெத் அரசும் பாதுகாத்து வருகிறது. மரத்துண்டுகளால் கட்டியமைக்கப்பட்ட தடுப்புகளிலுள்ள ஓவியத்தை பாதுகாத்து வரலாற்று சின்னமாக காத்து வருகின்றனர். 1300 ஆண்டுகளுக்கு மேலான பழங்கால தொல்பொருட்களை நடுவண் அரசு ஏராளமான நிதி ஒதுக்கி பாதுகாத்து வருகிறது என்று பல்வேறு தகவல்களை இந்நிகழ்ச்சியில் அறிந்தேன்.
கலை அடுத்து, திருச்சி ஒ.அண்ணாமலைரெட்டி செய்திகள் பற்றி எழுதிய கடிதம். சீனாவும், இந்தியாவும் பாதுகாப்பு, பொருளாதாரம், தொலைத்தொடர்பு ஆகிய தொழில்துறைகளில் பண்டைகால பண்பாட்டுடன் இணைந்து ஒத்துழைக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பதை அறிந்தேன். மேலும், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கலை, பண்பாடு, பொருளாதார முன்னேற்றங்களுக்கு சீனா சிறந்த பங்களித்திருப்பது மகத்தானது. சீன கொரிய நட்புறவு மேலும் வளர ஒத்துழைக்க உறுதி கூறப்பட்டிருப்பது சிறந்த முடிவு.
தமிழன்பன் தொடர்வது, நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் சீனக் கதை பற்றி அனுப்பிய கடிதம். ஆசைக்கு அளவில்லை. ஆனால் எதற்கும் ஓர் எல்லையுண்டு என்பதை இக்கதை விளக்கியது. தன்னை வளர்த்தவன் சிக்கலில் இருந்தபோது, தனது ஒரு கண் மணியை கொடுத்து மீட்ட டிராகன், அரசையே ஆள விரும்பி அதனுடைய அடுத்த கண் மணியை கேட்ட அவனை கொன்றுவிட்டது. ஒவ்வொரு நாளும் முட்டையிட்ட கோழியை கொன்றுவிட்டால், மொத்தமாக முட்டைகளை எடுத்து விற்றுவிடலாம் என்று எண்ணிய பேராசைகாரனைத்தான் இக்கதை நினைவூட்டியது. ஆசையால் மோசம் போனால் அழிவு என்பதை இக்கதை எடுத்தியம்பியது.
கலை இனி, வறுமை ஒழிப்பு பணியில் செல்லிடபேசி சேவை பற்றி ஆந்திரா மாநிலம் அசுவபுரத்திலிருந்து மும்பை சுகுமார் எழுதிய கடிதம். வறுமையை ஒழிப்பதில் செல்லிடபேசி பயன்படுவதை இந்த கட்டுரையில் கேட்டேன். தொலைத்தொடர்பை சமூக அக்கறையோடு பயன்படுத்தும் சிறந்த சேவை என்று இதை கூறலாம். வறியோறும் பயனடையும் வகையில் தொலைத்தொடர்பு வளர்ந்துள்ளது இக்கால அறிவியல் முன்னேற்றத்தின் நன்மை. எல்லா நாடுகளும் தொலைத்தொடர்பு சேவையை வறியோருக்கு நன்மை பயக்கும் விதமாக அமைத்து வளர்ப்பது மக்களுக்கு நலன்கள் தரும்.
தமிழன்பன் அடுத்ததாக, ஈரோடு திண்டல் ரா.காயத்ரி தேவி இசை நிகழ்ச்சிகள் பற்றி அனுப்பிய கடிதம். சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளில் இடம்பெறும் இசை நிகழ்ச்சிகள் அனைத்துமே சிறப்பாக உள்ளன. குழப்பமான மனங்களுக்கு இதம் அளித்து குழப்பங்களை தணிவு செய்வது இசைகள் தான். சீன இசை நிகழ்ச்சி செவிகளுக்கு விருந்தளிக்கும் தேனருவி. ஞாயிற்று கிழமை ஒலிபரப்பாகும் நேயர் விருப்பம் தமிழ் வானொலிகளில் கேட்பதற்கு அரிய திரைப்படப் பாடல்களை வழங்கி மகிழ்ச்சியளிக்கின்றது. இரண்டு பொம்மைகளை சிறு குழந்தையிடம் காட்டி எது வேண்டும் என்றால் இரண்டையுமே கேட்பதைபோல தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் தலைசிறந்தவையாக திகழ்கின்றன.
கலை தொடர்வது, இலங்கை புதிய காத்தான்குடி எம்.ஆர்.எப்.அக்கீலா சீன வரலாற்று சுவடுகள் பற்றி எழுதிய கடிதம். சீன வானொலி ஒலிபரப்பும் அனைத்து நிகழ்ச்சிகளும் மனதிலிருந்து நீங்காத நிகழ்ச்சிகளாக இருந்தாலும், சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி நான் விரும்பும் சிறந்த நிகழ்ச்சியாகும். சீனாவின் வளர்ச்சிப் பாதைகளை பின்னோக்கி பார்ப்பதை இந்த நிகழ்ச்சி நனவாக்குகிறது. அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து வளரும் சீனாவின் அணுகுமுறையை இந்நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவூட்டும்.
தமிழன்பன் இனி, விளையாட்டுச் செய்திகள் பற்றி சென்னை மறைமலைநகர் சி.மல்லிகாதேவி அனுப்பிய கடிதம். இந்தியா விளையாட்டு துறையில் முன்னேறி வருவதையும், காமன்வெல்த் போட்டியில் இந்தியா பெற்ற சாதனைகளையும் விளக்குவதாக இந்நிகழ்ச்சி அமைந்தது. குறிப்பாக இளம் வீரர்கள் பயிற்சிபெற்று முன்னணி பெறுவதை இதிலிருந்து அறிய முடிந்தது. இச்செய்தி இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளித்து, மேலும் பல சாதனைகளை பெற ஊக்கமளிக்கும்.