• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடிதப் பகுதியில் 11 நேயர் நண்பர்கள்தெரிவித்த கருத்துக்கள்
  2011-06-02 18:22:23  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜுன் முதல் நாளிட்ட நேயர்நேரம் நிகழ்ச்சியின் கடிதப் பகுதியில் 11 நேயர் நண்பர்கள் பங்கு கொண்டுள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு ரசியுங்கள்.

கலை அன்பான நேயர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சி மூலம் உங்களை வானலை வழியாக சந்திப்பது தி.கலையரசி.

தமிழன்பன் தமிழன்பன். உங்களது கருத்துக்களை நேயர் நண்பர்கள் அனைவரும் அறிய இந்நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

கலை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னால், நேயர் நண்பர்களுக்கு சுவையூட்டும் தகவல் ஒன்றை அறிவிக்கின்றோம். ;சீன வானொலி நிலையத்தின் 70வது ஆண்டு நினைவில் சீன வானொலி நடத்துகின்ற பொது அறிவுப் போட்டி ஒன்ரும், சீன இந்திய பண்பாடு ஆண்டான 2011ம் ஆண்டை முன்னிட்டு தமிழ்ப் பிரிவு நடத்துகின்ற பொது அறிவுப் போட்டி ஒன்றும் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளன. அவற்றிற்கான விவரங்களை கூடிய விரைவில் அறிவிப்போம். இவ்விரு பொது அறிவுப் போட்டிகளிலும் அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழன்பன் பொது அறிவுப் போட்டி பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்துகொள்ள சீன வானொலி நிகழ்ச்சிகளை தொடர்ந்து தவறாமல் கேட்டு வாருங்கள். சரி! இன்றைய நிகழ்ச்சிக்கு செல்லலாமா!!!!!!

கடிதப்பகுதி

கலை இனறைய கடிதப்பகுதியில் முதலாவதாக, தாசப்ப கவுண்டன் புதூர் எஸ்.சுதர்சன் சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். உய்கூர் இனத்தை சேர்ந்த சீன நாட்டு வானம்பாடி என்று பெருமையுடன் அழைக்கப்படும் 50 வயதான பெண்மணியை பற்றியதாய் இந்நிகழ்ச்சி அமைந்தது. பல்கலைக்கழத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற அவர் 1997-98 ஆண்டின் இசை நாடக விருது பெற்ற பெருமைக்குரியவர். தலைசிறந்த நடிப்பாலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை கவர்ந்துள்ள அவரது கலையுலக பங்களிப்பு இன்னும் அதிகரிக்கவும், மேலும் சிறப்பு பெறவும் வாழ்த்துகின்றோம்.

தமிழன்பன் அடுத்தாக, கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன் அனுப்பிய கடிதம். சீனாவில் முதியோரின் வாழ்க்கையை பற்றிய கலந்துரையாடலாக தமிழ்ப்பிரிவின் தலைவர் கலையரசி இந்நிகழ்ச்சியை வழங்கினார். முதியோரின் வாழ்க்கையிலும், அவர்களின் பாதுகாப்பிலும் சீன அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அறிந்து கொண்டோம். இத்தகைய திட்டங்கள் மூலம் சீனாவின் கிராமப்புறங்களில் வாழும் முதியோரின் சீரான வாழ்க்கை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. முதியோர் மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வதை அறிந்து கொண்டோம்.

கலை தொடர்வது, இலங்கை புதிய காத்தான்குடி பு.மு.பா.அஸ்ரா தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீன வானொலி மூலம் ஒலிபரப்பாகி வரும் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி, சீன மொழியை கற்றுக்கொள்ளும் ஆவலை எற்படுத்தியுள்ளது. கற்பதற்கு கடினம் என்று எண்ணப்படும் சீன மொழியை இலகுவாக, எளிய தமிழில் புரியவைத்து அறிவித்து வருவது, புதிய மொழி கற்க நல்ல வாய்ப்பு. இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ள சீன வானொலி தமிழ்ப்பிரிவிக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

தமிழன்பன் இனி, கோவை எ.வி.தர்மலிங்கம் சீனர்களின் இந்திய நடனப் போட்டி பற்றி அனுப்பிய கடிதம். சீனர்கள் இந்திய நடனங்களை ஆடிக் கலக்குவதை இணையத்தில் பார்த்தேன். சிறந்த நளினங்களுடன் போற்றும் படியாக இந்திய நடனங்களை சீனர்கள் கற்று ஆடியிருப்பதை ஒளிப்படங்களில் பார்த்து பெருமிதம் அடைந்தேன். இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவே நடத்தியிருக்கலாம். அப்படியானால், இன்னும் பலர் இந்த நடனங்களை கண்டு மகிழ்நது பாராட்டியிருப்பர்.

கலை அடுத்து, அரியலூர் மாவட்ட சோழன் சீன வானொலி நேயர் மன்றக் கூட்டம் பற்றி அம்மன்றத்தின் தலைவர் சு.கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். 2011 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 26 ஆம் நாள் குமார் பாராமெடிக்கல் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் திரு.த.ஞானசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சீன முயல் புத்தாண்டின்போது, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பிப்பது, சீன வானொலி ஒலிபரப்பும் தகவல்களை துண்டறிக்கை மூலம் அனைவருக்கும் அறிவிப்பது, புதிய கிளை மன்றங்களை உருவாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழன்பன் தொடர்வது,சீன வானொலி தமிழ்ப்பிரிவு, நேயர்களுக்கு வழங்கும் முக்கியத்துவம் பற்றி கடலூர் வி.சு.குமரன் அனுப்பிய கடிதம். ஞாயிற்று கிழமை நேயர் கடிதம், நேயர் விருப்பம், செவ்வாய் கிழமை நேருக்குநேர், புதன் கிழமை நேயர்நேரம், வெள்ளிக்கிழமை உங்கள் குரல் ஆகிய நிகழ்ச்சிகள் வழியாக நேயர்கள் பலரும் சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க அளிக்கும் வாய்ப்புகளை பாராட்டுகின்றேன். நேயர்களுக்கு தமிழ்ப்பிரிவு வழங்கும் முக்கியத்துவத்தை இந்த நிகழ்ச்சிகள் சுட்டுகின்றன.

கலை இனி, விழுப்புரம் எஸ்.சேகர் அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். தூய்மையான எரியாற்றல் கொள்கையில் சீனா முன்னிலை வகிப்பது பாராட்டுக்குரியது. நிலக்கரியை எரியாற்றலாக பயன்படுத்தும் சிறிய 100 ஆலைகளை மூடிவிட்டு, 15 விழுக்காடு மாசுபாட்டை குறைக்கும் முயற்சி எடுக்கப்படுவதை அறிந்தேன். மேலும், நீர் மின் நிலையங்களிருந்து கிடைக்கும் 20 கோடி கிலோவாட் மின்னாற்றலை 30 கோடி கிலோவாட்டாக உயர்த்தவும் பணிகள் தொடங்கியுள்ளன. இவ்விரண்டும் சீனாவின் தூய்மையான எரியாற்றல் துறை வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமையும்.

தமிழன்பன் அடுத்ததாக, ஆர்காடு ஜி.மாலதி சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீன மக்களின் இக்கால வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் சீன திரைப்படவிழா இலங்கையில் நடைபெற்றதை வான்மதி விளக்கினார்கள். இந்த திரைப்பட விழாவின சிறப்பு அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் தொகுக்கப்பட்டன. மேலும், சீனாவிலுள்ள மாற்றுத் திறனாளிகள் ஓரளவு வசதியான வாழ்க்கை நடத்துவதையும், இந்நிலையை தொடர்ந்து உத்தரவாதம் செய்ய 570 கோடி யுவான் ஒதுக்கப்படுவதையும் செய்திகள் வழியாக அறிந்தேன்.

கலை தொடர்வது, அதிகவேக தொடர்வண்டி பற்றி மாநாடு தொடர்பாக பரசலூர் பி.எஸ்.சேகர் எழுதிய கடிதம். பெய்ஜிங் மாநகரில் நடந்துவரும் இந்த மாநாடு, தொடர்வண்டி தொழில்நுட்பங்களில் காணப்படும் வளர்ச்சி பற்றி விவாதிக்கிறது என்று செய்திகள் மூலம் கேள்விப்பட்டேன். 2050 ஆம் ஆண்டுகளில் மணிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் தொடர்வண்டி தொழில்நுட்பங்கள் சீனாவில் உருவாகும் என்பதை அறிந்து பிரமிப்பு அடைந்தேன். எல்லா துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்களை சீன அரசு புகுத்தி வருவது பாராட்டத்தக்கது.

தமிழன்பன் இனி, செய்திகள் பற்றி விழுப்புரம் எஸ்.பாண்டிராஜன் அனுப்பிய கடிதம். 2001 ஆம் ஆண்டு முதல் திபெத்தின் நாடோடி ஆயர்கள் ஓரிடத்தில் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். திபெத்தில் நிகழ்ந்து வரும் சீர்திருத்த்தின் முக்கிய பங்கை இது வெளிப்படுத்துகிறது. நாடோடியாக வாழ்ந்தவர்கள் குடியிருப்புகளில் வாழ தொடங்கியிருக்கிறார்கள் என்றால் அங்கு மாபெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. கல்வி, சாலை, குடிநீர், சுகாதாரம், அங்காடி, தகவல் தொடர்பு, மின்சாரம் போன்ற மேம்பட்ட வசதிகளை அவர்களின் குடியிருப்புகளில் சீன அரசு செய்திருப்பதை அறிய முடிந்தது. உலகின் கூரை என்று அழைக்கப்படும் திபெத்தின் வளாச்சி விண்ணை எட்டுவதாக அமையட்டும்.

கலை அடுத்து, சீன இசை நிகழ்ச்சி பற்றி குடியாத்தம் டி.சுடர்கொடி எழுதிய கடிதம். சீனாவின் புத்தாண்டாக கொண்டாடப்படும் வசந்த விழாவையொட்டிய சீன இசை நிகழ்ச்சியை கேட்டு மகிந்தேன். இந்நிகழ்ச்சியில் ஒலிபரப்பான நான்கு பாடல்களும், வசந்த விழா காலத்தில் சீன மகக்ள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியை எமக்கு வெளிப்படுத்துபவையாக அமைந்தன. இந்த கொண்டாட்டத்தின் மூலம் சீன மக்களின் எதிர்பார்ப்பையும் இப்பாடல்கள் அறிவிப்பதாய் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040