• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாகூரை நினைவு கூர்வதற்கான கொண்டாட்டம்
  2011-07-01 09:02:36  cri எழுத்தின் அளவு:  A A A   








இந்தியாவின் புகழ் பெற்ற மகத்தான கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூருவது பற்றி சீன-இந்திய பண்பாட்டு ஆண்டின் அம்சமாக பொது அறிவு போட்டியை நடத்துகின்றோம். இந்த போட்டியின் முதலாவது கட்டுரையில் பெய்ஜிங்கில் ரபீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நினைவு கொண்டாட்டம் பற்றி கூறுகின்றோம்.

கட்டுரை வழங்குவதற்கு முன் இது தொடர்பான இரண்டு வினாக்களை கவனமாக கேளுங்கள்.

1. தாகூரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு பெய்ஜிங்கில் எப்போது நினைவு கூட்டம் நடைபெற்றது?

2. எத்தனை அறிஞர்கள் இந்த நினைவு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்?

சரி, இப்போது எங்களுடன் சேர்ந்து இப்போட்டியின் முதலாவது கட்டுரையை கேளுங்கள்.

தாகூர் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலும் மிகவும் புகழ் பெற்ற கவிஞராக போற்றப்பட்டுள்ளார். தலைச்சிறந்த கவிஞர், எழுத்தாளர், இலக்கிவாதி, சமூக ஆர்வலர் என பல பெருமைகளை மக்கள் அவருக்கு சூட்டியுள்ளனர். அவர் படைத்த படைப்புகளில் "கீதாஞ்சலி","இலக்கற்ற பறவைகள்","பிறைநிலா"போன்றவை இடம் பெறுகின்றன. 1937ம் ஆண்டு தாகூர் கல்கட்டாவில் அமைந்துள்ள சாந்திநிதிகேதனில் இந்திய சர்வதேச பல்கலைக்கழகத்தில் சீனா தொடர்பான பாடப்பிரிவை நிறுவினார். சீன-இந்தியப் பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு அவர் முக்கிய பங்கு ஆற்றினார். இந்த மகத்தான கலைஞரை நினைவு கூரும் வகையில் வெளிநாடுகளுடனான சீன மக்கள் நட்புச் சங்கம் இவ்வாண்டு பல பண்பாட்டு நடவடிக்கைகளை நடத்துகிறது. தாகூர் பிறந்த நாளான மே 7ம் நாளன்று தாகூர் பிறந்த 150வது நாளை நினைவுக் கொண்டாடுவது தொடர்பான பண்பாட்டு நடவடிக்கைகளின் துவக்க விழா பெய்ஜிங்கில் நடைபெற்றது. வெளிநாடுகளுடனான சீன மக்கள் நட்புச் சங்கத்தின் தலைவர் chen hao su, சீனாவுக்கான இந்திய தூதர் S.Jaishankar , சீனாவுக்கான வங்காள தேசத் தூதர் Munshi Faiz Ahmad ஆகியோர் இந்த துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

துவக்க விழாவில் சங்கத்தின் தலைவர் chen hao su மகிழ்ச்சி நிறைந்த உணர்வுடன் உரை நிகழ்த்தினார். உலகின் கலையிலக்கிய வரலாற்றில் தாகூர் வெளிக்கொணர்ந்த பங்கினை அவர் பாராட்டி பேசினார். இது பற்றி அவர் மூன்று கருத்துக்களை தொகுத்து விளக்கினார்.

முதலில் தாகூர் இந்தியாவின் மிக மகத்தான நாகரிகத்தை வெளிக்கொணர்ந்தவராவார். புதிய காலத்தில் நாகரிகம் மீட்கப்படும் போக்கை உறுதிப்படுத்தியவராக அவர் திகழ்ந்தார். கவிதை படைப்பதன் மூலம் உலகிற்கு இந்தியாவின் பண்டைக்கால பண்பாட்டுப் பாரம்பரியத்தை விளக்கிக் கூறினார். இரண்டாவதாக, தாகூர் மகத்தான சீன நாகரிகத்தைப் புரிந்து கொண்டவர். சீன மக்களின் நெருங்கிய நண்பராவார். மாபெரும் மனித நேய எழுச்சியுடன் தாகூர் சீன மக்கள் மீது அன்பு கொண்டு இரு நாடுகளுக்கிடையில் நெருங்கிய தொடர்பை உருவாக்க பாடுப்பட்டார். ஆகவே அவர் சீன மக்களால் மதிப்புடன் போற்றப்பட்டு அன்பு செய்யப்பட்டார். மூன்றாவதாக, தாகூர் மனித குலத்தின் நாகரிக முன்னேற்றத்திற்குத் துணை புரிந்தவராவார். அத்துடன் இதற்காக அவர் அவரது முழு வாழ்வையும் அர்ப்பணித்தார்.

சீனாவுக்கான இந்திய தூதர் S.Jaishankar சீனாவில் தாகூரை நினைவு கூரும் நடவடிக்கைகளை நடத்துவதற்குப் பாராட்டு தெரிவித்தார். இவ்வாண்டு சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டாகும். இந்த நேரத்தில் இரு நாடுகளும் தாகூரை நினைவு கூரும் நடவடிக்கைகளை கூட்டாக நடத்துவது மிகவும் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது. இது பற்றி அவர் கூறியதாவது.

ஆசிய சமூகத்தின் மறுமலர்ச்சியை தாகூர் வலியுறுத்தினார். என்பதில் ஐயமேயில்லை. அவரது கருத்து பொருளாதார மற்றும் அரசியல் துறைகளுக்கு ஏற்படுத்திய செல்வாக்கை இப்போதுதான் நாம் உணரத் துவங்கியுள்ளோம். ஆசிய நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் சீனா நெருக்கமாக ஒத்துழைப்பதன் மூலம் கூட்டு நலனை முன்னேற்றலாம். மேலும் வலிமைமிக்க இந்திய-சீன உறவை நிறுவுவது சர்வதேச பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீன பாடப்பிரிவை நிறுவிய கலைஞர் தாகூருக்கு மிகச் சிறந்த அன்பளிப்பாக திகழ்கின்றது என்று தூதர் S.Jaishankar கூறினார்.

இந்த நினைவு நடவடிக்கைகளை நடத்துவது பற்றி சீனாவுக்கான வங்காள தேச தூதர் Ahmad வெளிநாடுகளுடனான சீன மக்கள் நட்புச் சங்கத்துக்கு நன்றி தெரிவித்தார். சீனா, இந்தியா, வங்காள தேசம் ஆகிய மூன்று நாடுகளின் அறிஞர்கள் ஒன்று கூடி, சீனாவில் கல்வியியல் ஆய்வை நடத்தினால் இம்மூன்று நாடுகளுக்கிடை பண்பாட்டுப் பரிமாற்றம் வலுப்படுத்தப்படும். இம்மூன்று நாடுகளின் மக்களுக்கிடையிலான நட்பு அதிகரிக்கும் என்று தூதர் Ahmad கருத்து தெரிவித்துள்ளார். அதேவேளையில் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கியதற்காக சங்கத்தின் தலைவர் சென்னிடம் நன்றி தெரிவித்தார்.

சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட பண்பாட்டு மற்றும் கலையிலக்கிய துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் தாகூரை நினைவு கூரும் கூட்டத்தில் கலந்து கொண்டதோடு நினைவுத் தலைப்புகள் பற்றி கலந்தாய்வு மேற்கொண்டனர்.

அவர்களில் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன மற்றும் தென்கிழக்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் shao bao li அம்மையார் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

வெவ்வேறான பண்பாடுகளை ஆராய்வதில் தாகூர் வெளிக்காட்டியுள்ள முயற்சி, மனவுறுதி, திறமை என்பன சீனா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த நாடுகளுக்கு நீங்காத நினைவை விட்டுச் சென்றுள்ளன. அதேவேளையில் இலக்கியச் செல்வாக்கு மற்றும் கல்வி துறைகளில் அவரது ஆற்றல் அழிக்கப்பட முடியாத பதிவுகள் இடம் பெறுகின்றன. தற்கால இந்திய-சீன நட்புறவின் மிக உறுதியான தங்கப் பாலத்துக்கு ஒப்பான பங்கை தாகூர் ஆற்றியுள்ளார் என்று shao bao li அம்மையார் தெரிவித்தார்.

சீன-இந்திய பண்பாட்டு ஆண்டு துவங்கும் வேளையில் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வெளிநாடுகளுடனான சீன மக்கள் நட்புச் சங்கத்தின் தலைவர் chen hao su கூறினார்.

மகத்தான கவிஞர், பண்பாட்டு கலையிலக்கியவாதியான தாகூர் மிகப்பல பங்கு ஆற்றியுள்ளார். அவருக்கும் சீன மக்களுக்குமிடை நட்பார்ந்த ஒத்துழைப்பு முயற்சியில் நாங்கள் மிகவும் கவனம் செலுத்தியுள்ளோம். தாகூர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது சீன அறிஞர்களுடன் ஏற்பட்ட சிறந்த தொடர்பை அவர் நிலைநிறுத்தினார். சீன மக்கள் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போது தாகூர் சீன மக்களுக்காக உரை நிகழ்த்தினார். எங்களது இந்நடவடிக்கையில் இந்திய மற்றும் வங்காள தேச தூதர்களும் கலந்து கொண்டமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம் மூன்று நாடுகளிடை உறவு மிகவும் நெருக்கமானது என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது என்றார் அவர்.

சீன-இந்திய பண்பாட்டு ஆண்டு என்னும் பொது அறிவு போட்டியின் முதலாவது கட்டுரையை கேட்டீர்கள். நாளை இந்த பொது அறிவுப் போட்டியின் இரண்டாவது கட்டுரை ஒலிபரப்பப்படும். தவறாமல் கேளுங்கள். போட்டியில் விறுவிறுப்பாக கலந்து கொண்டு பங்கு ஆற்றுங்கள். அருமையான பரிசு பெறும் வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040