இந்தியாவின் புகழ் பெற்ற மகத்தான கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூருவது பற்றி சீன-இந்திய பண்பாட்டு ஆண்டின் அம்சமாக பொது அறிவு போட்டியை நடத்துகின்றோம். இந்த போட்டியின் 3வது கட்டுரையில் தாகூரின் படைப்புகள் குறித்து சீன அறிஞர்கள் செய்த ஆய்வுகள் பற்றி முக்கியமாக விளக்கிக் கூறுகின்றோம்.
கட்டுரை வழங்குவதற்கு முன் இது தொடர்பான இரண்டு வினாக்களை கவனமாக கேளுங்கள்.
1. தாகூரின் படைப்புகளை ஆராய்வதன் மூலம் முதலாவதாக பட்டம் பெற்றவரின் பெயரைக் குறிப்பிடுக.
2. சிவ பெருமான் பற்றிய எண்ணங்கள் தாகூரின் மனதில் எந்த அளவில் உள்ளன?
தாகூர் இந்தியாவில் மட்டும் புகழ் பெற்ற கவிஞராக இருக்கவில்லை. சீனாவின் இலக்கியத் துறையிலும் ஆழ்ந்த செல்வாக்குக் கொண்டுள்ளார். அவர் சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்ற வரலாற்றில் மாபெரும் பங்கு ஆற்றியுள்ளார். அவரைப் போதியளவில் நினைவு கூரும் நடவடிக்கைகள் நடைபெறுவது வரவேற்கத்தக்கது. சீனாவில் தாகூரின் படைப்புகள் தொடர்பான ஆய்வு 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது எனலாம். சீன சமூக அறிவியல் கழகத்தின் தெற்காசிய ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த லீயூச்சியன் என்பவர், தாகூரின் படைப்புகளை ஆராய்வதன் மூலம் பட்டம் பெற்ற முதல் சீனவராவார். 1981ம் ஆண்டு சீனாவில் புகழ் பெற்ற அறிஞர் ji xian linஇன் தலைமையில் நடைபெற்ற பட்டம் பெறுவதற்கான நேர்முகத்தில் "தாகூரின் குறும் புதினத்தின் புத்தாக்கம்"பற்றி ஆய்வுக் கட்டுரையை அவர் வாசித்தார். அவர் விளக்கிய நுணுக்கமான கருத்துக்கள் இந்த நேர்முகத்தில் கலந்து கொண்ட நிபுணர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டன. அவர் வெற்றியையும் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். எமது செய்தியாளருக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது.
தாகூரின் குறும் புதினங்கள் கலை ஈர்ப்பு மிகுந்தவை. இந்திய விவசாயிகள் மீதான அன்பான உணர்வை இவற்றில் நிறைவாக படிக்க முடியும். இந்த உண்மையான உணர்வு நம்மையும் ஆட்கொள்ளும். அவர் கவிஞராக இருந்ததால் அவர் படைத்த குறும் புதினங்களில் கவிதையுணர்ச்சி நிறைந்த அம்சங்களை உணரலாம்.
தாகூரின் படைப்புகளை ஆய்வு செய்வதன் மூலம் முதலில் முதுகலை பட்டம் பெற்றவர் யார்?
தாகூரின் படைப்பு "கீதாஞ்சலி"யை ஆய்வு செய்து zeng qiong என்னும் பெண்மனி முனைவர் பட்டம் பெற்றார்.
அவர் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2007ம் ஆண்டு ஜுலை திங்கள் வரையான காலத்தில், சீன-இந்திய கல்வி பரிமாற்றத் திட்டப்பணியின் மூலம் இந்தியாவில் சிறப்பு கல்வி பெற்றார். அவர் இந்தியாவின் சர்வதேசப் பல்கலைக்கழகத்தின் வங்காள மொழித் துறையில் வங்காள மொழி இலக்கியத்தை படித்தார். "கீதாஞ்சலி" தொடர்பான பல்வகை மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்த அடிப்படையில் அவரது ஆய்வுக் கட்டுரையை எழுதினார். 2009ம் ஆண்டு ஜுன் திங்கள் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.
"கீதாஞ்சலி"கவிதைத் தொகுப்பு நோபல் இலக்கிய பரிசு பெற்ற படைப்பாக திகழ்கின்றது. தற்கால இலக்கிய வரலாற்றில் இந்தப் படைப்பு மிக அதிக செல்வாக்கை கொண்டுள்ளது. "கீதாஞ்சலி" கவிதைத் தொகுப்பில் தாகூர் தாம் மிகவும் நம்பிக்கை கொண்ட கடவுளுக்கு முன்னால் தனது அரசியல் நிலைப்பாடு, தத்துவக் கண்ணோட்டம், இலக்கியத் தத்துவம் ஆகியவற்றையும் தனது மகிழ்ச்சி மற்றும் வேதனையையும் விளக்கிக் கூறுகிறார். தாம் விரும்பிய மன்னராட்சியையும் அவர் இந்த கவிதைத் தொகுப்பில் வர்ணித்துள்ளார். ஆகவே "கீதாஞ்சலி" கவிதைத் தொகுப்பை படிக்கும் போது தாகூரின் சிந்தனையை ஆழமாக அறிந்து கொள்ளலாம். தவிரவும், இது சீனாவில் வெளிநாட்டு இலக்கியத்தை மொழியாக்குவதற்கு ஒரு மாதிரியாக கருதப்படலாம்.
Zeng qiong தவிர, liu lian என்பவரும் சீனாவில் தாகூரின் படைப்புகள் பற்றிய ஆய்வில், இன்னொரு திறமைசாலியாக அழைக்கப்படுகின்றார். தாகூரின் கவிதைகளில் சிவ பெருமானின் தோற்றம் பற்றி அவர் ஆய்வுக் கட்டுரை எழுதினார். 2007ம் ஆண்டு இந்த கட்டுரையின் மூலம் அவர் முதுகலை பட்டம் பெற்றார்.
சிவ பெருமான் இந்தியாவின் மதத்தத்துவங்களின் சிக்கலான இருவேறு தன்மைகளை வெளிப்படுத்தும் கடவுளாகும். சிவ கடவுளுக்கு நல்ல குணம், கோபம், உற்சாகம் உற்சாகமின்மை ஆகியவை உண்டு. அவர் ஆக்கவும் செய்வார், அழிக்கவும் செய்வார்.
சிவ பெருமானை தனது ஆய்வு மாதிரியாக தேர்வுசெய்வது பற்றி liu lian கூறியதாவது.
சிவ பெருமான் பற்றிய எண்ணங்கள் தாகூரின் மனதில் மையமாக உள்ளன. படைப்பாளர் குறிப்பாக கவிஞராகிய தாகூர் வாழ்க்கையை வெளிப்படுத்தும் போது தனது சிந்தனையை கற்பனையுடன் இணைப்பது இயல்பே. தாகூரின் கவிதைகளில் மனதின் உள்ளார்ந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தப்படுகின்றது. ஆகவே அவரது கவிதைகளில் தாம் கொண்டுள்ள இரட்டைத் தன்மை மற்றும் முரண்பாட்டுக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. சமூகம் பற்றி மனநிறைவின்மையை தெரிவிக்கும் போது சிவ பெருமானின் கருத்துக்களைப் பயன்படுத்தினார். சிவ பெருமானின் கூற்றை மேற்கோள்காட்டி சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்த தாகூர் முயன்றார் என்று liu lian விவரித்தார்.
தாகூர் ஒரு தலைசிறந்த சமூகவாதியாவார். அவரது சமூக நடைமுறைகள் சமூக அரசியல், மதத் தத்துவம், பண்பாடு, கல்வி முதலிய துறைகளுடன் தொடர்புடையவை. இலக்கியத் துறையில் புத்தாக்கம் முதல் தத்துவம் வரையான பிரிவுகளில் தாகூர் முக்கியமான கருத்துக்களைக் கொண்டிருந்தார். இவையும் அவரது கவிதைச் சிந்தனையை உருவாக்கியுள்ளன.
சீனாவில் ji xian lin, zeng qiong, liu lian ஆகியோர் மட்டுமல்ல மேலும் பல அறிஞர்கள் தாகூரின் கவிதைகளை ஆராய்ச்சி செய்கிறார்கள்.
சீன-இந்திய ஆய்வு மன்றத்தின் செயலாளரும், சிந்தோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான Hou chuan wen சீனாவில் தாகூரின் கவிதைகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தன் மூலம் 2004ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.
தாகூரின் கவிதைகளை ஒப்பிட்டு ஆய்வு செய்வதை தெரிவு செய்ய காரணம் என்ன?இது பற்றி அவர் கூறியதாவது.
இலக்கியம், சமூக அரசியல், மதத் தத்துவம், பண்பாட்டுக் கல்வி ஆகியவற்றைத் தாகூர் தனது படைப்புகளுடன் இணைந்தார். வெளிநாடுகளில் தாகூரின் படைப்புகள் பற்றி அதிகமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவரது சிந்தனை குறிப்பாக இலக்கிய சிந்தனை அதாவது கவிதைச் சிந்தனை பற்றி ஆய்வுகள் குறிப்பிட்ட அளவில் பலவீனமானவை. ஆகவே நான் தாகூரின் கவிதையியலை ஆராயத் தீர்மானித்தேன் என்று அவர் கூறினார்.
சீனாவில் இவர்கள் உட்பட பல அறிஞர்கள் இப்போது தாகூரின் படைப்புகளை ஆராய்வதில் மேலும் உற்சாகம் காட்டியுள்ளனர்.
அவர்கள் ஆய்வில் பெற்றுள்ள பலன்கள் மற்றும் ஆக்கங்களை இலக்கிய தத்துவக் கண்ணோட்டத்தில் பார்த்தால், சீன வாசகர்களுக்கு தாகூர் பற்றிய புத்தம்புதிய தோற்றம் காணக்கிடைக்கும். மகத்தான கவிஞர் தாகூரை ஆராய்வதன் மூலம் இலக்கியத்துறையிலான சீன-இந்திய நட்பும் மேலும் அதிகரிக்கும். இரு நாட்டு மக்களுக்கிடையில் தத்துவ அடிப்படையிலான பரிமாற்றங்களும் மேலும் சுறுசுறுப்பாக இருக்கும். எதிர்காலத்தில் சீனாவில் தாகூர் அவர்களையும் அவரது படைப்புகளையும் ஆராயும் போக்கு மேலும் உயரும் என்பதில் ஐயமேயில்லை.
சீன-இந்திய பண்பாட்டு ஆண்டு என்னும் பொது அறிவு போட்டியின் 3வது கட்டுரையை கேட்டீர்கள். நாளை இந்த பொது அறிவுப் போட்டியின் 4வது கட்டுரை ஒலிபரப்பப்படும். தவறாமல் கேளுங்கள். போட்டியில் விறுவிறுப்பாக கலந்து கொண்டு பங்கு ஆற்றுங்கள். அருமையான பரிசு பெறும் வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கும்.