• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜுலை 6ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியின் கடிதப் பகுதி
  2011-07-20 14:26:03  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை வணக்கம் அன்பு நேயர்களே! சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை செவிமடுத்து, கடிதங்களாகவும், மின்னஞ்சல்களாகவும் நீங்கள் எம்மோடு பகிர்ந்துகொண்ட கருத்துக்களை தொகுத்தளிக்கும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மகிழ்ச்சி. நான் தி.கலையரசி.

கிளிட்டஸ் வணக்கம் நேயர்களே. தொடர்ந்து சீன வானொலியின் தமிழ்ப்பிரிவுக்கு தாங்கள் அளித்துவரும் ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகிறோம்.

கலை கவிஞர் இரபீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த ஆண்டு நினைவிற்கான பொது அறிவுப்போட்டி ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 30 ஆம் நாள் வரை நடைபெறுகிறது. அதற்கான நான்கு கட்டுரைகள் ஏற்கனவே ஒலிபரப்பாயின.

கிளிட்டஸ் ஆமாம். தமிழ்ப்பிரிவின் இணையதளத்தில் இந்த கட்டுரைகள் வைக்கப்பட்டுள்ளன. வாய்ப்பிருந்தால் அதை வாசித்து நீங்கள் பதில் அனுப்பலாம். மேலும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் திங்களில் இக்கட்டுரைகள் மறுஒலிபரப்பாகும். இந்த கட்டுரைகளை கேட்டு விடைகளை எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம். .

கடிதப்பகுதி

கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, சீன இசைக்கலைஞர்களின் இதய ஒலி நிகழ்ச்சி குறித்து பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகன் அனுப்பிய கடிதம். இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கை அனுபவங்களை தெரிந்து கொள்கின்றோம். அவர்கள் இசையமைத்த பாடல்களை கேட்கும்போது இதயத்தில் இன்ப நாதங்கள் ஒலிக்கின்றன. சீன இசைக் கலைஞர்களை அறிமுகம் செய்யும் இந்த நிகழ்ச்சி இசை பிரியர்களுக்கு இன்ப விருந்து. இப்படியொரு அற்புதமான நிகழ்ச்சி படைப்புக்கு நன்றி.

கிளிட்டஸ் அடுத்தாக, ஆரணி இ.நரேஷ் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். பொங்கலை கொண்டாடி முடித்த எங்களுக்கு சர்க்கரை பொங்கலாய் இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி அமைந்தது. சிறந்த நேயர்கள், சிறந்த மின்னஞ்சல் நேயர்கள், தலைசிறந்த நேயர், சிறந்த நேயர் மன்றங்கள் பட்டியல் இதில் அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, நேயர்களை ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு விதங்களில் ஊக்குவித்து வரும் சீன வானொலி தமிழ்ப்பிரிவிற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

கலை தொடர்வது, இலங்கை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த உ.க.பசாத் எழுதிய கடிதம். சீன வானொலி ஒலிபரப்பினை அண்மையில் இலங்கை பண்பலை 102ல் கேட்டேன். பண்பலை ஒலிபரப்பாய் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை கேட்டு பயனடைந்தேன்.

கிளிட்டஸ் இனி, சென்னை மறைமலைநகர் சி.மல்லிகாதேவி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். ஹேபே நகரம் பற்றியும் அதன் நகராட்சி தலைவர் தெரிவித்த திட்டங்கள் பற்றியும் இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. சௌபோ ஏரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நகராட்சி தலைவர் கொண்ட அக்கறை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். அதுபோல நாமும் நம்மை சுற்றியுள்ள இடங்களை பாதுகாத்தால் ஊர்களும், நாடும் நலன் பெற்று மக்களின் வாழ்க்கை செழிக்கும். அந்நகரத்தை மக்களின் நலவாழ்வுக்கு ஏற்றதாய் உருவாக்க எண்ணிய நகராட்சி தலைவருக்கு பாராட்டுக்கள்.

கலை அடுத்து, நேயர் விருப்பம் நிகழ்ச்சி பற்றி வந்தவாசி வி.வீராசாமி எழுதிய கடிதம். இன்றைய நேயர் விருப்பம் நிகழ்ச்சி "எங்கே அந்த வெண்ணிலா" என்று தேடி, அடுத்து "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு என்று சிரிப்பவர்களை சாடி, "தங்கப்பதக்கத்தின் மேலே முத்தை பதிக்க" ஓடிய சிறந்த கலவையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி உற்சாகமூட்டுவதாய், பொழுதுபோக்காக அமைந்ததோடு சிந்தனைக்கும் இதம் அளித்தது.

கிளிட்டஸ் தொடர்வது, கல்பாக்கம் மும்பை சுகுமார் சீன அரசின் நிதியுதவி பற்றி எழுதிய கடிதம். சீன அரசு வழங்குகின்ற நிதியுதவியால் 8 கோடியே 60 இலட்சம் மக்கள் பயனடைய போவதை அறிந்தேன். உணவுப் பொருட்கள் வீணாகிப்போனாலும் ஏழை மக்களுக்கு கொடுக்காத சூழ்நிலை பல நாடுகளில் நிலவுவதை காண்கின்றோம். அதிக மக்களுக்கு வசந்த விழாவை கொண்டாடுவதற்கு சீன அரசு செய்யும் இந்த நிதியுதவி பிற நாடுகளுக்கு பாடமாக அமைய வேண்டும்.

கலை இனி, விரைவாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம் பற்றி செந்தலை என்.எஸ்.பாலமுரளி அனுப்பிய கடிதம். சீனப் பொருளாதாரத்தின வளர்ச்சி குறித்த செய்திகளை கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. சீனா இவ்வாண்டு ஓரளவு விரைவான வளர்ச்சியுடன் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலுடன் திகழ்வது மகிழ்ச்சியே. சீன பொருளாதாரத்தை தூண்டுவதில் உள்நாட்டு தேவையின் பங்கு பெரிதும் உதவும் என்றும், சீன முதலீட்டின் அதிகரிப்பு வேகம் உயரும் என்றும் அறிந்து கொண்டேன்.

கிளிட்டஸ் அடுத்ததாக, சீன இசை நிகழ்ச்சி பற்றி குடியாத்தம் ஜி.காளியப்பன் எழுதிய கடிதம். சீன வசந்த விழாவையொட்டி ஒலிபரப்பான நான்கு பாடலகள் மிகவும் அருமை. அவை விழா மகிழ்ச்சியையும், வரவேற்பையும் விளக்குவதாய் இருந்தன. சீன மக்களின் கொண்டாட்டத்தையும், எதிர்பார்ப்பையும் இப்பாடல்களில் அறிய முடிந்தது. அப்பாடல்களுக்கு இடையில் நாட்டுப்பற்று இழையோடியதை பாடல்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்கள் மூலம் அறிந்து கொண்டோம்.

கலை தொடர்வது, ஈரோடு தாசப்பகவுண்டன் புதூர் எஸ்.சுதர்ஷன் சீனத் தலைவர்களின் வசந்த விழா கொண்டாட்டம் பற்றி எழுதிய கடிதம். சீன புத்தாண்டாம் வசந்த விழாவை நாட்டு மக்களுடன் இணைந்து சீன அரசுத் தலைவர், தலைமை அமைச்சர் முதலிய நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் கொண்டாடுவது மக்களை முதன்மை படுத்தி செயல்படும் அரசின் மனப்பாங்கை காட்டுகிறது. மக்களோடு மக்களாய் இருந்து, மக்களுக்கு எப்போதும் சேவையாற்றும் அவர்களது பண்பை அனைவருக்கும் எடுத்து சொல்ல இந்த செயல்பாடே போதுமானது.

கிளிட்டஸ் இனி, இலங்கை நேயர் ஃபவாஸ் அஹமட் எழுதிய கடிதம். இலங்கை ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல நாட்கள் கடிதங்கள் ஏதும் எழுத முடியாத நிலையில் மனம் வருந்தினேன். மழைவெள்ளத்தினூடும் சீன வானொலி நிகழ்ச்சிகளை மட்டும் கேட்கத் தவறவில்லை. சீனக் கலைகளில் எனக்கு பிடித்த குங்ஃபூ கலையை பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ளவேண்டும் என்பது என் ஆவல்.

கலை அடுத்து, சீன உணவரங்கம் பற்றி ஆரணி. டி.கோகிலா அனுப்பிய கடிதம். முள்ளங்கி கேக் சமைப்பது எப்படி என்று இன்றைய நிகழ்ச்சியில் கற்றுக் கொடுத்தார்கள். இறைச்சி, இறால், காளான், மாவு ஆகியவற்றால் இந்த கேக் செய்யப்பட்டது. மிகவும் ஊட்டசத்துள்ள இந்த உணவு உடலுக்கு உரமூட்டும் என்பதை இந்நிகழ்ச்சியில் அறிந்தேன்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040