அன்புமிக்க நேயர் நண்பர்களே
ஏப்ரல் 23ம் நாள் முதல் கொழும்பு பண்பலை 102 மகாஹெட்ஸ் மூலம் சிங்களம், தமிழ், ஆங்கிலம், மற்றும் சீன மொழியில் சீன வானொலி 19 மணிநேர நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப துவங்கியுள்ளது. இந்த பண்பலை ஒலிபரப்பு துவங்கும் தருணத்தில் சீன வானொலி பணியாளர்கள் அனைவரின் சார்பில் இலங்கை மக்களுக்கும் இலங்கையில் வாழ்கின்ற சீனருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவிக்கின்றேன்.
சீன வானொலி நிலையம் உலகிற்கு ஒலிபரப்பு சேவைபுரியும் அரசு
வானொலி நிலையமாகும். சீனா மற்றும் பல்வேறு நாடுகளின் மக்களுக்கிடை புரிந்துணர்வு, பரிமாற்றம் மற்றும் நட்பை அதிகரிப்பது அதன் நோக்கமாகும். 20ம் நூற்றாண்டின் 50ம் ஆண்டுகள் முதல் ஆங்கில, சிங்கள மற்றும் தமிழ் மொழி நிகழ்ச்சிகளை சில்லலை அலைவரிசையில் சீன வானொலி இலங்கையில் ஒலிபரப்ப தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளில் மேற்கூறிய மொழிப் பிரிவுகளின் இணைய வானொலியும் விரைவாக வளர்ந்து இலங்கை நண்பர்கள் மிகவும் விரும்புகிற இணைய வானொலியாக மாறியுள்ளது. மிக அதிகமான சீன வானொலி நேயர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் மிக அதிகமான கடிதங்களை அனுப்பிய நாடுகளில் ஒன்றாகவும் இலங்கை மாறியுள்ளது.
இன்று சீன வானொலி கொழும்பு பண்பலை மூலம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப துவங்கியுள்ளது. இது சீன-இலங்கை ஒலி மற்றும் ஒளிபரப்பு சேவையின் நட்பார்ந்த ஒத்துழைப்பில் புதிய சாதனையாகும். சீனாவிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேயர்கள் உள்நாட்டில் இருந்த வண்ணம், வசதியாகவும் தெளிவாகவும் கேட்டு பயன் பெற முடியும். உலகின் பல்வகை தகவல்கள், சீன-இலங்கை அரசுகளுக்கிடை இதயப்பூர்வமான ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களிடை நட்பார்ந்த பரிமாற்ற வளர்ச்சி, நெருசை கொள்ளை கொள்ளும் இனிய இசை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நீங்கள் இதில் கேட்கலாம். நேயர் நண்பர்களே முன்னெப்போதும் போல சீன வானொலி நிகழ்ச்சிகளை பண்பலையில் ஆர்வத்துடன் கேட்டு பயன் பெற வேண்டும் என்பதே எமது விருப்பம். அதேவேளையில் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்கவும் உங்களிடம் கேட்டு கொள்கின்றேன்.
இறுதியில் நேயர் நண்பர்கள் அனைவரும் தங்கள் விருப்பங்களை நனவாக்கி குடும்பத்தாரோடு இன்பமாக வாழ்க வளர்க என்று வாழ்த்துகின்றேன்.