• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இணக்கமான நகரங்கள் – இந்திய அரங்கு நாள்
  2010-08-18 16:57:04  cri எழுத்தின் அளவு:  A A A   

மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற கருத்தில் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெறும் உலகப் பொருட்காட்சியில் ஆகஸ்ட் 18ம் நாளாகிய இன்றைய சிறப்பு நிகழ்வு, இந்திய அரங்கு நாளாகும். பொருட்காட்சி நடைபெறும் 6 திங்கள் காலத்தில் நாள்தோறும் ஏதோ ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் அரங்குக்கு உரிய நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய சுதந்திர நாள் முடித்த கையோடு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் இந்திய அரங்கு நாளும் அனுசரிக்கப்படுகிறது.

சீனப் பிரதிநிதிக்குழுவினரும், இந்திய பிரதிநிதிக்குழுவினரும் பங்கேறக, செய்தியாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கூடியிருக்க, வெளியே இந்திய கொடியை ஏற்றி முடித்து, பொருட்காட்சி மையத்தின் கூட்ட மண்டபத்தில் இந்திய அரங்கு நாளுக்கான சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்திய அரங்கு நாளை ஷாங்காய் பொருட்காட்சியில் கொண்டாட்டும் இந்த நிகழ்வில் இந்திய அரசின சார்பில் நடுவணரசின் பொருளாதார மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா மாதவ்ராவ் சிந்தியா கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின் அதிகாராப்பூர்வ துவக்கமாக சீனப் பிரதிநிதிக்குழுவின் சார்பில் சீன வணிகத்துறை துணை அமைச்சர் ச்சென் ச்சியன் வரவேற்பும், வாழ்த்துக்களும் தெரிவித்தார்.

அடுத்து சோச்சியு நிலநடுக்க சோகத்துக்காக இரங்கலை ஆறுதலையும் பதிவு செய்தபின், இந்திய அரங்கு நாளின் கொண்டாட்டத்துக்கான ஏற்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார் நடுவணரசின் பொருளாதார மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா. அவர் பேசுகையில், இந்திய சீன நாடுகளின் நீண்ட வரலாற்றையும், பண்பாடு மற்றும் வர்த்தக பரிமாற்றங்களையும் நினைவுகூர்ந்தார்.

சீனாவும் இந்தியாவும் உலகின் இரு பழமைவாய்ந்த நாகரிகங்களாகும். பண்பாடுத் தொடர்பு, வர்த்தக உறவு மற்றும் மக்களிடை தொடர்பில் இரு நாடுகளுமே மிகப் பழமை வாய்ந்த மற்றும் செழிப்பான வரலாறு உடையவை. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியா வந்து சமஸ்கிருத மொழி படைப்புகளை சீன மொழிக்கு பெயர்த்த ஃபா சியன் முதல் 20ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு மருத்து உதவிக்காக வந்து, சீன மக்களின் மனதில் நீங்காமல் பதிந்துவிட்ட மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ் வரை இரு நாடுகளுக்கும் நன்மை பயத்த பண்பாட்டுப் பரிமாற்றம், அறிவு மற்றும் சிந்தனைப் பகிர்வு தொடர்பான எடுத்துக்காட்டுகள், முன்மாதிரிகள் வரலாற்றில் பதிவாகியுள்ளனர்" என்று திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறினார்.

இவ்வாண்டு சீன இந்திய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவாக உள்ளது. இது குறித்து பேசியபோது, "சீன இந்திய தூதாண்மை உறவு நிறுவிய காலத்தில் இருநாடுகளுமே வளர்ச்சியடையாதவையாக இருந்தன. ஆனால் தற்போது உலகின் மூன்றில் ஒருபகுதி மக்களை தொகையை பிரதிநித்துவப் படுத்தும் இவ்விருநாடுகள் தனிப்பட்ட வகையில் உலகின் அடுத்த வல்லரசுகளாக மாறும் நிலையில் உள்ளன. உலகமே நிதி நெருக்கடியில் மூழ்கிக்கொண்டிருந்த நிலையில் வளர்ச்சியை அனுபவித்த இரண்டே நாடுகள் சீனாவும் இந்தியாவும்தான். அந்த வகையில் பிரதேசத்தின் அமைதி மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கென இரு நாடுகளும் பாடுபடவேண்டும்" என்றார் திரு. சிந்தியா.

உலகப்பொருட்காட்சியில் இந்திய அரங்கு பற்றி குறிப்பிடுகையில் இந்திய புலியையும், சீன டிராகனையும் இணைக்கும் மேடையாக அமைந்த இந்திய அரங்கு நாள்தோறும் 25 ஆயிரம் பார்வையாளர்களை ஈர்த்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இந்திய பண்பாட்டுச் செழிப்பையும், அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் சீன மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் உதவிய சீன அரசுக்கும், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் நிர்வாகிகளுக்கும், இதர ஆதரவாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். மேலும் பேசுகையில்.

"இந்திய அரங்கு இணக்கமான நகரங்கள் என்ற தலைப்பில், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஆற்றலை அடையாளப்படுத்துகிறது. புவி வெப்பமேறல் எனும் பயங்கரமான போரை எதிர்கொள்ளும் இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், சுற்றுச்சூழலுக்கு நேயமாக வாழும் பாரம்பரிய வாழ்க்கை வழிமுறைகளைக் கொண்ட இந்தியா, தொடர்வல்ல வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் விதமாக சுற்றுச்சூழல் நேய பொருட்களையே அரங்கில் பயன்படுத்தியுள்ளது. மரம், செடி, மண், நீரூற்று, சூரிய ஆற்றல் மின்கலங்கள், காற்றாலை என இந்திய அரங்கே பசுமையை பறைசாற்றுகிறது" என்று கூறினார். மேலும் "பொருள்சார்ந்த இன்றைய உலகில் சித்தாந்தம், தார்மீகம் மற்றும் இணக்கத்தில் முக்கியத்துவமளிக்கும் பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியாவும் சீனாவும் கோடிக்கணகான ஏழை மக்களை செழிப்புக்கு கொண்டு வர, தொடரவல்ல வளர்ச்சிக்காக புத்தாக்கமுள்ள தீர்வுகளை சமைக்கவேண்டும். அவை ஆசிய பண்பாட்டு அம்சங்களை உள்ளடக்கிய, இயற்கையுடன் இணக்கமாக அமைந்த எரியாற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நேயம் ஆகிய தன்மைவாய்ந்த முன்னேறிய தொழில்நுட்பங்களாக இருக்கவேண்டும்" என்று திரு. சிந்தியா குறிப்பிட்டார்.

இருதரப்பு வர்த்த உறவு பற்றி பேசியபோது, 300 கோடி அமெரிக்க டாலராக ஒரு காலத்தில் இருந்த இருதரப்பு வர்த்தகத்தொகை 2008-09ம் ஆண்டில் 4200 கோடியாக அதிகரித்ததையும், இருதரப்பு உறவை நிலையாக்க வர்த்தகப் பரிமாற்றம் உதவும் என்பதிலான தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.

இந்திய அரங்கு நாளில் இந்திய சீன உறவை நேர்த்தியாக அசைபோட்ட தனது உரையின் முடிவாக "முதல் ஆயிரமாண்டில் இந்தியாவும் சீனாவும் ஒன்று மற்றதிடம் நிறைய கற்றுக்கொண்டன. மூன்றாவது ஆயிரமாண்டின் துவக்கத்திலும் கூட அதன் முக்கியத்துவம் குறையவில்லை"

என்று நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார நிபுணர் அமர்த்திய சென்னின் புத்தகம் ஒன்றின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, இருநாடுகளுக்குமே வலுவான இருதரப்பு நிறைந்த பயனளிக்கும் என்றார் திரு. ஜோதிர் ஆதித்யா சிந்தியா.

அவரது உரைக்குப் பின், நளினமும், ஜதிகளின் ஒலிக்கேற்ற சலங்கை சிலுங்கும் அசைவுகளுமாக கதக் நடனம் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. நிகழ்ச்சி வந்திருந்த அனைவருக்கும் இந்திய பொருட்காட்சிப் பூங்காவில் சுவையான உணவு பரிமாறியதோடு, மாலை மீண்டும் கதக் நடன கலைவிருந்தையும் பரிமாறி, உலகப் பொருட்காட்சியின் இந்திய அரங்கு நாள் இனிதே நிறைவேறியது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040