• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட மேற்கு பகுதியில் ஹுவார் பாடலின் பரவல்
  2010-10-15 14:59:49  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த நூற்றாண்டின் 30வது ஆண்டுகளில், சீனாவின் புகழ்பெற்ற நிலவியல் அறிஞர் Yuan Fuli ஒட்டகத்தில் அமர்ந்து பயணித்து, நாள்முழுவதும் பரந்த வட மேற்கு பகுதியில் சுறுசுறுப்பாக வேலை செய்தார். நிலவியல் ஆய்வில் ஈடுபட்ட அவர், அடிக்கடி உள்ளூர் மக்கள் உச்ச தொனியில் பாடிய அருமையான பாடல்களால் ஈர்க்கப்பட்டார். இதனால் தனது ஆய்வுப் பணியோடு சேர்ந்து, இப்பாடல்களையும் Yuan Fuli திரட்டினார். பெய்ஜிங் திரும்பிய பின், Peking பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறப் பாடல் என்ற வார இதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு, வட மேற்கு சீனாவின் ஹுவார் நாட்டுப்புறப் பாடல் பற்றி அறிமுகப்படுத்தினார். அவரது இந்தக் கட்டுரை மூலமே, மேலதிக சீன வாசகர்கள் ஹுவார் பாடலின் அழகை முதல் முறையாக அறிந்து கொண்டனர். 2009ஆம் ஆண்டு, ஹுவார் நாட்டுப்புறப் பாடல், மனிதக்குலத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

பாடல் வரிகளில் இளம் பெண்களுக்கு மலர்களை உவமை செய்வதால், இத்தகைய பாடல் ஹுவார் அதாவது மலர் என அழைக்கப்படுகிறது. கான்சூ மாநிலத்தைச் சேர்ந்த ஆய்வாளர் Wang Pei பல ஆண்டுகளாக தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். பல தேசிய இனங்களால் பாடப்படுவது, மனிதக்குலத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வமான ஹுவார் பாடலின் ஒரு முக்கிய மதிப்பாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

"ஹுவார் நாட்டுப்புறப் பாடலைப் பாடும் தேசிய இனங்கள் அதிகமாகும். தற்போது, ஹான், ஹுய், துங் சியாங், பௌ ஆன், சாலா, தூ, யூ கு, திபெத், மங்கோலிய ஆகிய 9 இனங்கள் இப்பாடலைப் பாடுகின்றன. உலக நாட்டுப்புறப் பாடல் துறையில் இது போல் எங்கும் காணப்படவில்லை. மேலும், சீனாவின் சுமார் மூன்றில் ஒரு பகுதி நிலத்தில் ஹுவார் நாட்டுப்புறப் பாடல் பரவலாகிக் கொண்டிருக்கிறது" என்று Wang Pei கூறினார்.

ஹுவார் நாட்டுப்புறப் பாடலைப் பாடும் 9 இனங்களில், இஸ்லாமிய மதத்தைக் கடைபிடிக்கும் ஹுய், சாலா ஆகிய இனங்களும், திபெத் புத்த மதத்தைக் கடைபிடிக்கும் திபெத் இனமும் இடம்பெறுகின்றன. அவற்றில் பெரும்பாலான இனங்கள் சொந்த மொழியைக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஹுவார் நாட்டுப்புறப் பாடலைப் பாடும் போது அவை அனைத்தும் ஹான் இன மொழியைப் பயன்படுத்துகின்றன. கான்சூ மாநிலத்தின் நாட்டுப்புறப் பாடல் ஆய்வுக் குழுவின் தலைவரும் லான் சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான Ke Yang கூறியதாவது—

"வெகு காலத்திற்கு முன்பாக, ஹுவார் பாடல்கள் முக்கியமாக ஹான் இனத்தின் நாட்டுப்புறப் பாடல்களாக இருந்தன. பின்னர் பல இனங்களின் பங்கெடுப்பினால், அதன் இசை தொனியில் வேறுபட்ட இனங்களின் இசை அம்சங்கள் சேர்ந்தன. தற்போதைய ஹுவார் நாட்டுப்புறப் பாடல் பாணி இப்படிதான் படிப்படியாக உருவானது. பல இனங்கள் கூட்டாக படைத்து பகிர்ந்து கொள்வது, ஹுவார் நாட்டுப்புறப் பாடலின் மிக முக்கிய தனிச்சிறப்பாகும். சீனாவின் பல்வேறு இனப் பண்பாடுகளின் ஒருமைப்பாட்டை இது காட்டுகிறது" என்று அவர் கூறினார்.

சந்திர நாட்காட்டியின் படி, ஆண்டுதோறும் 4வது திங்கள் முதல் 6வது திங்கள் வரையான காலத்தில், வட மேற்கு சீனாவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஹுவார் விழா, வேறுபட்ட இனம், வேலைப் பிண்ணி மற்றும் வயதுடைய மக்களை ஈர்க்கிறது. தொலைவிலிருந்து வந்த அவர்கள் ஒன்றுகூடி, இயற்கையின் அரவணைப்பில் மகிழ்ச்சியுடன் இப்பாடல்களைப் பாடுகின்றனர். ஹுவார் பாடலின் தொடர்ச்சியான பரவலுக்கான காரணம் என்ன என்பது பற்றி பேராசிரியர் Ke Yang கூறியதாவது—

"நாட்டுப்புறப் பாடல்கள் பொது மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றன. நல்ல மனநிலையிலோ மோசமான உணர்விலோ எச்சூழலிலும் இப்பாடல் பாடப்படலாம். பாடல் பாடுவதன் மூலம் மனநிலை மற்றும் உணர்வை வெளிப்படுத்துவது வாழ்க்கையின் ஒரு வகை தேவை. ஆகவே நாட்டுப்புறப் பாடல் தலைமுறை தலைமுறையாக பரவலாகி வருகிறது. காலம் எப்படி மாறினாலும், இளைஞருக்கும் இளம் பெண்களுக்குமிடையில் காதல் எப்போதும் தொடர்கிறது. பெருவாரியான காதல் பாடல்கள் பரவலாகி வருவதற்கு இது முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது" என்று அவர் கூறினார்.

ஹுவார் என்ற பெயர், மக்களுக்கு கற்பனையை வழங்குகிறது. காதல் தவிர, சாகுபடி, வழிபாடு, விவசாயக் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை ஆகியவையும் இப்பாடலில் கூறப்படுகின்றன. ஹுவார் பாடலின் அம்சத்திலான மாற்றம், சீனாவின் வட மேற்கு பகுதியின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தை அடையாளப்படுத்தும் குட்டி எடுத்துக்காட்டாகும்.

ஆனால், நவீனப் பண்பாட்டின் வளர்ச்சி மற்றும் வெளிநாட்டுப் பண்பாடு ஏற்படுத்திய தாக்கத்தினால், பழமை வாய்ந்த ஹுவார் பாடல் வாழும் இடம் குறைந்து வருகிறது. ஹுவார் பாடலை பாட விரும்பும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் குறைவாகவே இருக்கின்றனர். இருப்பினும், காலத்தின் வளர்ச்சி, மலருக்கு புத்துணர்வை ஊட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய இசைக்கோர்வை பற்றிய தத்துவம் மற்றும் தொழில் நுட்பத்தின் பயன்பாடு, ஹுவார் பாடலின் ஒலி, நிகழ்படம் மற்றும் இணையதளம், ஹுவார் பற்றி ஆய்வு செய்யும் மக்களின் தனிநபர் வலைப்பூக்கள் முதலியவை, ஹுவார் நாட்டுப்புறப் பாடலின் பரவல், பாதுகாப்பு மற்றும் புத்தாக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளன.

ஹுவார் பாடல் பற்றி ஆய்வு செய்யும் Guo Zhengqing கூறியதாவது

"இந்த நாட்டுப்புறப் பாடல் மிகப்பெருமளவில் திறந்த நாட்டுப்புற பாடலாகும். பல இனங்கள் சேர்ந்த பின்னணியில் உருவாகிய இந்தப் பாடல் பல இனங்களின் பண்பாட்டுத் தனிச்சிறப்புகளைச் சேர்த்துள்ளது. இதனால் புதிய பண்பாட்டு அம்சங்களை அது ஏற்றுக் கொண்டு உட்புகுத்துவது எளிது" என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040