
கடந்த ஆண்டின் அக்டோபர் திங்களில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைக் கண்டுகளிக்கும் வகையில், ஷாங்காயில் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. மூன்று பேர் ஒன்றாக பயணம் செய்ய விரிவான முறையில் திட்டமிட வேண்டியிருந்தால், பயண காலம் ஒத்திவைக்கப்பட்டது. சீன இந்திய பண்பாட்டுறவின் 60ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டும், ரவீந்திரநாத் தாகூரின் 150 ஆம்ஆண்டு பிறந்த நாள் நிறைவை முன்னிட்டும், தற்போது இவ்வாண்டின் நடுப்பகுதியில் பயணம் மேற்கொள்ளலாம் என நாங்கள் விரிவாக திட்டமிட்டோம். அதன்படி, ஜுலைத் திங்கள் 19ஆம் நாளிரவு 9.15 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம். கொழும்பு மற்றும் பாங்காக் ஆகிய நகரங்களின் வழியாக சுமார் 11 மணி நேரம் பயணம் செய்து 20 ஆம் நாள் சீன நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு பாதுகாப்பான முறையில் ஷாங்காயின் புதாங் விமான நிலையம் வந்தடைந்தோம். நண்பர் கலைமணி அவர்கள் அன்பான முறையில் எங்களை வரவேற்றார். சீனாவின் மாபெரும் வணிக நகரான ஷாங்காயின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு தொடர் வண்டி மற்றும் சீருந்து மூலம் பயணம் செய்து தங்கும் விடுதியை வந்தடைந்தோம். ஷாங்காய் மாநகரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான உயரமான தொலைக்காட்சி கோபுரத்தை கண்டவாறே பயணம் செய்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அன்றி, வெவ்வேறு வடிவிலான வானுயர்ந்த கட்டிடங்களைக் கண்டபோது, அவைகள் கட்டிடங்களா அல்லது புகழ்பெற்ற கவிஞர் ஒருவர் கூறியது போல கான்கிரிட் காடுகளா என எண்ணத் தோன்றியது. நண்பர்களே… இனி நாள்தோறும் விரிவாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு, வானொலி மூலமாகவும் இணையம் மூலமாகவும் எங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம். நன்றி. வணக்கம். ஷாங்காலிருந்து எஸ்.செல்வம், எஸ்.பாண்டியராஜன், என்.பாலக்குமார்