• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காயிலிருந்து எஸ்.செல்வம் எழுதிய நாட்குறிப்பு ஜூன் 21ம் நாள்
  2011-06-21 18:19:26  cri எழுத்தின் அளவு:  A A A   
  

வணக்கம் நேயர்களே…

ஜுன் திங்கள் 21 ஆம் நாள் எங்கள் சுற்றுப் பயணத்தின் இரண்டாவது நாளாகும். அதற்கு முன், ஷாங்காயில் நேற்று பிற்பகல் நாஃகள் கண்டுகளித்த சில சுவையான காட்சிகளைப் பற்றி விவரிக்க விரும்புகின்றோம்.

நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து நடந்து செல்லும் துரத்தில் ஷாங்காயின் புகழ்பெற்ற ஆறான குவாங்பு ஆறு அமைந்துள்ளது. அந்த ஆற்றின் ஒரு பக்கத்தில், புகழ்பெற்ற தொலைக்காட்சி கோபுரம் உள்ளிட்ட மாபெரும் கட்டிடங்களும், மறுபக்கத்தில் ஐரோப்பிய ஆதிக்கத்தின் கீழ் ஷாங்காய் இருந்தபோது கட்டப்பட்ட ஐரோப்பிய பாணியிலான கட்டிடங்களும் அமைந்துள்ளன. மாலை நேரத்தில் அவ்விடத்திற்கு நண்பர் கலைமணியுடன் சென்ற நாங்கள், இரவு நேரம் வரும்வரை, ஆற்றின் பக்கத்தில் அமைக்கப்பட்ட பாதையில் நடந்து மகிழ்ந்தோம். இரவு நேரம் நெருங்க நெருங்க அப்பகுதி முழுவதும் இளம்சீனர்களால் நிறைந்து காணப்பட்டது. இரவு வேளை வந்ததும், அங்கிருந்த அனைத்துக் கட்டிடங்களிலும் இருந்த வண்ணமயமான மின்விளக்குகள் ஒளிர்ந்து எங்கும் வெளிச்சம் பரவியது. மேலும், ஆற்றிலிருந்து கடலின் முகத்துவாரத்திற்கு சென்று வந்த ஏராளமான பல்வடிவிலான படகுகளும் வண்ண விளக்குகளால் அழகூட்டப்பட்டு, அவ்விடம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மேகங்கள் சூழ்ந்து, தட்பவெப்பநிலை குறைந்து அங்கே குளிராகவும் இருந்தது. பின்னர், ஷாங்காய் சாலைகளை கண்டு ரசித்தவாறே, உணவு விடுதியில் இரவு சிற்றுண்டியை முடித்துக் கொண்டு தங்கும் விடுதி திரும்பினோம்.

இன்று காலையில் அதே இடத்திற்கு நாங்கள் நண்பர் கலைமணியுடன் சென்றோம். குவாங்பு ஆற்றைக் கப்பல் மூலம் கடந்து ஷாங்காய் நகரின் அடையாளமான தொலைக்காட்சி கோபுரத்தை அடைந்தோம். உலகில், கனடாவின் டொராண்டோ மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ நகரங்களை அடுத்து உலகின் 3வது மிகப் பெரிய தொலைக்காட்சிக் கோபுரமாக இது உள்ளது. இதன் மொத்த உயரம் 468 மீட்டராகும். கோபுரத்தில் 263 மீட்டர் உயரம் சென்று, ஷாங்காய் நகரின் அழகைக் கண்டு இரசித்தோம். 263 மீட்டர் உயரத்தில் கட்டிடத்தின் வெளியே அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடியின் மேல் நடந்தபோது, விண்ணில் நடப்பது போலவும், முழு ஷாங்காய் நகரமே நம் காலடியின் கீழே இருப்பது போலவும் பிரமிப்பாக இருந்தது. பின்னர், அருங்காட்சியகம் ஒன்றைப் பார்வையிட்டபோது, பண்டைக்கால சீனாவிற்கே திரும்பிச் சென்ற உணர்வை அடைந்தோம். அக்காட்சியகத்தில், பண்டைக்கால சீனர்களின் வாழ்க்கை முறை யாவும் பல்வேறு சிலைகள், இசைகள், வடிவமைப்புக்கள் மற்றும் ஓவியங்கள் மூலம் தெளிவாக விளக்கப்பட்டன. பின்னர், சீருந்து மூலம் குவாங்பு ஆற்றின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் குகைப்பாலம் மூலம் பயணம் செய்து யு பூங்கா சென்றடைந்தோம்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் மிங் வம்ச காலத்தில் உருவாக்கப்பட்ட இப்பூங்கா, சிசுவான் மாநில ஆளுநர் வசிப்பிடமாகவும் திகழ்ந்துள்ளது. தென்கிழக்கு சீனாவின் சிறந்த பூங்காவாகக் கருதப்படும் இப்பூங்காவில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கண்டோம். மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்த அப்பூங்கா முழுவதையும் கண்டுகளித்துவிட்டு திரும்பினோம்.

சீனாவின் மிகப் பெரும் வணிக நகரான ஷாங்காய் நகரில் கடந்த இரு நாட்களாக பல வீதிகளில் நடந்து மகிழ்ந்தோம். வீட்டிற்கு வெளியே உள்ள சன்னல்களில் மக்கள் தங்கள் துணிகளை காய வைக்கின்றனர். காலநிலைதான் இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். அன்றி, ஷாங்காய் வீதிகளில் உள்ள மரங்கள் அனைத்தும் கீழே விழாமலோ அல்லது சாய்ந்துவிடாமலோ இருக்கும் வகையில், கீழ்ப்பகுதியில் மரத்துண்டுகள் வைத்து இறுக்கமாகக் கட்டப்பட்டிருப்பதையும் கண்டோம். மேலும், ஷாங்காயில் மிகச் சிறிய மோட்டார் சைக்கிள்களில் பொதுமக்கள் செல்வதையும் கவனித்தோம். பெய்ஜிங்கிற்கும், ஷாங்காய்க்கும் மக்களின் வாழ்க்கை முறையில் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஷாங்காய் இளம் பெண்கள் வெவ்வேறு வடிவிலான ஆடைகளை அணிந்து மகிழ்கின்றனர். நாளை ஷாங்காய் பற்றி நிறைய தகவல்களை தெரிவிப்போம்.

ஷாங்காயிலிருந்து எஸ்.செல்வம், எஸ்.பாண்டியராஜன், என்.பாலக்குமார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040