• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வூஜென் என்னும் பழங்காலக் கிராமத்திலான சுற்றுலா பயணம்
  2011-06-22 19:45:59  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜுன் திங்கள் 22 ஆம் நாள், எங்களின் சுற்றுப் பயணத்தின் மூன்றாவது நாளாகும். இன்று காலையில் ஷாங்காயின் புகழ்பெற்ற பண்டைய வணிக வீதியான நான்ஜிங் வீதியைக் கண்டு களித்தோம். அவ்வீதியின் சில இடங்களில் மூத்த சீன மக்கள் பலர் காலை உடற்பயிற்சியை மேற்கொண்டனர். இவ்வீதியின் சிறப்பை நிலைநிறுத்தும் வகையில் பேரூந்து மற்றும் சீரூந்து ஆகியவை செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

பின்னர், அங்கிருந்து சேஜியாங் பிரதேசத்தின் தாங்ஜியாங் நகரத்தைச் சேர்ந்த வூஜென் என்னும் பழங்காலக் கிராமத்தைச் சென்றடைந்தோம். ஆயிரம் ஆண்டுக்கால வரலாறுடைய அக்கிராமம் முழுவதையும் ஆறு ஒன்று இணைத்துள்ளது. ஆற்றின் இரு கரைகளிலும் நீரைத் தொட்டவாறு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆற்றங்கரை வாழ்க்கை மற்றும் ஆற்றங்கரை வணிகம் இரண்டையும் அங்கு வாழும் மக்கள் ஒன்றிணைத்துள்ளனர்.

சுமார் 169600 சதுர மீட்டர் பரப்பு கொண்ட அக்கிராமத்தின் 81.54 விழுக்காட்டுப் பகுதி பழமை மாறாமல் அப்படியே இன்றளவும் பராமரிக்கப்படுகின்றது. ஆற்றின் இருபக்கங்களையும் இணைக்கும் கற்பாலங்கள், பழமை மாறாத வீடுகள் மற்றும் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆறு ஆகிய மூன்றும் வூஜென் பிரதேசத்தின் தனிச்சிறப்புக்களாக உள்ளன. கி.பி. 420 மதல் 581 வரை சீனாவை ஆட்சி செய்த வடக்கு மற்றும் தெற்கு வம்சத்தைச் சேர்ந்த இளவரசி லியாவ் சாவ் மிங் இங்கே தங்கி கல்வி பயின்றுள்ளார். மேலும், சீனப் புரட்சி எழுத்தாளரும், நவசீனாவின் முதல் பண்பாட்டு அமைச்சருமான திரு.மாவ் துன் அவர்களின் பிறந்த வீட்டையும் கண்டு மகிழ்ந்தோம். இவ்வீடு 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டதாகும். அவர் 1949 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரையில் சீனப் பண்பாட்டு அமைச்சராக இருந்திருக்கிறார்.

ஷாங்காய் வாழ்க்கையைச் சித்தரிக்கும் •நள்ளிரவு• என்னும் அவரது நாவல் பெரும் புகழ் பெற்றதாகும். 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சியால் கவரப்பட்ட மாவ் துன், மே 14 இயக்கத்தில் கலந்து கொண்டதுடன், 1921 ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவுவதிலும் பொறுப்பு வகித்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பயன்படுத்திய பொருட்களை அங்கே வைத்திருப்பதுடன் அப்போதைய வீட்டின் நிலைமை அப்படியே பாதுகாக்கப்படுவதை அறிந்து வியந்தோம். மேலும் சீனாவின் தாவ் மதத்தின் முக்கிய மூன்று கோயில்களுள் ஒன்றும் இங்கே அமைந்துள்ளது.

அக்கோயிலையும் சென்று பார்த்தோம். பல்வேறு காலக்கட்டங்களில் கலைநுட்பத்துடன் உருவாக்கப்பட்ட 100 கட்டில்கள் உள்ள அருங்காட்சியம், பல்வேறு நாடுகளின் நாணயங்களைக் கொண்ட அருங்காட்சியம், இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கு மற்றும் பழங்கால அச்சுக் கூடம் உள்ளிட்ட எண்ணற்ற காட்சியிடங்களைக் கண்டு மகிழ்ந்தோம். நாளை தொடர்ந்து சந்திப்போம். வூஜென்னிலிருந்து எஸ்.செல்வம், எஸ்.பாண்டியராஜன், என்.பாலக்குமார்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040