

ஜுன் திங்கள் 27 ஆம் நாள் எங்கள் சீனப் பயணத்தின் எட்டாவது நாளாகும். இன்று காலையில் நண்பர் தேன்மொழியுடன் சேர்ந்து பெய்ஜிங்கின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற தியன்மன் சதுக்கம் சென்றடைந்தோம். இச்சதுக்கம் முழுதும் மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, தேசிய விழா நாளின்போது மட்டும் இச்சதுக்கம் அலங்கரிக்கப்படுவது வழக்கம். கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு இங்கே மலர்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கமில்லை. முதன்முதலாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 90 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, தியன்மன் சதுக்கம் அழகான பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காட்சி கண்களைக் கவர்ந்தது. தியன்மன் சதுக்கத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள வீரர்களுக்கான நினைவுச் சின்னம் 1952 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். மேலும், விழா நாளை எதிர்நோக்கி, சீனாவின் தேசியக் கொடிகள் பல, சதுக்கமெங்கும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. சதுக்கத்தின் நாலாபக்கமும் இருந்த சீனாவின் முதலாவது அரசுத் தலைவர் மாசே துங் நினைவகம், அருங்காட்சியகம், மக்கள் மாமண்டபகம் போன்ற கட்டிடங்களின் அழகை நன்றாக கண்டுகளித்துவிட்டு, அரண்மனை அருங்காட்சியகம் சென்றோம். மிங் வம்சம் முதல் சிங் வம்சம் வரை, பல்வேறு அரச வம்சங்களின் அரண்மனையாகத் திகழ்ந்த இதில், 9999 கட்டிடங்கள் உண்டு. கி.பி. 1406 ஆம் ஆண்டு முதல் 1420 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட இதன் பரப்பளவு சுமார் 7,20,000 சதுர மீட்டராகும். இவ்விடம், ஐ.நா.வின் உலக மரபுச் செல்வப் பட்டியலில் 1987 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. பல்வேறு தனிச்சிறப்புக்களை உள்ளடக்கிய அருங்காட்சியகத்தின் முக்கியமான பகுதிகள் அனைத்தையும் சென்று பார்வையிட்டோம். சிங் வம்ச பேரரசர்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட வெளிநாட்டுக் கடிகாரங்களின் பெரிய வடிவமைப்பும், அக்காலத்திய தொழில்நுட்பமும் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. பெரும்பாலான கடிகாரங்கள், பிரான்சு, சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்டிருந்தன. பின்னர், பேரரசிகள் பயன்படுத்திய பல்வேறு நகைகள், அணிகலன்கன் ஆகியவற்றையும் பார்த்தோம். அரண்மனை அருங்காட்சியகத்தில் பணியாற்றிய தேன்மொழியின் அப்பா, எங்களை நன்றாக உபசரித்தார். தன்னுடைய பணிகளுக்கிடையே, உடன் வந்து எங்களை சில முக்கிய காட்சியிடங்களுக்கு அழைத்துச் சென்றார். அரண்மனை அருங்காட்சியகத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் உணவு விடுதியில் சுவையான உணவுகளை ஏற்பாடு செய்தார். வசந்த விழாவின் சிறப்பு உணவான தாம்பரின் உணவை அங்கே உண்டு மகிழ்ந்தோம். பின், உடற்களைப்பையும் பொருட்படுத்தாமல், அரண்மனைப் பகுதிகள் அனைத்தையும் சுற்றிப் பார்த்தோம்.

பின்னர், அங்கிருந்து பெய்ஜிங்கின் பழைய வீதியான கூதொங் வீதிக்குச் சென்று பண்டைக்கால வீடுகளைக் கண்டு மகிழ்ந்தோம். கூதொங் என்ற வார்த்தை 700 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் நுழைந்த மங்கோலிய வார்த்தைகளுள் ஒன்றாகும். கூதொங் என்ற வார்த்தையின் பொருள் தண்ணீர்க் கிணறு என்பதாகும். ஆனால், கூதொங் என்றாலே குறுகிய வீதி என்றே தற்போது நினைக்கப்படுகிறது. யுவான் வம்சக் காலத்தில் (கி.பி. 1271-1368) உருவாக்கப்பட்ட கூதொங் வீடுகளில் பெரும்பாலானவை போரில் அழிக்கப்பட்டன. தற்போது காணப்படும் வீடுகளில் பல, மிங்(1368-1644) மற்றும் சிங்(1644-1911) வம்ச காலங்களில் கட்டப்பட்டதாகும். சீனாவின் ஷேக்ஸ்பியர் என அழைக்கப்படும் குவென் ஹான்சிங், யுவான் வம்ச காலத்தில் இங்கேதான் வாழ்ந்திருக்கின்றார். பின்னர், பெய்ஜிங்கின் முக்கிய இடங்கள் சிலவற்றை பார்த்த மன நிறைவுடன் திரும்பினோம்.
பெய்ஜிங்கிலிருந்து எஸ்.செல்வம், எஸ்.பாண்டியராஜன் மற்றும் என். பாலக்குமார்.