• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் ஜுன் திங்கள் 28ஆம் நாள்
  2011-06-29 10:46:57  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜுன் திங்கள் 28 ஆம் நாள் எங்களுடைய சீனப் பயணத்தின் 9வது நாளாகும். இன்று காலையில், பெய்ஜிங் நகரின் வடக்குப் பகுதியில் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சீனாவின் மிங் வம்ச பேரரசர்களின் கல்லறைப் பகுதிக்கு நண்பர் கிளிட்டசுடன் சென்றோம். கி.பி.1368 முதல் 1644 ஆம் ஆண்டு வரை சீனாவை ஆண்ட மிங் வம்சத்தின் 14 பேரரசர்களில் 13 பேரரசர்களின் கல்லறை இங்கே அமைக்கப்பட்டுள்ளது. பெங்சுயி கோட்பாடுகளின் அடிப்படையில், இவ்விடம் தேர்வு செய்யப்பட்டு கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், சூசாய்ஹோ என்னும் பேரரசரின் கல்லறைப் பகுதியை பார்வையிட்டுவிட்டு, உலக அதிசயங்களுள் ஒன்றான பெருஞ்சுவரைப் பார்க்கச் சென்றோம். சீனாவில் பயணம் மேற்கொண்ட நேயர்களில் எவரும் இதுவரை பார்த்திராத பகுதியான ஜோயாங் பெருஞ்சுவர் பகுதியை அடைந்தோம். செங்குத்தாக, ஓரடி அகலமுள்ள பெரும் படிக்கற்களாக அமைக்கப்பட்டிருக்கும் பெருஞ்சுவரில் ஏறுவது சற்றே சவால் மிக்கதாக இருந்தது. 7 கண்காணிப்புக் கோபுரங்களைக் கடந்து, அப்பெருஞ்சுவர்ப் பகுதியின் அதிகபட்ச உயரத்தைப் பார்த்துவிட்டு திரும்பினோம்.

பின்னர், பட்டுப்புழுக் கூட்டிலிருந்து பட்டுத் துணி தயார் செய்யப்படும் முறை மற்றும் சிப்பியிலிருந்து முத்தைப் பிரித்தெடுத்து, முத்து மாலை உருவாக்கப்படும் முறை ஆகியவற்றை கண்டுகளித்துவிட்டு, 2008 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற பறவைக் கூடு உள்ளிட்ட விளையாட்டு மையங்கள் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். அங்கே ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனர். மகிழ்வுடன் சிறிது நேரம் கழித்தபின், தேசிய விளையாட்டு மையத்தின் பக்கவாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மையம் ஒன்றில், சீன முறைப்படி எங்களுக்கு மசாஜ் செய்யப்பட்டது. கைகளைப் பார்த்து, திபெத்திய மருத்துவர் ஒருவர் எங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். மசாஜ் செய்யப்பட்டதன் மூலம், பெருஞ்சுவரில் ஏறியதால் ஏற்பட்ட உடல்வலி சற்றே குறைந்தது.

இன்று முழுதும், நீண்ட நேரம் நடந்து, பல இடங்களைப் பார்த்ததால் எங்களுக்கு ஏற்பட்ட களைப்பு, திரு.தமிழன்பன் தம்பதியினர் வழங்கிய இரவு விருந்து மற்றும் நல்ல உபசரிப்பு மூலம் முற்றாக நீங்கியது.

நன்றி நேயர்களே..

பெய்ஜிங்கிலிருந்து என்.பாலகுமார், எஸ்.செல்வம், எஸ்.பாண்டியராஜன்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040