

ஜுன் திங்கள் 29 ஆம் நாள் எங்களுடைய சீனப் பயணத்தின் பத்தாவது நாளாகும். இன்று காலையில் சீன வானொலி நிலையத்திற்கு நண்பர் கிளிட்டசுடன் சென்றோம். அங்கே சீன வானொலிப் பணியாளர்கள் அனைவரும் எங்களை அன்புடன் வரவேற்றனர். சிறிது நேர உரையாடலுக்குப் பின், சீன வானொலி துணை இயக்குநர் Ma bo hui, வடகிழக்காசிய மற்றும் தெற்காசிய ஒலிபரப்பு மையத்தின் துணைத் தலைவர் Sun Jianhe, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற அலுவலகத்தின் துணைத் தலைவர் Li Fu Sheng, நேயர்கள் தொடர்புத் துறைத் தலைவர் Shi Li அம்மையார் மற்றும் தமிழ்ப்பிரிவுத் தலைவர் கலையரசி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்ட வரவேற்பு விழா ஒன்றில் கலந்து கொண்டோம். அவ்விழாவின்போது, மன்றச் செயல்பாடுகள் பற்றி சீன வானொலி பொறுப்பாளர்களுடன் பல்வேறு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பின்பு, கடந்த கருத்தரங்கில் அறிவித்தவாறு, சீன வானொலி வரலாற்றில் முதன்முறையாக, நேயர் மன்ற செயல்பாடுகள் தொடர்பாக www.critamilclub.com எனும் இணையதளம், சீன வானொலி துணை இயக்குநரால் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பின்னர், வான்ஷாங் என்னும் உணவு விடுதியில் சீன வானொலிப் பணியாளர்கள் கூட்டாக அளித்த விருந்தில் கலந்து கொண்டோம். தமிழ்ப்பிரிவின் தற்போதைய பணியாளர்களுடன், சுந்தரன், தமிழ்ச்செல்வம், மலர்விழி அம்மையார் கலைமணியின் துணைவியார் மற்றும் வாணி அம்மையாரின் மகன் ஆகியோரும் இதில் கலந்து சிறப்பித்தனர். மதிய உணவிற்கு பின், மீண்டும் சீன வானொலி நிலையத்திற்கு திரும்பினோம். நேயர் தொடர்புத் துறைத் தலைவர் ஷி லி அம்மையாரை சந்தித்து சுமார் அரை மணி நேரம் உரையாடி மகிழ்ந்தோம். பின், அத்துறைப் பணியாளர்களுடன் கலந்துரையாடிவிட்டு, மைக்கேலுடன் கடைத்தெருவிற்கு புறப்பட்டோம்.
சீன வானொலி நிலையத்திலிருந்து எஸ்.செல்வம், எஸ்.பாண்டியராஜன் மற்றும் என்.பாலக்குமார்.