• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் ஜுன் திங்கள் 30 ஆம் நாள்
  2011-07-01 15:05:27  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜுன் திங்கள் 30 ஆம் நாள் எங்களின் சீனப் பயணத்தின் 11வது நாளாகும். இன்று காலையில் நண்பர் சிவகாமியுடன் இணைந்து, பெய்ஜிங்கின் சில காட்சியிடங்களைக் கண்டு களித்தோம். முதலில், சீனாவின் முதல அரசுத் தலைவர் மா சே துங் அவர்களின் நினைவகத்திற்குச் சென்றோம். 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 9 ஆம் நாள் காலமான மா சே துங் அவர்களின் உடலை அருகில் கண்டு மரியாதை செலுத்தினோம். நவசீனா உருவாகக் காரணமாக இருந்த சீனாவின் தலைவர் மா சே துங் அவர்களின் உடலை, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டம் நாளை நடைபெறவிருக்கும் வேளையில் கண்ட காட்சி, எப்போதும் எங்கள் நெஞ்சில் தங்கியிருக்கும்.

பின்னர், பெய்ஜிங்கின் ரெயில்வே அருங்காட்சியகம் சென்றோம். வெளிப்புறக் கட்டிடத்தின் தோற்றம், அக்கால தொடர் வண்டி நிலையம் போல அமைக்கப்பட்டிருப்பினும், உள்ளே 3 மாடிகளில் சீனாவின் தொடர் வண்டி போக்குவரத்து அடைந்த மாபெரும் வளர்ச்சியை சித்தரிக்கும் வகையில் பிரமாண்ட அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில், சுமார் 100 ஆண்டுகள் பழமையான பல்வேறு பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அக்காலத்திய தொலைபேசி, இருப்புப் பாதையை அமைப்பதற்கான ஒப்பந்தம், பாதையை அமைக்க நிலங்களை கையகப்படுத்துவதற்கான உடன்படிக்கை, இருப்புப் பாதைகள் மூலம் சீனாவின் தொழில் துறையை வளமடையச் செய்ய சன்-யாட்-சென் உருவாக்கிய சீன வரைபடம், 1907 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை, சிக்னல் விளக்கு, ரெயில்வே கல்லுரியிலிருந்து 1900 ஆம் ஆண்டு பெறப்பட்ட பட்டதாரிச் சான்று, கடிகாரம், எடையளக்கும் கருவி, நிலக்கரி வாங்கப்பட்டதற்கான ரசீது, சிக்னல் கொடி,

தொழிலாளர்களின் அடையாள அட்டை போன்றவற்றை காண முடிந்தது. சீனாவின் முதலாவது இருப்புப் பாதை போக்குவரத்து 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ஆம் நாள் துவக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாட்களில் அரசுத் தலைவர் மா சே துங், தலைமை அமைச்சர் சூ யென் லாய் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்த நிழற்படங்களைக் காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது. அன்றி, சிங்காய்-திபெத் இருப்புப் பாதை போக்குவரத்தை துவக்கி வைக்க சீன அரசுத் தலைவர் பயன்படுத்திய கத்திரிக்கோலையும் பார்த்து மகிழ்ந்தோம்.

முதலாவது தளம் மற்றும் இரண்டாவது தளம் ஆகியவற்றில் சீன இருப்புப் பாதைத் துறையின் நவீன வளர்ச்சியின் போக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 350 கி.மீ.வேகத்தில் பெய்ஜிங்-ஷாங்காய் நகரங்களுக்கிடையே அதிவிரைவு தொடர் வண்டி நாளை தொடங்க உள்ள நிலையில், அவ்வண்டியின் மாதிரி வடிவம் அங்கே வைக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு, கி.பி.1406 ஆம் ஆண்டு முதல் 1420 ஆம் ஆண்டு வரையிலான யாங்லி பேரரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட சொர்க்கப் பூங்கா சென்றோம். தாவ் மதக் கட்டிடங்களைக் கொண்டிருக்கும் இவ்விடத்திற்கு நல்ல அறுவடை வேண்டி நடத்தப்படும் விழாவிற்கு மிங் மற்றும் சிங் வம்ச பேரரசர்கள் ஆண்டுதோறும் இங்கே வந்திருக்கின்றனர். 16 ஆம் நுற்றாண்டில்,பேரரசர் ஜியாஜிங் என்பவரால் சொர்க்கக் கோயில் என இவ்விடத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. இரண்டாம் அபினிப் போரின்போது பிரிட்டன் மற்றும் பிரெஞ்சுக் கூட்டுப் படைகளால் கையப்படுத்தப்பட்ட சொர்க்கப் பூங்காவில் சில சேதங்கள் ஏற்பட்டன. பின்னர், 1918 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக முதன்முறையாக திறந்துவிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஐ.நா.வின் உலக மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட இப்பூங்கா, கட்டிடக் கலையின் உன்னத அடையாளமாக கருதப்படுகிறது. 27 இலட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்டமாக விரிந்து பரந்திருக்கும் சொர்க்கப் பூங்கா, பெய்ஜிங் நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பண்டையப் பூங்கா ஒன்றில் காலார நடந்த மனநிறைவுடன் இன்றைய பயணத்தை முடித்துக் கொண்டு நாங்கள் கிளிட்டஸ் வீடு திரும்பினோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040